இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மொஹாலியில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்டிக் பாண்டியாவின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களை குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்டிக் பாண்டியா 30 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உட்பட 71 ரன்களை குவித்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை 19.2 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மா நாங்கள் சரியாக பந்து வீசவில்லை என்றார்.
இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்த வரை தலையாய பிரச்சனையாக இருப்பது பந்துவீச்சு மட்டுமே. முதல் போட்டியில் இமாலய இலக்கை நிர்ணயித்தும் எதிரணியை 19 ஓவர்களில் வெற்றி பெற வைத்தனர் இந்திய பவுலர்கள். எனினும் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பும்ரா விளையாடுவார் என தெரிகிறது.
பும்ரா விளையாடுவது குறித்து கருத்து தெரிவித்த ஆகாஷ் சோப்ரா, “ஒரு பந்து வீச்சாளரை அணிக்குள் கொண்டு வருவதால் மட்டும் ஒட்டு மொத்த நிலைமையும் மாறிவிடாது” என கூறியிருந்தார். ஆசிய கோப்பையில் இருந்து தொடர்ச்சியாக சரியாய் பந்து வீசாத சாஹலுக்கு பதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கும்.
இரு அணிகளை பொறுத்த வரை எந்த மாற்றமும் இருக்காது என எதிர் பார்க்கப்படுகிறது.
இந்தியா அணி உத்தேச வீரர்கள்: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஷர் படேல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.
ஆஸ்திரேலியா அணி உத்தேச வீரர்கள்: ஆரோன் பிஞ்ச், கேமரூன் கிரீன், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் ஒயிட், மேத்யூ வேட், கம்மின்ஸ், ஹேசில்வுட், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா.