16 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக அமிஷேக் ஷர்மா 67 ரன்களையும் க்ளாசன் 53 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் மிட்செல் மார்ஷ் 4 விக்கெட்களையும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டையும் அக்ஸர் படேல் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்களை மட்டுமே எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 63 ரன்களையும் பிலிப் சால்ட் 59 ரன்களையும் எடுத்தனர். ஹைதராபாத் அணியில் மார்கண்டே 2 விக்கெட்களையும் புவனேஷ்வர் குமார், அகீல் ஹூசைன், நடராஜன், அமிஷேக் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார்.
டெல்லி அணி முதல் 10 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 105 ரன்களை எடுத்த நிலையில் அடுத்த 10 ஓவர்களில் 88 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் 9 ஓவர்களை வீசி 101 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்களை மட்டுமே எடுத்திருந்தனர். 11 ஓவர்களை வீசிய சுழற்பந்து வீச்சாளர்கள் 86 ரன்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இன்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் 1 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். ஆனால் ஐபிஎல் போட்டிகளில் முதல் ஓவரில் அதிகவிக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் இதுவரை 24 விக்கெட்களை முதல் ஓவரில் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் 21 விக்கெட்களை எடுத்து ட்ரெண்ட் போல்ட் உள்ளார்.