Skip to main content

கம்மியானாலும் பிரச்சனை, அதிகமானாலும் பிரச்சனை... தூக்கமா துக்கமா?    

Published on 16/03/2018 | Edited on 16/03/2018

மார்ச் 16 - உலக தூக்க தினம் 

தூக்கம்... ஆஹா, என்னவொரு வார்த்தை. மனிதனின் இயற்கை உணர்வுகளான கோபம், அழுகை, அச்சம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளில் தூக்கம் என்ற உணர்வும் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டியது. இந்த ரணகளமான அவசர வாழ்க்கையில் ஒரு முழு நாள் கிடைத்தால் கிளுகிளுப்பாக தூங்கலாம் என்று எண்ணாதவர்கள் குறைவே. ஏன் இல்லை... இன்றுதான் (மார்ச் 16) தூக்க நாள்! தூக்கத்துக்குனு ஒரு நாளா!! புது ஐட்டமாக இருக்கே என்று பார்க்கிறீர்களா? 

 

sleeping day 1ஆம், ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் தேவையான அடிப்படையான ஒன்று. ஒரு மனிதனின் உழைப்பு நேரம், விழிப்பு நேரம் அட்டவணைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருப்பதைப்போல கண்டிப்பாக தூக்கமும் அட்டவணைப்படுத்தப்பட்ட ஒன்று. ஒருகுறிப்பிட்ட  நேரம் கண்டிப்பாக மனிதன் தூங்கியாகவேண்டும், இல்லையெனில் உடல் நலம் பாதிக்கப்படும். ''அப்படினா நான் டெய்லி நல்லா சாப்டுட்டு தூங்கி, தூங்கிட்டு சாப்டு ஆரோக்கியமா இருப்பேனே'' என்று பெருமையாக நினைக்காதீர்கள். எப்படி, கண்டிப்பாக தூங்க வேண்டும் என்ற கட்டாய வரையறை இருக்கிறதோ, அதேபோல் அளவுக்கு அதிகமாக தூங்கக்கூடாது என்ற வரையறையும் இருக்கிறது. அதிக  தூக்கத்தால் உடலிற்கு கெடுதலும் உள்ளது. அளவுக்கு அதிமானால் அத்தோவும் விஷம்தானே? 

சிலர் தூக்கம்மில்லாமல் அவதிப்படுவார்கள், சிலர் எப்போதும் ஸ்லீப் மோடிலே இருப்பார்கள்.  இந்த தூக்கம் என்ற விஷயத்தை நம் உடலில் கட்டுப்படுத்துவது மெலட்டோனின் என்ற ஹார்மோன் தான் காரணம். இங்கிலாந்தில் தூக்கம் பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு சராசரி மனிதன் படுக்கைக்கு சென்ற பிறகு 37 நிமிடங்களுக்கு பிறகுதான் ஆழ்த்தூக்கத்திற்கே செல்வார் என்ற தகவல்  வெளியிடப்பட்டது.  

 

sleep dosorderஒரு குழந்தை ஒரு நாளைக்கு கண்டிப்பாக 14-லிருந்து 17மணி நேரம் தூங்க வேண்டும், வளர்ந்த மனிதன் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் 9 மணிநேரத்திற்கு அதிகமாக தூங்குபவர்கள் மன அழுத்த பாதிப்புகள் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக தூக்கத்தால் மூளை சுறுசுறுப்பை இழந்து செயல்பாட்டை இழக்கும். ஒன்பது மணிநேரத்திற்கு அதிகமாக  தூங்கும் பெண்களுக்கு மலட்டுத்தன்மை, மாதவிடாய் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்று ஆய்வுகள் விளக்குகின்றன. மேலும் அதிக தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும். நல்ல உடற்பயிற்சியும் உணவு கட்டுபாடும்  இருந்தால் கூட அதிக நேர தூக்கத்தினால் உடல் பருமன் பிரச்சனைகள் அதிகம் வருகின்றன. அதிகமாக தூங்கும் நோய்க்கு நார்க்கோலெப்ஸி என்று பெயர். 10 முதல் 25 வயது வரை இதன் அறிகுறிகள் இருக்கும். பிறகு ஒரு ஐந்து வருடங்களுக்கு மோசமாக இருக்கும். பின் வாழ்நாள் முழுவதும் தொற்றிக்கொள்ளும் அந்த நோய். சிலர் எதாவது வேலை செய்து கொண்டிருப்பார்கள், ஆனால் திடீரென்று அவர்களுக்கே தெரியாமல் தூங்கி விடுவர்கள். அந்த தூக்கமானது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரம் வரைக்கூட தொடரும். இதுவே இந்நோயின் அறிகுறி ஆகும். 

அடுத்து தூக்கத்தை கெடுக்கும் காரணிகளாக, இந்நாட்களில் முக்கியமாக கருதப்படுவது ஸ்மார்ட் போன்கள். இரவு, படுக்கைக்கு சென்ற பிறகு மொபைல் உபயோகிப்பது, லேப்டாப் உபயோகிப்பது போன்றவை கண்ணிற்கு சோர்வைக் கொடுத்து தூக்கத்தை கெடுக்கும். இரவு நேரங்களில் அநேகமாக ஒளி இல்லாத சூழ்நிலையிலேயே நம் படுக்கையறை இருக்க வாய்ப்புண்டு. அந்த சூழ்நிலையில்  ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப்பின் ஒளிர்திரையினை உற்று நோக்கும்போது கண்ணையும் பாதிப்பது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் பாதிக்கும். தூக்க நேரத்தில் நம் கண்ணில் சிவப்பு நிற ஒளிதான் படவேண்டும். ஆனால் ஸ்மார்ட் போன்களில் இருந்து வரும் நீல நிற ஒளி இன்னும் இரவு வரவில்லை என்ற சமிக்கையை மூளைக்கு அனுப்புகின்றன, எனவே ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப் போன்றவற்றை இரவு நேரங்களில் படுக்கைக்கு சென்ற பிறகு உபயோகிப்பதை முடிந்த அளவு என்பதைவிட முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

 

sleeping dayஇன்று நம்மில் கணிசமானோர் இரவு ஷிப்ட்களில் கண்டிப்பாக கணினி முன் வேலைசெய்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம். இதுபோன்ற நேரங்களில் சிறிய சிறிய பயிற்சிகள் தொடர்ந்து ஒளிர்திரை பார்ப்பதை விடுத்து சிலமிடங்கள் பார்வையை கணினியின் திரைப்பக்கத்திலிருந்து மாற்றிவைப்பது, இரு உள்ளங்கைகளாலும் இரு கண்களையும் சில நிமிடங்கள் புதைத்து வைப்பது போன்றவற்றை பின்பற்றினால் கண்டிப்பாக கண்சோர்விலிருந்தும்  தூக்கம் கெடுக்கும் காரணிகளில் இருந்தும் பாதுகாத்துக்கொள்ளலாம்.

அப்புறமென்ன... அருமையான தூக்கம், அளவான தூக்கம், ஆரோக்கியமான தூக்கத்துடன் வாழ வாழ்த்துக்கள்! ஹேப்பி ஸ்லீப்பிங் டே.......  

 

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்

Next Story

தகராறில் குழந்தையை விட்டுச் சென்ற பெற்றோர்; ஆதரவளித்து விளையாண்ட 10 வயது சிறுவனின் நெகிழ்ச்சி செயல்

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

A parent who leaves a child on the street; A resilient act of a 10-year-old boy who played with support

 

சேலத்தில் குடும்ப தகராறில் குழந்தையை பெற்றவர்களே தெருவில் விட்டு சென்ற நிலையில், சிறுவன் ஒருவன் குழந்தைக்கு ஆதரவளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

சேலத்தில் டூ வீலர் மெக்கானிக் வேலை செய்து வரும் ஒருவர், மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தங்களுடைய மூன்று வயது குழந்தையை கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு தெருவில் விட்டுவிட்டு சென்று விட்டார். ஆதரவின்றி அந்த குழந்தை சுற்றித் திரிந்த நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த கோகுல் என்ற பத்து வயது சிறுவன் ஆதரவளித்து குழந்தையுடன் விளையாடி வந்தான்.

 

ஆதரவற்ற குழந்தை ஒன்று சிறுவன் ஒருவனுடன் இருப்பது தெரிந்து, போலீசார் குழந்தையை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அந்த குழந்தை அச்சிறுவனை விட்டு பிரிய மறுத்து, அடம் பிடித்து அழுதது. இதனால் சிறுவன் கோகுலையும் சேர்த்து காவல் துறையினர் குழந்தையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு மனம் மாறி திரும்பவும் குழந்தையைத் தேடி வந்த பெற்றோரை எச்சரித்த போலீசார் 'உங்கள் பிரச்சனைக்காக இப்படியா குழந்தையை தெருவில் விட்டுவிட்டுப் போவது' என கடுமையாக எச்சரித்த பிறகு குழந்தையை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். குழந்தையை எடுத்து ஆதரவளித்து அதனுடன் விளையாண்ட சிறுவன் கோகுலுக்கு டிஎஸ்பி ரமேஷ் ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசாக அளித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.