Skip to main content

மறுமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைய கவனிக்க வேண்டிய காரணிகள்!

 

things to evaluate before remarriage

 

திருமணம் என்பது 'ஆயிரம் காலத்துப் பயிர்' என்று நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். நம் முன்னோர்கள் திருமணத்தை மதத்தோடும், தங்கள் கலாச்சாரத்தோடும் தொடர்புப்படுத்திப் போற்றுவதுதான் இதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது. திருமணத்திற்கு புரிதல், மரியாதை, அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல் மற்றும் சமரசம் ஆகிய விஷயங்கள் முக்கியமானவை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினரின் உண்மையான அன்பிலும் உறவிலும் பல இடங்களில் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர, உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். ஆகையால், இன்றைய நவீன உலகில் விவாகரத்திற்குப் பிறகு, இரண்டாவது திருமணம் செய்வது மேற்கத்திய கலாச்சாரத்தைப் போன்று அதிகரித்துக் காணப்படுகிறது.

 

இருப்பினும், உலகின் பல்வேறு நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது சர்வதேச அறிக்கையானது, இந்தியாவில் விவாகரத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் நடப்பது மிகக் குறைவு என்கிறது. விவகாரத்திற்குப் பிறகு இரண்டாவது திருமணம் செய்வது, வாழ்வில் புத்துணர்ச்சியைத் தருவது மட்டுமல்லாமல், நீண்ட நெடிய நமது வாழ்க்கையில் நமக்கென ஒரு துணை இருக்கிறதென்ற மனஉறுதியையும் தருகிறது. ஆனால், மறுமணம் செய்வதற்கான இணையைத் தேர்ந்தெடுப்பதிலும் பலருக்குக் குழப்பமான சூழல் நிலவுகிறது. எனவே, விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் செய்துகொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டியதாக உளவியல் நிபுணர்கள் கூறும் பொதுவான 6 காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

பரஸ்பர நம்பிக்கை வேண்டும்:

 

அன்பு, நம்பிக்கை, மரியாதை இந்த மூன்றும்தான் தம்பதியர் பரஸ்பரம் எதிர்பார்க்கும் விஷயங்கள். குறிப்பாக, பரஸ்பர நம்பிக்கை திருமண வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அது மணமுடிக்க எண்ணும் இருவரிடையே ஏற்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். விவாகரத்து செய்தவுடன், குறிப்பிட்ட ஒருவரிடம் அன்பைச் செலுத்துவதும், நம்புவதும் இயல்பான ஒன்றாகும். இப்படியா கடினமான சூழ்நிலையில், உங்களது இணை உங்களுக்கு முன்னுரிமை அளித்து, பரஸ்பர நம்பிக்கையுடன் உங்களைத் திருமணம் செய்பவராக இருக்க வேண்டும்.

 

எந்த நிர்ப்பந்தமும் இருக்க வேண்டாம்:

 

எவ்விதமான நிர்ப்பந்தம் காரணமாகவும், மீண்டும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம். விவாகரத்துக்குப் பிறகான இரண்டாவது திருமணம் என்பது அன்பையும், ஆறுதலையும் உள்ளடக்கிய உங்களின் சுய முடிவாக மட்டுமே இருக்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதையும் அந்த நபருடன் வாழ நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருந்தால், இரண்டாவது திருமணம் செய்துகொள்ளுங்கள்.

 

ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்:

 

உங்கள் கடமைகளில் உறுதுணையாக இருக்கத் தயாராக இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்துகொள்ளுங்கள். உங்களின் தேவைகளை உங்கள் துணையிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை கிடைத்தல் அவசியம். அதேபோன்றதொரு நம்பிக்கையை உங்கள் துணைக்கும் உங்களால் அளிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் முடிவினை மீண்டும் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.  

 

சரியான நிதி திட்டமிடல்:

 

பொருளாதார ரீதியாக அவர் உங்களுக்குப் பொருத்தமானவரா என்பதைக் கவனியுங்கள். உங்கள் முந்தைய கணவரிடமிருந்து உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால், உங்கள் தற்போதைய கணவர் உங்கள் அனைவரையும் இணையாக நடத்துபவராக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அடிப்படை வீட்டுச் செலவுகளைத் தவிர, பணத் திட்டங்கள் மற்றும் இதர செலவுகள் குறித்து இருவரும் இணைந்து ஒரு சரியான திட்டமிடலை மேற்கொள்ளுங்கள். உங்கள் இணை, அதிகம் செலவு செய்கிறாரா அல்லது சிக்கனமாக உள்ளாரா என்பதையும் கவனிக்க வேண்டும்.

 

பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண்பவரா?

 

பிரச்சினைகள் வரும்போது கோபத்துடன் முடிவெடுக்கிறாரா அல்லது நிதானமாக உள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று, பிரச்சினைகளைக் கடந்து செல்ல முயல்பவரா அல்லது அதற்குத் தீர்வு காண்பவரா என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

 

நீண்டகால திருமண வாழ்விற்கு தாம்பத்தியம் மட்டும் போதாது:

 

உங்கள் விவாகரத்துக்குப் பிறகு, நீங்கள் தேர்வு செய்யும் நபர் சிறந்த நண்பராக இருத்தல் வேண்டும். எந்த தகவல்களையும் உங்களுடன் பரிமாறிக்கொள்பவராக இருத்தல் நல்லது. இது, அவர் உங்கள் வாழ்க்கையில் பாதி என்ற நிலையை அவர்களுக்கு உறுதிப்படுத்துகிறது. இது உங்கள் இருவரையும் திருமண வாழ்வில் மகிழ்ச்சியுடன் வழிநடத்த உதவும். குறிப்பாக, உங்களுடன் வெளிப்படையாகப் பேசுகிறாரா என்பதைக் கவனியுங்கள். ஏனெனில், திருமண பந்தம் வலுப்பெற வெளிப்படைத்தன்மை அவசியம்.

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொதுவான காரணிகள் அனைத்தும், இருவரிடமும் இருக்கின்றனவா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அவற்றில் ஏதேனும் குறையும்பட்சத்தில் அதைச் சரி செய்யவும் தயாராக இருங்கள். அப்படி இருக்கும்பட்சத்தில், உங்கள் மனம் போல் இந்தப் புதிய திருமண பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியாகவும், நிறைவாகவும் அமைந்திடும்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !