Skip to main content

சென்னை சறுக்கியது எங்கே? ஏமாற்றங்களும், எதிர்பார்ப்புகளும்... ஓர் அலசல்!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

 

dhoni

 

 

ஆண்டு தோறும் மார்ச் இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலோ இந்தியாவில் ஐ.பி.எல் திருவிழா தொடங்கிவிடும். இதுகுறித்தான எதிர்பார்ப்பு அவ்வருடத்தின் தொடக்கத்திலேயே, அனைவரிடமும் கரோனா வைரஸ் தொற்றை விட வேகமாக தொற்றிக்கொள்ளும். அணி நிர்வாகங்களும் தொடர்ச்சியான விளம்பரங்கள் மூலம் தங்களது அணி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பெரும் தீனியிடத் தவறுவதில்லை. இந்தாண்டும் வழக்கம் போல இவை அனைத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு, கரோனா காரணமாக ஐ.பி.எல் ஒத்திவைக்கப்பட்டது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதனையடுத்து கரோனா தொற்று குறைவாக உள்ள அமீரகத்தில் இப்போட்டியை நடத்த திட்டமிட்டு, பின் அதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் பி.சி.சி.ஐ வெளியிட்டது.

 

அமீரகத்தில் முகாமிட்டு அனைத்து அணிகளும் உற்சாகமாக தங்களைத் தயார்படுத்த ஆரம்பித்த வேளையில், சென்னை அணிக்கு மட்டும் சிக்கல்கள் எழ ஆரம்பித்தன. முதலில் ஒரு பந்துவீச்சாளர் மற்றும் உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், சென்னை அணி வீரர்கள் மட்டும் கரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்திற்குள் முடங்கியிருந்தனர். இதனால், சென்னை அணியின் முதற்கட்ட பயிற்சியானது தடைபட்டது. சூழலுக்குப் பொருந்த முடியாமல் சென்னை அணி வீரர்கள் தடுமாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.

 

முன்னணி வீரர்களான ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதும் சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இவ்விரு வீரர்களின் விலகலால் அணிக்குப் பெரிய அளவில் பாதிப்பில்லை என்று அணி நிர்வாகத்தால் முன்னர் கூறப்பட்டு வந்தாலும், அது ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை அணி நிர்வாகம் தற்போது அவதானித்திருக்கும்.

 

பல பின்னடைவுகள் இருந்தாலும், மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியை சென்னை அணி வெற்றியுடன் துவக்க, பரம எதிராளியான மும்பையை வீழ்த்தியது, துவக்கத்தில் எழுந்த தடைகளில் இருந்து  மீண்டு வந்தது என சென்னை அணி ரசிகர்கள் கூடுதல் உற்சாகமானார்கள். அவ்வெற்றி தந்த உற்சாகம் அடங்குவதற்குள் அடுத்தடுத்த தோல்விகள் கண்டு தற்போது அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. 13 வருட ஐ.பி.எல் வரலாற்றில், பங்கெடுத்த அனைத்து தொடர்களிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி முதல்முறையாக துவக்கச் சுற்றிலேயே வெளியேறுவது சென்னை அணி ரசிகர்களை வருத்தத்திற்கும், எதிரணி ரசிகர்களின் கிண்டல்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்கும் உள்ளாக்கியுள்ளது. 

 

சென்னை அணியின் தோல்விக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணங்களை முன்வைத்து வருகிறது. இவ்வருட ஐ.பி.எல் தொடர் அமீரகத்தில் நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானதுமே, பலரது கவனமும் சென்னை அணி மீதே திரும்பியது. 'மிதமான தட்பவெட்ப நிலை கொண்ட இடங்களில், வயது மூத்தவர்களைக் கொண்டு விளையாடிப் பழகிய சென்னை அணி அமீரகச் சூழலை இந்த வீரர்களைக் கொண்டு எப்படி எதிர்கொள்ளும்' என்ற கேள்வி எழுந்தது. இருந்தபோதிலும், அணி கேப்டன் தோனி மீது இருந்த அதீத நம்பிக்கை இக்கேள்விகளை எல்லாம் தவிடு பொடியாக்கியது. சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட தோனி, இனி எந்த நெருக்கடியும் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அவர் மீது ரசிகர்கள் கொண்ட அளவுக்கதிகமான எதிர்பார்ப்பே, களத்தில் தோனியை தடுமாற வைத்துவிட்டது. நடப்பு தொடரில் சென்னை அணி வெளிப்படுத்திய ஆட்டத்தை அடிப்படையாக வைத்து தோல்விக்கான காரணத்தை ஒரு வரியில் கூறவேண்டுமென்றால், ஒரு அணியாக இணைந்து ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எனக் கூறலாம். வழக்கமாக துவக்கப்போட்டி முதலே யார் எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்று தெளிவாக தீர்மானித்து விளையாடக்கூடிய சென்னை அணி, இவ்வருடம் மட்டும் யாரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் உறுதியான முடிவெடுக்க முடியாமல் தடுமாறியது. அணியின் கேப்டனான தோனி களமிறங்க வேண்டிய இடம் எது என்பதே உறுதியாக தீர்மானிக்கப்படாதது அபத்தத்தின் உச்சம்.

 

அணியில் வயதானவர்கள் நிரம்பி விட்டனர் என்ற குற்றச்சாட்டு கடந்த மூன்று வருடமாகவே எழுந்து வந்தாலும், அது எவ்வளவு உண்மை என்பதை அமீரகச் சூழல் வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டது. கடினமான தட்பவெட்பநிலை கொண்ட சூழலில் விளையாடும்போது வீரர்கள் தடுமாறுவது இயல்பானதுதான். உலகின் சிறந்த உடற்தகுதி கொண்ட வீரர்களுள் ஒருவரான விராட் கோலியே இந்த சூழலில் தடுமாறினார் எனும்போது, சற்று வயது மூத்தவர்கள் தடுமாறுவதில் ஆச்சரியமில்லை. அதேவேளையில், இதை காரணமாகக் கூறிக்கொண்டே இருக்க முடியுமா என்பதை அணி நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இளம் வீரர்கள் மற்றும் மூத்த வீரர்கள் என சரியான கலவையில் அணி அமைவதே எதிர்காலத்தில் சென்னை அணியை முன்னணி அணியாக ஐ.பி.எல் வரலாற்றில் தக்க வைக்க உதவும்.

 

எத்தனை போட்டிகளில் தோற்றாலும் பக்கபலமாக நாங்கள் இருக்கிறோம் என்று எதிரணி ரசிகர்களின் கேலி, கிண்டல்களுக்கு எல்லாம் அசராமல், தொடர்ந்து ஆதரவு தரும் ரசிகர்களே சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என அதிரடி மாற்றங்களை அணித் தேர்வில் செய்து, எதிரணிகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய ஒரு அணியாக சென்னை அணி மீண்டு(ம்) வர வேண்டும் என்பதே விசில் போடத் தயாராக இருக்கும் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

Next Story

இவரின் தவறான அணுகுமுறையே மும்பையின் தோல்விக்கு காரணம் - முன்னாள் வீரர் காட்டம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இவரின் தவறான அணுகுமுறையே மும்பை அணியின் தோல்விக்கு காரணம் என்று முன்னாள் வீரர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்2024 இன் 29ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய  சென்னை அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் மற்றும் சிவம் துபேவின் அதிரடி, சென்னை அணிக்கு கெளரவமான ஸ்கோரை எட்ட உதவியது. கேப்டன் ருதுராஜ் 40 பந்துகளில் 69 ரன்களும், ஷிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் தோனி அடித்த ஹாட்ரிக் சிக்சர்கள் உதவியுடன் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் 207 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு ரோஹித், இஷான் இணை வழக்கம்போல அதிரடி துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 70 ரன்கள் சேர்த்தது. ஆனால் இந்த இணையை பதிரனா பிரித்தார். இஷான் 23 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த சூர்யா ரன் எதுவும் எடுக்காமல் முஷ்டபிசுரின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த திலக் வர்மாவுடன் சேர்ந்து ரோஹித் அதிரடியாக அரைசதம் கடந்தார். இந்த இணையும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இவர்கள் எளிதில் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், மீண்டும் பதிரனா இவர்களைப் பிரித்தார். திலக் வர்மா 31 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த கேப்டன் ஹர்திக் 2 ரன்னிலும், டிம் டேவிட் 13 ரன்களிலும், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷெபர்டு 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் ரோஹித் நிலைத்து நின்று ஆடி சதம் கடந்தார். ஆனால் மற்ற வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களே எடுத்தது. ரோஹித் இறுதிவரை களத்தில் நின்று 105 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் நீடிக்கிறது. மும்பை அணி 8 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

தோல்விக்கு ஹர்திக் பாண்டியா கடைசி ஓவர் வீசியதும், அவரின் மந்தமான பேட்டிங்குமே காரணம் என சமூக வளைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

His wrong attitude was the reason for Mumbai's defeat - ex-player irfan pathan tells

இந்நிலையில், ஹர்திக்கின் தவறான அணுகுமுறைதான் தோல்விக்கான முக்கிய காரணம் என்கிற வகையில் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது “ ஆகாஷ் மத்வால் மீது நம்பிக்கை வைக்காமல், டெத் ஓவரில் திறமையில்லாத ஹர்திக் கடைசி ஓவர் வீசி தன் திறமையின்மையைக் காட்டியுள்ளார் ” என்று கூறியுள்ளார். 

அவர் கூறுவது சரிதான் என்று ரசிகர்களும் அவரின் பதிவில் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.