சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரின்போது, இனவெறி சர்ச்சை எழுந்ததது. இரு அணிகளும் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய பார்வையாளர்கள் சிலர், இந்திய வீரர்கள் பும்ராவையும், சிராஜையும் இன ரீதியிலான சொற்களால் தாக்கினர்.
இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் புகாரளித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் இதுதொடர்பாக விசாரணையில் இறங்கியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய வீரர்கள் மீது இனவெறி தாக்குதல் நடந்தது உண்மைதான் என சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் உறுதிசெய்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், ‘இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை டிக்கெட் விவரங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை கொண்டு கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு நீண்டகால தடை விதிக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளது.
மேலும் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது, காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.