Skip to main content

பாரா ஒலிம்பிக் போட்டி - 2024; இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம்!

Published on 06/09/2024 | Edited on 06/09/2024
Another gold medal for India on Paralympic Games 2024 

மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அதில் இந்தியா சார்பில் 84 பேர் கலந்துகொண்டு பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர்.

அதன்படி மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த நித்யஸ்ரீ சிவன் பேட்மிட்டன் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். அதோடு தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆடவர் உயரம் தாண்டுதல் டி64 பிரிவில் இந்திய வீரர் பிரவீன்குமார் தங்கம் வென்றுள்ளார். இவர் உயரம் தாண்டுதலில் 2.08 மீட்டர் தாண்டி தங்கப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 6 தங்கம்,  9 வெள்ளி 11 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று 14வது இடத்தில் உள்ளது. தற்போது தங்கம் வென்றுள்ள பிரவீன்குமார் கடந்த டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாரியப்பனுக்குப் பிறகு உயரம் தாண்டுதலில் பதக்கம் வெல்லும் இரண்டாவது இந்திய வீரர் பிரவீன்குமார் ஆவார்.