Skip to main content

சச்சினை கிண்டலடித்த ஆஸ்திரேலியா! - பதிலடி கொடுத்த ரசிகர்கள்..

Published on 24/04/2018 | Edited on 24/04/2018

கிரிக்கெட்டின் கடவுள் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களால் புகழப்படும் சச்சின் தெண்டுல்கரின் 45ஆவது பிறந்த தினம் இன்று. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஒரே நம்பிக்கையாக விளங்கிய சச்சின் தெண்டுல்கர், இன்றளவும் நேசிக்கவும், கொண்டாடவும்படுகிறார் என்பது யாவரும் அறிந்தது. 

 

 

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் ஃப்ளெமிங்கிற்கும் இதே நாளில்தான் பிறந்ததினம். அவரது 48ஆவது பிறந்ததினமான இன்று, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஓர் பதிவு போடப்பட்டிருந்தது. அதில், இன்று பிறந்தநாள் காணும் சச்சின் தெண்டுல்கரை, டேமியன் ஃப்ளெமிங் கிளீன் பவுல்டு ஆக்கும் வீடியோவை இணைத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் இந்த ஆணவமான ட்வீட்டை, சச்சின் ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

 

 

 

சச்சின் தெண்டுல்கரை எதிர்த்து பந்துவீசிய டேமியன் ஃப்ளெமிங், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வெறும் ஏழு முறை மட்டுமே அவரது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். அதேசமயம், 1998ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற கோக-கோலா கோப்பை தொடரில், சச்சின் தெண்டுல்கரின் புகழ்பெற்ற ‘பாலைவனப் புயல்’ ஆட்டத்தில் டேமியன் ஃப்ளெமிங்கின் பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிட்ட சச்சினை ஆஸ்திரேலியா மறந்திருக்காது என சச்சின் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.