16 ஆவது ஐபிஎல் போட்டித் தொடரின் 52 ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 214 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 95 ரன்களையும் சாம்சன் 66 ரன்களையும் குவித்தனர். ராஜஸ்தான் அணியில் புவனேஷ்வர் குமார், மேக்ரோ ஜெனசன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 55 ரன்களையும் ராகுல் திரிபாதி 47 ரன்களையும் அன்மோல்ப்ரீத் சிங் 33 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் சாஹல் 4 விக்கெட்களையும் அஷ்வின், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக க்ளென் பிலிப்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இவர் 7 பந்துகளில் 3 சிக்ஸர் ஒரு பவுண்டரி உட்பட 25 ரன்களைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான் அணியின் ஜாஸ் பட்லர் கடைசி 4 போட்டிகளில் 124(64), 35(28), 54(22), 95(59) என 308 ரன்களைக் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் சாம்சன் மற்றும் பட்லர் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 138 ரன்களை சேர்த்துள்ளனர். இது ராஜஸ்தான் அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும். முன்னதாக 2021 ஆம் ஆண்டு பட்லர் மற்றும் சாம்சன் இணைந்து 150 ரன்களைக் குவித்ததே அதிகபட்சமாகும்.
இன்றைய போட்டியில் ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் சாஹல் 183 விக்கெட்களை வீழ்த்தி ப்ராவோ உடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். 174 விக்கெட்களுடன் சாவ்லா இரண்டாவது இடத்தில் உள்ளார்.