நடிகர் அமிதாப் பச்சன் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார். மிகப்பெரிய 'மாஸ்' ரசிகர் கூட்டம் என்பது அவருக்குப் பிறகு ஹிந்தி நடிகர்கள் யாருக்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் சிறிய பாத்திரங்களில், படங்களில் நடித்த அமிதாப்., மெல்ல தனது முயற்சியாலும் அந்த காலகட்டத்தில் வித்தியாசமான நடிப்பினாலும் முன்னணிக்கு வந்து ஒரு கட்டத்தில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார். 'ஆங்ரி யங் மேன்' (angry young man - கோபம் நிறைந்த இளைஞன்) பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தைச் சேர்த்தார். இப்படி தனது துறையின் உச்சத்தில் இருந்த அமிதாப்பிற்கு ஒரு சோதனை வந்தது.
நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற அமிதாப், பெரும் கனவோடு தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கினார். ABC Limited - அமிதாப் பச்சன் கார்ப்பரேஷன் லிமிட்டட் என்ற பெயரில் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் இந்தியா முழுக்க பல மொழிகளில் தரமான, ஃப்ரெஷ்ஷான படங்கள் எடுக்க வேண்டுமென்ற லட்சியத்தோடு செயல்பட்டது. இந்தியில் சில படங்களை அந்த வகையில் தயாரித்தது. தமிழில் அஜித் - விக்ரம் நடித்த 'உல்லாசம்' இந்த நிறுவனத்தின் தயாரிப்பே. 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் அப்போதே கார்ப்பரேட் ஸ்டைலில் இயங்கியது. ஆனால், கெடுவாய்ப்பாக படங்கள் எதுவுமே பெரிய வெற்றி பெறவில்லை. ஒரு கட்டத்தில் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகி, தனது வீடு ஜப்தி செய்யப்படும் அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டார் அமிதாப். அப்போது அவருக்கு உதவ முன்வந்துள்ளார் ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானி. தனது மகன் அனில் அம்பானி மூலம் அமிதாப்புக்கு பணம் கொடுத்து உதவ முயன்ற திருபாயின் உதவியை மறுத்துள்ளார் அமிதாப். தன் பிரச்சனையைத் தானே சரி செய்து மீண்டு வர வேண்டுமென்றும் முடியுமென்றும் நம்பினார்.
சில நாட்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்த அமிதாப்புக்கு உதவும் வண்ணம் சில பட வாய்ப்புகளும் 'கோன் பனேகா க்ரோர்பதி' நிகழ்ச்சியை வழங்கும் வாய்ப்பும் வந்தன. தான் ஒரு சூப்பர் ஸ்டார், டிவியில் எல்லாம் வரக்கூடாது என்றெல்லாம் நினைக்காமல் அந்த நிகழ்ச்சியிலும் தனது முத்திரையைப் பதித்தார். மீண்டு எழுந்து வந்து மீண்டும் ஒரு முன்னணி நடிகரானார், இந்த முறை தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில். அவரது மகன் அபிஷேக் பச்சனும் நடிகர் ஆனார், ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார். இன்று அந்தக் குடும்பம் நட்சத்திர குடும்பமாக மின்னுகிறது. பின்னர் ஒரு நாள், ஒரு விருந்தில் திருபாய் அம்பானி அமிதாப்பை அழைத்து தன் அருகில் அமர வைத்து, தனது நண்பர்களிடம் மிகவும் பெருமையாகக் கூறியுள்ளார். இந்த நிகழ்வு குறித்து அமிதாப் ஒரு மேடையில் பகிர்ந்துகொண்டார்.
எவ்வளவு உயரம் சென்றாலும் அங்கு சோதனைகள் வரும் என்பதும் மீண்டும் எவ்வளவு வீழ்ந்தாலும் நம்பிக்கையுடன் உழைத்தால் எழுந்து வரலாம் என்பதும் அமிதாப்பின் வாழ்க்கை மூலம் நமக்குத் தெரிகிறது.