Skip to main content

பிணவறையின் கதவருகே நிற்கையிலும் எனக்குள் பல்வேறு எண்ணங்கள் அலையடிக்கின்றன: சார் ஆட்சியரின் திறந்த மடல்!

Published on 15/02/2018 | Edited on 17/02/2018
sarayu


புதுக்கோட்டை மாவட்டத்தி்ற்கு சார் ஆட்சியராக பதவி ஏற்றுள்ள கே.எம்.சரயு ஐ.ஏ.எஸ். பதவி ஏற்ற நாளில் இருந்து அதிரடி நடவடிக்கையால் மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் நேர்மையான அதிகாரி என்பது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட சமூகத்தை, கல்வியால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர். தான் எப்படி ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து தாயின் அரவணைப்பில் படித்து இந்த பெரிய பதவிக்கு வந்தேன் என்பதை ஒவ்வொரு பள்ளி மாணவ, மாணவிகளிடமும் சொல்லி வருகிறார்.

தான் படிக்கின்ற காலத்தில் சக மாணவன் வெற்று டப்பாவுடன் பள்ளிக்கு வந்து பட்டினியாக வீட்டுக்கு போவான் அதைப் பார்த்து வறுமை பற்றி தெரிந்து கொண்டேன். அப்படியான மக்களை காக்க வேண்டும் என்ற என்னத்தை வளர்த்த நான் விடா முயற்சியால் படித்து இந்த பதவிக்கு வந்துவிட்டேன் என்று வெளிப்படையாக பேசி வரும் சார் ஆட்சியர், தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு மடலை தமிழில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டு தமிழில் மொழிமாற்றம் செய்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவு இன்று வாட்ஸ் அப் போன்ற அனைத்து சமூக வளைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. அந்த மடலை படித்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் மனம் நெகிழந்து போகிறார்கள். அவர் எழுதிய அந்த மடல் அப்படியே கீழே.. 

அன்பான தோழர்களுக்கு,

சரயூ இ.ஆ.ப,  சார் ஆட்சியர் புதுக்கோட்டை மாவட்டம் அவர்களின் ஒரு கடிதம்

நான் இங்கு சார் ஆட்சியராக பொறுப்பேற்று மூன்று மாதங்கள் ஆகின்றன. அப்போதில் இருந்து ஒவ்வொரு வரதட்சணை சாவும், அதன் மீதான ஆய்வும், விசாரணையும் ஏற்படுத்தும் வலி என் இதயத்தை ஓயாமல் ரணப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இங்கே பொறுப்பேற்ற முதல் பத்து நாட்களில் மட்டும் ஐந்து சந்தேகத்துக்குரிய மரணங்கள்.

எந்தப் பெண்ணாவது தனக்குத் திருமணமான முதல் ஏழு வருடங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்தால், அதனை விசாரித்து, வழக்குப் பதிவு செய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாக நடுவருக்கு ( executive magistrate) உண்டு. இப்படி ஒவ்வொரு முறை விசாரணை நடத்துகிற போதும், நான் உணர்ச்சிப்பெருக்கில் தத்தளிக்கிறேன். இந்தப் பணியில் ஈடுபடக் கிளம்புவதற்கு முன்பு, என் காதில் விழுந்த அறிவுரைகள் எல்லாம், 'நீ ஒரு அதிகாரியாக உன் கடமையை நிறைவேற்றுகிறாய். அதனால் உணர்ச்சிவசப்படாமல் இரு.' என்று நீண்டன. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஒரு பிணவறையின் கதவருகே நிற்கையிலும் எனக்குள் பல்வேறு எண்ணங்கள் அலையடிக்கின்றன.

நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்களாகி விட்டன. காயத்ரியின் மரணம் குற்றவியல் நடைமுறைச்  சட்டபிரிவு 174(3)-ன் கீழ் பதியப்படும் 12-வது வழக்கு. அவளுடைய வாழ்க்கை குறித்தும், அதன் நினைவுகள் என்னை கலங்க வைத்துக்கொண்டே இருக்கிறது என்பதைக் குறித்தும் பிறகொரு நாள் விரிவாகச் சொல்கிறேன். என்னுடைய ஒட்டுமொத்த தைரியத்தையும் ஒன்று திரட்டிக்கொண்டு, எனக்கு இந்த வழக்குகளில் தூண் போல உறுதுணை புரியும் தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.ராம்குமாரை அழைத்தேன்.

மனதளவில் உடைந்து போய், குரல் கம்ம அவரிடம், "இந்தப் பொண்ணுங்களுக்கு என்ன தான் ஆச்சு டாக்டர்?" எனக்கேட்டேன்

"எனக்குத் தெரியலை மேடம். உங்களைப் போலத் தான் நானும் திகைச்சு நிக்கிறேன்" என்றார் அவர்.

நாங்கள் காயத்ரியின் மரணம் குறித்தும், அவளின் சாவை சுற்றிச் சூழ்ந்திருக்கும் மர்மங்கள் குறித்தும் விரிவாகப் பேசினோம்.

"இதுக்கெல்லாம் எதாச்சும் பண்ண முடியுமா? கவுன்சிலிங் நிகழ்வுகள் இல்லைனா விழிப்புணர்வு முகாம்கள். எதாச்சும்..." என்று இறுதியாகக் கேட்டேன்

என் கண் முன்னே அந்தப் பெண்களின் முகங்கள் நிழலாடின. இப்பெண்கள் என்னைவிட வயதில் இளையவர்கள். திருமணமாகி, பால் மணம் மாறாத பிஞ்சுகளின் அம்மாக்கள். இப்போது வாழ்க்கையை முடித்துக்கொண்டு விட்டார்கள். பிணவறையில் பார்மலின் வாசனைக்கு இடையே நான் நடக்கிறேன். என் காதுகளுக்குள் வேறு யாருக்கும் கேட்காத குரல்கள் ஒலிக்கின்றன. அவை தங்களுக்கான நீதிக்கு இறைஞ்சும் கெளரி, ரேவதியின் குரல்கள். என் கனவுகளில் இவர்களின் மழலைகள் தங்களுடைய அம்மா இனி திரும்ப வரவே மாட்டார் என்று தெரியாமல் ஓலமிட்டு அழுகின்றன.

“நீங்க கவனிச்சீங்களானு

தெரியலை மேடம். நாம பாத்தா பெரும்பாலான கேஸ்களில் தற்கொலை முடிவை மாதவிடாய் (பீரியட்) சமயத்தில தான் பெண்கள் எடுத்திருக்காங்க" என்றார் டாக்டர்.

நான் விக்கித்து நின்றேன்.

"நான் பாத்த 90% கேஸ்களில், எந்தப் பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களோ, அவங்க எல்லாரும் மாதவிடாய் காலத்தில் தான் இருந்திருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில் அந்தப் பொண்ணுங்களுக்கு என்னலாம் ஆகுதுன்னு யாருக்காச்சும் புரியுதா , தெரியுதான்னு எனக்குத் தோணலை. இந்த நேரத்தை எல்லாம், கோபம் ரொம்பப் பொத்துகிட்டு வரும், அது போக ஒரே விரக்தியா இருக்கும். இது எல்லாத்தை விடக் கொடுமை என்ன தெரியுமா? அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க இது எதையும் புரிஞ்சுக்காம உயிரை எடுப்பாங்க. இதனால் மனசு உடைஞ்சு போயிடும். நாம பாத்தா பெரும்பாலான தற்கொலைகளில் அப்போதான் அவங்களுக்குக் குழந்தையே பிறந்திருக்கு. பிரசவத்துக்குப் பின் ஏற்படுற மனசிதைவு (டிப்ரஷன்) பத்தி நமக்கு யாருக்கும் புரிஞ்சுருக்கானே தெரியல." என்றார் டாக்டர்.

இங்கே தான் நம் அனைவரும்தோற்றுப்போயிருக்கிறோம். நம்முடைய உலகத்தின் நம்பிக்கைகளும், கட்டுப்பாடுகளும் மாதவிடாய், அதில் வெளியேறும் ரத்தம் ஆகியவற்றை அசுத்தம், புனிதம் இல்லாதது என்று முத்திரை குத்துகிறது. இதனால், எதைக் குறித்துக் கட்டாயம் பேச வேண்டுமோ, அது குறித்துப் பேச மறுக்கிறோம். இந்த மாதவிடாய் நாட்களில் ஒரு பெண்ணிற்கு ஏற்படும் வேதனை சொல்லி மாளாது. மாதவிடாய் நெருங்கும் போது, மனதளவிலும், உடல் அளவிலும் ஏற்படும் அதிர்ச்சிகள் குடும்பங்களில் பேசப்படுவதே இல்லை. பள்ளிக்காலத்தில் எங்களுக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், மாதவிடாய் தலைப்பை எவ்வளவு வேகமாக முடியுமோ, அவ்வளவு வேகமாக நடத்தி முடித்துவிட்டு அடுத்த வேலையைப் பார்த்தார். வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று ஒரு பெரிய பாடப்புத்தகத்தின் இன்னுமொரு பக்கமாக முடிந்து போனது.

இதைப் புரிந்து கொள்ளாமல் போனதற்காக எல்லா ஆண்களையும் நான் நிச்சயம் குறை சொல்லமாட்டேன். தங்களுடைய அம்மாக்கள், தங்கைகள், தோழிகள் என்று பலரின் சீற்றத்தை இந்த மாதவிடாய் நாட்களில் எதிர்கொள்கிறார்கள். அப்பெண்களால் தங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதை எதிர்கொள்ள ஆண்களாலும் முடியாமல் போகிறது. நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்று அந்த ஆண்கள் கேள்வி கேட்கிற போது, நம்முடைய மனமும், உடலும் என்ன பாடுபடுகிறது என்று சொல்லாமல் அவர்களைக் கடுமையாகப் புறக்கணிக்கிறோம். இப்படி அதீதமான சிக்கல்கள் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படுவதில்லை என்றாலும், அப்படி ஏற்படுகிற போது அது குறித்து மனந்திறந்து பேசுவது முக்கியமானது. அப்போது தான் நம்மை இன்னமும் முதிர்ச்சியோடு நடத்தும் சமூகத்தைக் கட்டமைக்க முடியும். என்னுடைய குடிமைப்பணி தேர்வு தயாரிப்புக் காலங்களில் தான், இந்தக் காலங்கள் எப்படிப்பட்ட மன அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்று உணர்ந்து கொண்டேன்.

உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்து கொள்கிற போது அவர்களை மென்மேலும் நேசிக்க முடியும். அவர்களின் இயல்பான நடத்தை மாறி, அவர்கள் அடக்க முடியாத கோபத்தைக் கொட்டும் போது அவர்களின் ஹார்மோன்கள் உயிரை வதைக்கின்றன என உணர்ந்து கொள்ளுங்கள். நாம் மனந்திறந்து, "நான் மாதவிடாய் காலத்தில (பீரியட்ஸ்ல) இருக்கேன். எனக்குச் சட்டுன்னு கோபம் வருது, பட்டுன்னு சோகமாயிடுறேன்" என்று சொல்வதால் நம்மை யாரும் துளி கூட மரியாதை குறைவாக நடத்த போவதில்லை.

கருப்பையில் பல கட்டிகள் தோன்றுவது, பிரசவத்திற்குப் பிறகு ஏற்படும் மனசிதைவுகள் குறித்துப் போதுமான விழிப்புணர்வை ஆண்கள், பெண்கள் இருவரிடமும் ஏற்படுத்த வேண்டும். நம் அனைவருக்குமான சமூகத்தை அப்படித்தான் வளர்த்து எடுக்க முடியும். பெண்களாக, இந்த ஆண்களிடம் சொல்வதில் எந்தப் பயனும் இல்லை என்று கூச்சப்பட வேண்டாம். என்னை நம்புங்கள். ஒவ்வொரு ஆணும்- தகப்பனும், தமையனும், தோழனும் அளவற்ற அன்போடு உங்களுக்குத் தோள்தரவே விரும்புவார்கள். 

அன்புடன்,
சரயு.

இது போன்று மக்களுக்காக சிந்நிதிக்க கூடிய அதிகாரிகள் தான் மக்களுக்கு வேண்டும் என்பதை சமூக வலைதளங்களில் படித்த அனைவரும் பகிர்கிறார்கள்.

- இரா.பகத்சிங்