Skip to main content

மலிங்கா இடத்தை இவர் நிரப்பிவிடுவார்... - பிரட் லீ பேச்சு!!! 

Published on 19/09/2020 | Edited on 19/09/2020

 

brett lee

 

 

கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடர் இன்று இரவு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதுகின்றன. இரு அணிகளிலும் வழக்கமாக ஆடும் முன்னணி வீரர்கள் சிலர் விலகியுள்ளதால் அந்த இடத்தை யாரைக் கொண்டு நிரப்புவது என அணி நிர்வாகங்கள் யோசித்து வருகின்றனர்.

 

சென்னை அணியில் நட்சத்திர வீரரான ரெய்னாவும், முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கும் தங்களுடைய சொந்த காரணங்களுக்காக அணியில் இருந்து விலகியுள்ளனர். அதேபோல, மும்பை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இலங்கையைச் சேர்ந்த மலிங்கா விலகியுள்ளார். மலிங்காவின் விலகல் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மலிங்காவிற்குப் பதிலாக அந்த இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பட்டின்சன் களமிறங்க இருக்கிறார்.

 

அந்த இடத்தில் மாற்று வீரரைக் களமிறக்கினாலும், ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியது, இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி அணியின் வெற்றியை உறுதி செய்வது என மலிங்காவின் கடந்த கால பங்களிப்பிற்கு சமமான பங்களிப்பு மாற்று வீரரிடம் இருந்து கிடைப்பது கேள்விக்குறியே. இந்நிலையில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரும், ஐபிஎல் ஒளிபரப்பு குழுவினரில் ஒருவருமான பிரட் லீ இது தொடர்பாக தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "மலிங்காவின் இடத்தை பும்ராவால் நிரப்ப முடியும். நான் பும்ராவின் தீவிர ரசிகன். தனக்கென்று தனியான ஒரு பாணியை வைத்திருக்கிறார். அவரால் இரண்டு வகையிலும் பந்தை சுழலச் செய்ய முடியும். புதிய பந்தில் அற்புதகமாக பந்து வீசக்கூடியவர். அவர் பழைய பந்தில் பந்து வீச வேண்டுமென்று நான்  நினைக்கிறேன். அதன் மூலம் இறுதிக்கட்ட ஓவர்களில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். பும்ரா தொடர்ச்சியாக யார்க்கர் வீசக்கூடியவர். எல்லா பந்துவீச்சாளராலும் தொடர்ச்சியாக இதை செய்ய முடியாது" எனக் கூறினார்.

 

 

Next Story

MI vs CSK: எதிர்பார்ப்பைக் கிளப்பிய "எல் கிளாசிக்கோ"

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
MI vs CSK: An "El Clasico" that sparks anticipation

ஐபிஎல்2024 ஆட்டங்கள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 27 லீக் ஆட்டங்கள் முடிந்து பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் 4 இடங்களைப் பிடிக்க அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. பெங்களூரு அணி மட்டும் அனைத்து ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் என்கிற நிலை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆப் செல்ல பிரகாசமான வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியும் குஜராத்துடன் தோற்றிருப்பதால், ஐபிஎல் 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதற்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டும் வகையில் மும்பை மற்றும் சென்னை அணிகள் இன்று மோதவுள்ளன. இந்த இரண்டு அணிகளும் மோதும் இன்றைய ஆட்டம் “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது. எந்த வகையான விளையாட்டாக இருந்தாலும் பொதுவாக இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் போட்டியானது “ எல் கிளாசிக்கோ “ என்று அழைக்கப்படும். 

இரு அணிகளும் இதுவரை 36 முறை எதிர்த்து விளையாடியுள்ளனர். அதில் 20 முறை மும்பை அணியும், 16 முறை சென்னை அணியும் வென்றுள்ளனன. மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகள் இதுவரை 11 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவரை இரு அணிகளும் 4 முறை சந்தித்துள்ளன. அதில் மூன்று முறை மும்பை அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது. 2013, 2015, 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இறுதி ஆட்டங்களில் மும்பை அணியும், 2010 இல் நடந்த இறுதி ஆட்டத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன.

உலக கிரிக்கெட்டில் இந்தியா - பாகிஸ்தான், இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஆட்டங்கள் எந்த அளவு விறுவிறுப்பைத் தருமோ அந்த அளவு சென்னை - மும்பை அணிகள் மோதும் ஆட்டங்களிலும் விறுவிறுப்பு இருக்கும்.

ஐபிஎல் 2024 இன் தொடக்கத்தில் இருந்தே சென்னை அணி சிறப்பாக ஆடி வருகிறது. மூன்று ஆட்டங்களில் வென்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருந்து வருகிறது. கேப்டன்சி பிரச்சினை, அணிக்குள் பிளவு என காரணங்கள் கூறப்பட்டு வந்த மும்பை அணி, முதல் மூன்று ஆட்டங்களில் தோற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றது. ஆனால், கடந்த இரண்டு ஆட்டங்களாக சிறப்பாக விளையாடி புள்ளிகள் பட்டியலில் தற்போது 7 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சம பலத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்று முதல் 4 இடங்களில் தொடர்ந்து நீடிக்க சென்னை அணியும், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களுக்குள் முன்னேற மும்பை அணியும் முயற்சிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் சுவாரசியத்திற்குக் குறை இருக்காது. போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்கவுள்ளது.

Next Story

உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது - பும்ரா ஓபன் டாக்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Don't Let Ego Be Your Barrier Bumrah Open Talk

இந்த ஆட்டத்தில் உங்களுக்கு ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது என்று நேற்றைய ஆட்டம் குறித்து பும்ரா கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024இன் 25ஆவது லீக் ஆட்டம் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச தீர்மானித்தார். முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு பும்ரா பெரும் தலைவலியாக இருந்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கோலியை அவுட்டாக்கி பெங்களூரு ரசிகர்களை அமைதியாக்கினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 8 ரன்னிலும், மேக்ஸ்வெல் மீண்டும் டக் அவுட் ஆகியும்  ஏமாற்றினர். கேப்டன் டு பிளசிஸ் 61 ரன்களும், பட்டிதார் 50, ரன்களும் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆனால் மீண்டும் வந்த பும்ரா விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான 53 ரன்கள் கை கொடுக்க பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார். மத்வால், கோபால், கோயட்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

பின் 197 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை சிறப்பான துவக்கம் தந்தனர். ஆடுகளத்தில் ஸ்விங்கிங் கண்டிஷன் சிறப்பாக செயல்பட்ட முதலிரண்டு ஓவர்களை பொறுமையாகக் கையாண்ட இருவரும் மூன்றாவது ஓவரிலிருந்து ஆட்டத்தை மும்பை வசப்படுத்தினர். ரோஹித் மற்றும் இஷானின் பேட்டிலிருந்து மைதானத்தின் பல பக்கங்களுக்கும் பவுண்டரிகளும், சிக்சர்களும் பறக்கத் தொடங்கியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்தனர். மிகவும் சிறப்பாக ஆடிய இஷான் அரைசதம் கடந்து 69 ரன்களுக்கு வீழ்ந்தார்.

அடுத்து வந்த சூர்யா ரோஹித்துடன் இணைந்து ருத்ர தாண்டவம் ஆடினார். சூர்யாவின் பேட்டிலிருந்து பட்டாசு சிதறுவது போல பவுண்டரி மற்றும் சிக்சர்கள் வந்தது. 17 பந்துகளிலேயே அரை சதம் கடந்தார் சூர்யா. ரோஹித் 38 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யா 52 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த ஹர்திக்கும் அதிரடியில் இறங்க 15.3 ஓவர்களிலேயே மும்பை அணி வெற்றி இலக்கை அடைந்தது.  இதன் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு அணி தரப்பில் வைசாக், தீப், வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகள் சாய்த்த பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

பின்னர் பரிசளிப்பு விழாவின் போது பேசிய பும்ரா, “ நான் இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு குறித்து மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் எப்போதும் என்னால் ஐந்து விக்கெட்டுகள் எடுக்க முடியும் என்று சொல்ல முடியாது. மைதானத்தை விரைவில் கணித்து என்னுடைய பந்து வீச்சை அதற்கு ஏற்றாற்போல் மாற்றினேன். இங்கே உஙளுக்கு அனைத்துவிதமான திறமைகளும் வேண்டும். அதுபோல தான் என்னை தயார்படுத்தியுள்ளேன். யார்க்கர் மட்டுமே உங்களுக்கு எல்லா நாளும் உதவாது. எனக்கும், நான் சரியாக பந்து வீசாத கடினமான நாட்கள் இருந்தது. அப்போது எங்கு தவறு இழைத்தேன் என வீடியோக்கள் உதவியுடன் தெரிந்துகொண்டேன். எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்திப்போக உங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். வலைப்பயிற்சியில் பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசி அவர்கள் என் பந்தை சிறப்பாக அடித்தால், எங்கு தவறு உள்ளது? அதை எப்படி சரி செய்ய வேண்டும் என சிந்தித்து, என்னை மீண்டும் மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்துவேன். எனக்கு நானே அழுத்தம் கொடுத்து என்னை தயார் செய்வேன். சில நேரங்களில் யார்க்கர், சில நேரங்களில் பவுன்சர் என சூழலுக்கு தகுந்தாற்போல் வீச பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக மைதானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும். நீங்கள் 145 கி.மீ வேகத்தில் வீசுபவராக இருக்கலாம், ஆனால் அது எல்லா சமயத்திலும் வேலை செய்யாது. மைதானத்தின் தன்மைக்கு ஏற்ப குறைந்த வேகத்தில் பந்து வீச வேண்டும் எனும் சூழல் வந்தால், அவ்வாறும் வீச வேண்டும். அதற்கு உங்கள் ஈகோ ஒரு தடையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு சின்ன சின்ன தயார்படுத்துதலும் உங்களை சிறப்பாக்கும். ஒரே ஒரு தந்திரம் மட்டும் வேலை செய்யாது. ஸ்டம்ப்புகளை குறிவைத்து துருவ வேட்டைக்கு செல்லுங்கள் ” என்று கூறினார்.