ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.
2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.
பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.