ஜெர்மனி தலைநகர் பெர்லினில் யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று (14.07.2024) இரவு நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. அப்போது ஸ்பெயின் அன்னிக்கு நிக்கோ வில்லியம்ஸ் மைக் ஓயர்சபால் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர். அதே சமயம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர்களுக்குள் ஒருவரான பாலிமர் மட்டுமே 1 கோல் அடித்தார். இதன் மூலம் யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் யூரோ கால்பந்து தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி ஸ்பெயின் சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த 1964, 2008, 2012 மற்றும் நடப்பு (2024) யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டத்தைப் பெற்றுள்ளது அதே சமயம் இங்கிலாந்து அணி இதுவரையில் பெரிய கால்பந்து தொடர்களில் கோப்பையை வெல்ல முடியாத 58 ஆண்டுக்கால சோதனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் யூரோ கால்பந்து தொடரில் 7 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்ற முதல் அணி என்ற சாதனையையும் ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை ஸ்பெயின் அணி பதிவு செய்துள்ளது. இந்த தொடரின் சிறந்த இளம் வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியின் 16 வயது வீரர் லாமின் யாமல் வென்றார். அதே போன்று தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஸ்பெயின் அணியில் ரோட்ரி வென்றார்.