Skip to main content

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? - ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம்!

Published on 21/12/2020 | Edited on 21/12/2020

 

cricket australia

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், இரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி, சிட்னி மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

 

இந்நிலையில், சிட்னியில் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், ஆஸ்திரேலியாவின் சில மாநிலங்கள், சிட்னியிலிருந்து தங்கள் மாநிலத்திற்குள் வரத் தடை விதித்து வருகின்றன. மேலும், சில மாநிலங்கள், சிட்னியிலிருந்து வருபவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றன. எனவே, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, திட்டமிட்டபடி சிட்னியில் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட், சிட்னியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், "மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டரை வாரங்களுக்கு மேல் உள்ளது, இது சிட்னியின் பொதுச் சுகாதார நிலைமையை மதிப்பிடுவதற்கான நேரத்தை எங்களுக்கு வழங்கும்" என்றும் "நாங்கள் எங்கள் அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யவில்லை, சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் போட்டியை விளையாடுவதே எங்கள் விருப்பமாக உள்ளது." எனவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

 

Next Story

வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; 6 பேர் பலி

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Mall incident in australia

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி பகுதியில், மிகப்பெரிய பிரபல தனியார் வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்ட அந்த வணிக வளாகத்தில் இருந்த மக்கள் அங்கிருந்து அலறி அடித்துக்கொண்டு ஓடினர். மர்ம நபர் ஒருவர் நடத்திய இந்த துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பான காட்சிகளை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், பலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த வணிக வளாகத்தில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக அவசர அவசரமாக போலீசாரால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

Mall incident in australia

வணிக வளாகத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான பதிவுகளில் வணிக வளாகத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதையும், போலீசார் மற்றும் அவசர சேவை வாகனங்கள் அப்பகுதிக்கு விரைவதையும் காண முடிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரபல தனியார் வணிக வளாகத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

WTC: மூன்றாம் நாள் ஆட்டம் முடிவு; முன்னிலையில் ஆஸ்திரேலியா

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

WTC: Third day's play ends; In the presence of Aussie

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

 

தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்தாலும் ஸ்டீவென் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக ஆடி அணியின் ஸ்கோரை ஏற்றினர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ட்ராவிஸ் ஹெட் 163 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 121 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்களையும் முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்களையும் ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

 

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி தொடர் தடுமாற்றத்துடனே ஆடியது. முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 89 ரன்களையும் ஷர்துல் தாக்கூர் 51 ரன்களையும் ரவீந்திர ஜடேஜா 48 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய அணியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்களையும் மிட்சல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், கேமரூன் க்ரீன் தலா 2 விக்கெட்களையும் நேதன் லயன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் முன்னிலை பெற்றது.

 

தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வரும் ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 123 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக லபுசேன் 41 ரன்களையும் ஸ்டீவென் ஸ்மித் 34 ரன்களையும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். தற்போது ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.