மன்னராட்சிகாலத்தில் செல்வ வளமுள்ள நாட்டின்இளவரசிக்குத்திருமணம் செய்ய பல நாட்டின்இளவரசர்களில் சிறந்தவரைத்தேர்ந்தெடுப்பதற்காக சுயம்வரங்கள் நடத்தப்பட்டன. இளவரசர்கள்அவரவர் திறமைகளை வெளிக்காட்டி, இளவரசியைக் கவரும்இளவரசனுக்கு மாலையிட்டு அவனை திருமணம் செய்துகொள்வாள். திருமண விஷயத்தில்அப்பொழுதிருந்து இப்போது வரைபெண்களுக்கு டிமாண்ட்தான். காதலும் செய்யாமல் திருமணத்திற்கு பெண்ணும் அவ்வளவு சீக்கிரம் அமையாமல் இருக்கும் சில முரட்டு சிங்கிள்களுக்கு இந்த வலி தெரியும். நிலைமை இப்படியிருக்க கலர்ஸ் டிவி நடத்தி வரும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் நடிகர் ஆர்யாவுக்கு பெண் தேடுகிறார்கள். 16 பெண்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் படிப்படியாக போட்டியாளர்கள் முன்னேறி இப்பொழுது 3 பேர் போட்டியின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவுடன் அத்தனை பெண்களும் நெருக்கமாக இருக்கிறார்கள், தனிப்பட்ட விஷயங்களை பகிர்கிறார்கள் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மதுரையில் இது தொடர்பாக ஒரு வழக்கும் கூட பதிவு செய்யப்பட்டது. கலாச்சார கோணத்தை புறம் தள்ளுவோம். சமூக கோணத்தில் பெண்கள் சுயமரியாதையுடன் முன்னேறி வரும் இந்தக் காலத்தில் ஒரு ஆணுக்காக இத்தனை பெண்கள் போட்டி போட்டு, சண்டை போட்டு, அழுது முயன்றது சரியா என்ற கேள்வி எழுந்தது. நிகழ்ச்சி முடிவில் ஆர்யா இவர்களில் ஒருவரை திருமணம் செய்வார் என்பது உறுதியும் இல்லை.இந்த இரண்டு கோணத்தையும் தவிர்த்த இன்னொன்றாக காதல்கோணமும் இதில் உண்டு. திரைப்படங்களும் கவிதைகளும் கதைகளும் தமிழ்நாட்டில் உருவாக்கிய காதல் பற்றிய கட்டமைப்பை மொத்தமாக உடைத்தது இந்த நிகழ்ச்சி. இத்தனை போட்டியாளர்களுடனும் அத்தனை நெருக்கமாக இருந்தார் ஆர்யா. 'சிங்கிள்ஸ் சாபம் உன்னை சும்மா விடாதுடா' என்கிற அளவுக்கு ஆண்களை வெறுப்பேற்றினார் ஆர்யா.இப்படி ஆண்களுக்கும் பொது சமூகத்துக்கும் பல எண்ணங்கள்இருந்தாலும் இந்த நிகழ்ச்சி குறித்து உண்மையில் இளம் பெண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்றும்கேட்டோம்.
இந்த கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்குமிடமாக நாங்கள் முடிவு செய்தது ஐ.டி துறைதான். மாடர்னானநம்மூர் பெண்களை சந்திக்கசோழிங்கநல்லூர் சென்றோம். ரயிலுக்காக சென்று கொண்டிருந்த ஒருவரை நிறுத்திக் கேட்க, முதலில் மைக்கை பார்த்ததும் ஓடியவர் இந்த நிகழ்ச்சி குறித்து என்றதும் நின்றார். "இந்த நிகழ்ச்சியையெல்லாம் ஆரம்பத்திலேயேதடை செய்திருக்கவேண்டும். ஆர்யாவிற்காக இந்த நிகழ்ச்சியை முதலில் பார்த்தேன். போகப்போக இதன் போக்கு சரியில்லை. அதனால் நான் பார்ப்பதில்லை. நமக்கென்று தனிப்பட்ட விஷயங்கள் உள்ளன.அதைஒரு நிகழ்ச்சியில் மக்கள் முன் சொல்வது தப்பு.எனக்கு ஆந்த ஆசையில்லை. அதில் கலந்துகொள்ள துளிகூட விருப்பமில்லை" என்றார்.
அடுத்து சோழிங்கநல்லூர் டி.சி.எஸ் (TCS) லிருந்து வெளியே வந்தவரை நிறுத்தினோம். "ஒரு நடிகரா இருந்தாலும் நியாயம் வேணாமா? அவருக்காக இத்தனை பேரும் எல்லா விஷயத்தையும் சொல்றாங்க. அவங்க பேரண்ட்சும் இப்படி வர்றாங்க, போறாங்க. அதுவும் அபர்ணதி வீட்டிலலாம் உண்மையான மாப்பிள்ளை மாதிரி பேசுனாங்க. இப்போ ஒண்ணுமில்லாம போச்சு.இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதும் இன்னொரு வாழ்க்கை உள்ளத்தைப் பற்றிஇவர்களுக்கு கவலையில்லை போல" என்றவரை வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் கலந்து கொள்வீர்களா என்று கேட்டேன். அடித்துவிடுவது போல முறைத்தவர், "இவ்வளவு சொல்ற நான் எப்படிங்ககலந்துகொள்வேன்?" என்று கேட்டு நகர்ந்தார்.
இவ்வளவு எதிர்ப்பா என்று நினைத்தபடி அடுத்தவரிடம் பேசினோம்."நிகழ்ச்சி நல்லாத்தான் போகுது.இருந்தாலும் ஆர்யாவிற்காக அனைத்து பெண்களும்சண்டையெல்லாம் போட்டதுகொஞ்சம் அதிகம்தான். எனக்கும் போட்டியாளராக இருக்க ஆசைதான், ஆனால் வேண்டாம். இந்த நிகழ்ச்சிக்கு வந்த பெண்களையும்இதைப் பார்க்கும் பார்வையாளர்களையும்சிலர்திட்டுறாங்க. அந்த பெண்களுக்கு பிடித்ததால் அவர்கள் வந்துள்ளார்கள். இதிலென்ன தப்பு?" என்று நம்மை கேட்டார்.
அடுத்து நாம் பேசியவர் ஒரு இன்ஃபோசியன் (அதாங்கஇன்ஃபோசிஸ் நிறுனத்தில் வேலை பார்ப்பவர்). "ஆர்யாவுக்கு அவ்வளவு சீன்லாம் இல்லைங்க. இந்தப் பொண்ணுக எல்லாம் பாப்புலாரிட்டிக்காகவும் பணத்துக்காகவும் பண்ணுறாங்க. அவரு இன்னொரு படத்துல நடிக்கிற மாதிரி இதுலயும் நடிக்கிறாரு. அது மாதிரி நாமளும் ரொமான்டிக்கா அழகா விதம் விதமான காஸ்ட்யூம்ஸ் எல்லாம் பாத்து என்ஜாய் பண்ணிட்டு போக வேண்டியதுதான்.இதை இவ்வளவு எல்லாம் டிஸ்கஸ் பண்ண கூடாது" என்றார்.
ஆம், உண்மையில் பார்வையாளர்களின் தேர்வுதான். ஒரு நிகழ்ச்சியை பொழுதுபோக்காக பார்த்துவிட்டு போவதும் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வதும். அதே நேரம் குழந்தைகளின் மனதை வடிவமைப்பதில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பங்கு மிகப்பெரியது, அதுவும் இந்தக் காலத்தில். வெளிநாடுகளில் தொலைக்காட்சி தொடர்களும் 'அடல்ட்ஸ்'கானதுஎன்று பிரிக்கப்படுகின்றன. இங்கு அந்த பொறுப்புணர்ச்சியெல்லாம் இல்லாத நிலையில் நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.