16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று முன்தினம் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் 47 பந்துகளுக்கு 96 ரன்களை எடுத்தார். விருத்திமான் சஹா 54 ரன்களை எடுத்தார்.
பின்னர் 215 ரன்கள் இலக்காக வைத்து களத்தில் இறங்கிய சென்னை அணி, மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பொழிந்தது. இதனால் போட்டியானது நிறுத்தப்பட்டது. மீண்டும் போட்டியானது நள்ளிரவு 12.10 மணிக்கு தொடரும் என்றும் டிஎல்எஸ் விதிப்படி போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் சென்னை அணிக்கு இலக்கு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து களத்தில் இறங்கிய சென்னை அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. கான்வே 47 ரன்களையும் ஷிவம் துவே 32 ரன்களையும் ரஹானே 27 ரன்களையும் எடுத்தனர். இறுதி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சிக்ஸர், பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜெடேஜா. குஜராத் சார்பில் மோகித் 3 விக்கெட்களையும் நூர் அஹமத் 2 விக்கெட்களையும் எடுத்தனர்.
ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளில் தேசிய அணிக்காக விளையாடாத வீரர்களில் இரண்டாவது அதிகபட்ச ரன்களை எடுத்தவர் என்ற பெருமையை சாய் சுதர்சன் பெற்றார். முதலிடத்தை ரஜத் பிடித்தார். பெங்களூர் அணிக்காக கடந்த ஆண்டு எலிமினேட்டர் போட்டியில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் இறுதிப் போட்டியில் அதிக ரன்களை கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை துஷார் தேஷ்பாண்டே படைத்தார். நேற்றைய போட்டியில் இவர் 56 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஷேன் வாட்சன் 2016 ஆம் ஆண்டு ஆர்.சி.பி அணிக்காக விளையாடும் போது ஹைதராபாத் அணிக்கு எதிராக 61 ரன்களை விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
ஐபிஎல் தொடர்களில் அதிக ரன்களை சேர்த்த இணை என்ற வரிசையில் ருதுராஜ் மற்றும் டெவான் கான்வே இணை இணைந்தது. நடப்பு சீசனில் இவர்கள் 849 ரன்களை குவித்து 3 ஆவது இடத்தில் உள்ளனர். முதலிடத்தை 939 ரன்களுடன் விராட் மற்றும் டிவில்லியர்ஸ் (2016) இணையும் அதே 939 ரன்களுடன் நடப்பு சீசனில் விராட் மற்றும் டுப்ளசிஸ் (2023) இணையும் உள்ளது.