Skip to main content

பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதால் ஜீரோ சைஸ் மிஸ் ஆகிறதா? வழியெல்லாம் வாழ்வோம் #15

Published on 15/06/2018 | Edited on 15/06/2018

 

life style

 

ஓர் ஆணின் உடல்நலமும் அறிவுநலமும் அவனுக்கு மட்டுமே பயன்படும். அவனது உடல்நலக்கேடு அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஒரு பெண்ணின் உடல்நலமும் அறிவு நலமும் அவளது பரம்பரைக்கே தேவையான காரணிகள். ஆனால், துரித உணவென்பது மட்டுமே வாழ்வியலாய் மாறிப்போன இந்தப் பதின் ஆண்டுகளில் தான் பெண்களின் உடல்நலம் என்பது மொத்தமாய்க் கேள்விக்குறியாகி நிற்கிறது. பொருளாதார உறவு நிமித்தமாய் ஒவ்வொரு பெண்ணும் அவரவர் படிப்புத்தகுதிக்கு ஏற்ற வகையில் பணிக்கு செல்லவேண்டிய நிலை கட்டாயமாகிப்போனது இன்று. அந்தக் கட்டாயத்தின் பிடியில் சிக்குண்டு அவர்கள் கவனிக்க மறந்தது உணவு முறைகளை. 2 மினிட்ஸ் நூடுல்ஸ் மட்டுமே தேசிய உணவாகிவிட்டது. ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்ற பேதமெல்லாம் இதில் மட்டும் இல்லவே இல்லை.


இன்றைய இளம்பெண்களின் மனோநிலை:


தங்கள் உடல்நலனைப் பேணவேண்டிய பெண்கள், தங்கள் வடிவத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கரீனா கபூருக்குப் போட்டியாய், "சைஸ் ஜீரோ" வடிவத்துக்கு மாறிவிட வேண்டும் என்று கொலைபட்டினி கிடப்பது மேல்த்தட்டு பெண்களின்  வாடிக்கையாகிவிட்டது. உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் இன்று எல்லாப் பெண்களின் நோக்கம், எடைக்குறைப்பு மட்டுமே. இன்றைய பெண்கள் இப்படித் தன்னைத்தானே காத்துக்கொள்வதும் இல்லை. மேலும், தங்கள் வடிவத்தைக் காத்துக்கொள்கிறோம் என்று, குழந்தைகளுக்கு பாலூட்டாமல் இருப்பதை நாகரீகமாக நினைத்துக்கொள்கின்றனர். இப்படியாக இரெண்டு தலைமுறைகளின் உடல்நலமும் கேள்விக்குறியாகி நிற்கிறது. இந்த சமூகமும் பெண்களின் உடல்நிலையில் பெரிதாய்க் கவனம் கொள்வதாகத் தெரியவில்லை. ஒரு முறை பூக்கும் பூக்களின் நலம் காக்க உரம் தொடங்கி ஓராயிரம் வகையில் கவலை கொண்டு, அதீத அக்கறை கொள்ளும் யாரும்; பூப்படைந்த பின்னும் கூட மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்களான பெண்களின் நலனில் கிஞ்சித்தும் கவலை கொள்வதில்லை.


பெண்களின் பருவங்கள்:


பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என்று பெண்களை வாழ்நாளின் அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளது நம் தமிழ் நாகரீகம்.


1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 க்கு மேல்

 

இந்த ஏழு பருவங்களிலும் பெண்களின் உடல் சார்ந்து வரும்பிரச்சனைகளும், அதை எப்படி இயற்கையோடு இயைந்த உணவியல் முறைகளில் சரிப்படுத்த இயலும் என்பதை பார்க்கலாம்.


தாய்ப்பாலின் முக்கியத்துவம்:


குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுப்பது அவசியம். குறைந்தது ஆறு மாத காலம் வரையாவது தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகமாவதுடன், சுவாசக்குழாய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்கின்றன. ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தாய்ப்பால் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு எந்த நோயாயினும் அந்தநோயின் தாக்கம் குறைவாகவே ஏற்படுகிறது. மற்ற உணவுகளையும், பானங்களையும் உண்டு வளர்ந்த குழந்தைகளை விட, தாய்ப்பால் குடித்துவளர்ந்த குழந்தைகள் ஊட்டமாக இருப்பதாக உலக சுகாதர நிறுவனம்தெரிவிக்கிறது. பிறந்து ஆறுமாதம் வரை எல்லா குழந்தைகளுக்கும் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட்டால், ஒரு ஆண்டிற்கு சுமார் 1.5 மில்லியன் சிசுக்களை காப்பாற்ற முடியும், மேலும் பல மில்லியன் குழந்தைகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஹெச்.ஐ.வீ யால் பாதிக்கப்பட்ட பெண், தாய்ப்பால் மூலம் சிசுவிற்கு வியாதியை தொற்றுவிப்பதற்கான அபாயம் உள்ளது. எனவே அவர்களைத் தவிர பிற பெண்கள் அனைவரும் தாய்ப்பால் கொடுத்தல் நலம்.

 
தாய்ப்பால் வங்கி:


தாய்ப்பால் சுரப்பு அதிகமில்லாத தாய்மார்களுக்கும், தொட்டில் குழந்தை திட்டத்தால் அரசால் எடுத்து வளர்க்கப்படும் அனாதைக் குழந்தைகளுக்காகவும் தாய்ப்பால் வங்கி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமான தாய்ப்பால் சுரப்பு உள்ள அன்னையர்களிடமிருந்து தாய்ப்பால் பெறப்பட்டு முறையாக சேமிக்கப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படை ஊட்டச்சத்துக்கு பிறகான உணவியல் தேவைகளை வரும் வாரங்களில் பார்ப்போம்.


குழந்தைகளின் உணவும் கார்ப்ரேட் கலாச்சாரமும்:

 
கண்ணே, மணியே என்று பிள்ளைகளைக் கொஞ்சிய காலம் போய், அமுல் பேபி என்று எப்போது கொஞ்ச வைத்ததோ அப்போதே குழந்தைகள் சார்ந்த அனைத்திலும் தன் ஆக்கிரமிப்பை அரங்கேற்றத தொடங்கிவிட்டது கார்ப்ரேட் உலகம். உணவு, உடை, மருந்துகள், சோப்பு என்று அத்தனையும் பிராண்டட் மயமாய் ஆகிப்போனதையும், அதையே பெருமையென்று எண்ணிய பெற்றோரையும் இரெண்டு தலைமுறைகளாய் நம் வீட்டுப் பெரியவர்கள் பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் இருக்கின்றனர்.


இந்த உலகமயமாக்கலில் ஒழிந்தே போனது நம் ஒட்டு மொத்தப் பாரம்பரியம். அவையென்ன என்பதை பின்வரும் நாட்களில் அலசலாம்.

முந்தைய பதிவு: பெண்கள் மனம் மாறுவது ஏன் தெரியுமா? வழியெல்லாம் வாழ்வோம் #14

 

 

Next Story

நிபா வைரஸ் பரவல்; பொது முடக்கம் அறிவிப்பு

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
spread of Nipah virus; Public shutdown notice

கேரளாவில் நிபா வைரஸ், பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் அவ்வப்போது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிடுவது வழக்கமாகி வருகிறது.

பறவை காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகள் ஏற்பட்டால் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு சோதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் தாக்குதலில் 14 வயது சிறுவன் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்டுப்பாடுகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் கேரளாவில் மருத்துவ கவுன்சில் குழுவினர் முகாமிட்டுள்ளனர். சிறுவனுடன் தொடர்பில் இருந்த 214 பேரில் 60 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதில் 14 பேருடைய பரிசோதனை மாதிரிகள் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவன் வசித்து வந்த மலப்புரம் பகுதியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து நோய் பரவாமல் தடுப்பதற்காக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் குழுவினர் கேரளாவில் முகாமிட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்றுவந்த 68 வயது முதியவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிபா வைரஸ் தாக்கத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

Next Story

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - அதிரவைக்கும் சோக சம்பவம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
A disabled woman was assaulted?-A shocking incident


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூசாரிப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர்கள் ராமன்-பழனாள் தம்பதி. மனைவி பழனாள் அஞ்சனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகளுக்கும், ஒரு மகனுக்கும், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகள் கவிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயது ஆகிறது மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் பழனாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் கவிதா திடீரென மாயமானார். அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. நம்பியூர் அருகே இருகாலூர் சமத்துவபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டின் கட்டிலில் கவிதா ஆடை இல்லாத நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகளற்ற நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கவிதா இறந்து கிடந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு தான் கவிதா எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.