Skip to main content

கோபமாக இருந்தது ஏன்? கெயில் விளக்கம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

Chris Gayle

 

மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியின் போது, பஞ்சாப் அணி வீரர் கெயில் களத்தில் கோபத்துடன் நடந்து கொண்டது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

 

13-வது ஐ.பி.எல் தொடரின் 36-வது லீக் போட்டியில், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மும்பை அணி, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 176 ரன்கள் குவித்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி,, 20 ஓவரின் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுக்க, போட்டி சமநிலையில் முடிந்தது. 

 

பின் வெற்றியைத் தீர்மானிக்க நடந்த சூப்பர் ஓவரும் சமநிலையில் முடிய, மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் அதிரடி வீரரான கெயில், நேற்றைய போட்டியின் போது களத்தில் கோபமாக நடந்து கொண்டார். இந்நிலையில், கெயில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

 

"களத்தில் பதட்டமாக இல்லை. ஆனால், நேற்றைய ஆட்டத்தின் போக்கு சற்று கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இது கிரிக்கெட்டில் நடப்பது, இயல்பானதுதான். என்னைப் பொறுத்தவரை ஆட்டநாயகன் ஷமிதான். ரோகித் ஷர்மா மற்றும் டி காக்கிற்கு எதிராக பந்து வீசி 6 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவது என்பது பெரிய விஷயம்". இவ்வாறு கெயில் பேசினார். 

 

 

 

Next Story

"டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" - திரைப் பிரபலங்களுடன் போட்டி போடும் கிறிஸ் கெயில்

Published on 15/10/2022 | Edited on 15/10/2022

 

indian popular celebrities and international retired cricketers joins together for super 10

 

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள்,  சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும்,  சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு, கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிறிஸ் கெயில் ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய திரை நட்சத்திரங்கள், ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து 10 ஓவர் கொண்ட போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகள் டிசம்பர் 2022 இல் பெங்களூருவில் 2 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்த லீக் போட்டிகளில் தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு துறையைச் சார்ந்த நடிகர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இணைந்து விளையாடவுள்ளனர்.
இப்போட்டி குறித்து மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் கூறுகையில்.., “உலகம் முழுவதும் உள்ள எனக்கு பிடித்த கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் இந்திய திரைத்துறை பிரபலங்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சி. இந்த போட்டி ‘டி10’ வடிவில் அமைக்கப்பட்டிருப்பதால் மிகப்பெரிய பொழுதுபோக்கை அளிக்குமென்பது உறுதி, டிசம்பர் எப்போது வருமென ஆவலாக உள்ளேன்" என பேசினார்.  

 

மேலும் இந்த போட்டிகள் குறித்து கிச்சா சுதீப் கூறுகையில், “சூப்பர் டி10 லீக்  கிரிக்கெட் என்பது, திரைத்துறை மற்றும் கார்ப்பரேட் துறையில் உள்ள நண்பர்களுடனும், கிரிக்கெட் வீரர்களுடனும் இணைந்து விளையாடுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த விளையாட்டுகள் எங்களுள் உள்ள மற்றுமொரு பக்கத்தை எங்கள் ரசிகர்களுக்கும் வெளிப்படுத்தும், இது மிகப்பெரிய பொழுதுபோக்கை ரசிகர்களுக்கு வழங்கும்.

 

இப்போட்டிகள் குறித்து, சூப்பர் 10 கிரிக்கெட்டின் நிறுவனர் மற்றும் இயக்குநரான தினேஷ் குமார் கூறுகையில், “நாங்கள் இந்த ‘கிரிக்கெட்டைன்மென்ட்’ பொழுதுபோக்கு கான்செப்ட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வருகிறோம். இது முதல் பதிப்பாகும், மேலும் பார்வையாளர்களுக்கு இந்த போட்டிகள் மூலம் மிகச்சிறந்த பொழுதுபோக்கை  வழங்க உறுதியளித்துள்ளோம். கிரிக்கெட் மீது உலகளாவிய  அளவில் ஆர்வத்தை வலுப்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். பொழுதுபோக்கு மற்றும் கிரிக்கெட் துறையில் மிகப்பெரிய ஆளுமைகளை இந்த போட்டிகளில்  கொண்டுவரவுள்ளோம். உலகளவில் அனைத்து கிரிக்கெட் பிரியர்களுக்கும் ஒரு அற்புதமான தொடர் விளையாட்டு போட்டிகளை  வழங்க ஆவலாக உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.  

 

Next Story

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த கிறிஸ் கெயில், ரஸ்ஸல்!

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

gayle -russell

 

இந்தியாவில் ‘கோவாக்சின்’, ‘கோவிஷீல்ட்’ என்ற இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு மட்டுமில்லாமல் வங்கதேசம், ஜிம்பாப்வே உள்ளிட்ட பல நாடுகளுக்கும் இந்தியா கரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.

 

அந்த வகையில் மேற்கிந்திய தீவு நாடுகளில் ஒன்றான ஜமைக்காவிற்கு, இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. அதனைத் தொடர்ந்து ஜமைக்காவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கிறிஸ் கெயில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "ஜமைக்காவிற்கு தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடி, இந்திய அரசு, இந்திய மக்கள் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதற்காக நாங்கள் நன்றி பாராட்டுகிறோம்" என கூறியுள்ளார்.

 

அதேபோல் ஆண்ட்ரே ரஸ்ஸல் வெளியிட்டுள்ள வீடியோவில், "பிரதமர் மோடி மற்றும் இந்திய தூதரகத்திற்குப் பெரிய நன்றி சொல்ல விரும்புகிறேன். தடுப்பூசிகள் இங்கே உள்ளன. நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உலகம் இயல்பு நிலைக்குச் செல்வதை நான் காண விரும்புகிறேன். ஜமைக்கா மக்கள் அதை மிகவும் பாராட்டுகிறார்கள். இந்தியாவும் ஜமைக்காவும் இப்போது சகோதரர்கள்" என தெரிவித்துள்ளார்.