Skip to main content

ஐபிஎல் தொடரில் சிறந்த வீரர் இவர் தான்! காம்பீர் கைக்காட்டும் இந்திய வீரர்!

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 

gautam gambhir

 

ஐபிஎல் தொடரில் சமகாலத்தில் சிறந்த வீரர் என்றால், அது கே.எல்.ராகுல்தான் என இந்திய அணியின் மூத்த வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

 

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த எந்த ஆண்டுகளைப் போலும் இல்லாமல் பஞ்சாப் அணியின் மீது நடப்புத் தொடரில் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பஞ்சாப் அணியை இந்திய வீரர் கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார். இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி ஒரு வெற்றியும், ஒரு தோல்வியும் கண்டுள்ளது. 

 

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் நடுவரின் தவறான முடிவால் அவ்வணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.  அடுத்து நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 97 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தோல்வியில் இருந்து மீண்டது. அப்போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாடி 69 பந்துகளில் 132 ரன்களைக் குவித்தார். மேலும், இது ஐபிஎல் தொடரில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ரன்களாகப் பதிவாகியுள்ளது. அவருக்குப் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் வேளையில், இந்திய அணியின் மூத்த வீரர் கவுதம் காம்பீர் கே.எல்.ராகுல் குறித்துப் பேசியுள்ளார்.

 

அதில் அவர், "பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி கே.எல்.ராகுலிற்கு சரியான போட்டியாக அமைந்தது. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில தரமான 'ஷாட்ஸ்'களை அடித்து, அவரது திறமையை நிரூபித்திருக்கிறார். இயான் பிஷப் கூறிய கருத்தை நான் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். சமகாலத்தில், ஐபிஎல் போட்டிகளில் சிறந்த வீரர் என்றால் அது கே.எல்.ராகுல்தான்" எனக் கூறினார்.  

 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரரான இயான் பிஷப் கே.எல்.ராகுல் குறித்துப் பேசுகையில், "களத்தில் அவரை நிலைநிறுத்திக்கொண்ட விதம் சிறப்பாக இருந்தது. முதல் 50 ரன்களை எடுக்கும் வரை, களத்தில் முழுமையாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்தது தெரிந்தது. இந்தப் போட்டி அவரை சிறந்த பேட்ஸ்மேனாக நிரூபித்துள்ளது" என்றார்.

 

 

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

கவுதம் கம்பீருக்கு கரோனா!

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

gautam gambHir

 

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனா பாதிப்பு, தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும்  கரோனா உறுதியாகியுள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில் கரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கம்பீர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.