Skip to main content

இந்தியாக்காரங்களே இப்படித்தான்னு சொன்னாங்க... கோபம் வந்தது! - 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை! #2 

Published on 06/11/2020 | Edited on 22/12/2020
srimathi sambrani

 

சாம்பிராணினா சும்மா இல்ல! 20 நாடுகளை கலக்கும் 2 தமிழர்களின் சக்ஸஸ் கதை! 

கட்டுரையின் தொடர்ச்சி...

மதுரை ஆடியோ கேசட் கடையில் தொடங்கிய பிசினஸ் பயணம், இன்று இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஒரு 'ப்ராண்ட்' வரை சென்று தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இது அதிர்ஷ்டத்தாலோ காலம் துணை செய்ததாலோ நடந்ததல்ல. அவர்களின் கதையை கேட்கும்போது அதிலிருந்து கற்றுக்கொள்ள பல 'மேலாண்மை பாடங்கள்' (management lessons) இருக்கின்றன. அவர்கள் செய்த முயற்சிகள், எடுத்த முடிவுகள், செயல்படுத்திய யுக்திகள் ஆகியவை அவர்களது வளர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கின்றன. அப்படி என்ன யுக்திகள், மேலாண்மை பாடங்கள்? பார்க்கலாம்...

 

சாம்பிராணி என்பது பல காலமாக நாம் பயன்படுத்தி வருவது. பொதுவாகவே 90களில் மக்களுக்கு ஒரு மனநிலை இருந்தது. அது, பழைய பழக்கவழக்கங்களில் இருந்து மாறி நவீன பொருட்களை பயன்படுத்துவது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் ஒரு பழைய பழக்கவழக்கமான சாம்பிராணியில் புதிய நுட்பத்தை கொண்டு வரவேண்டுமென்று முடிவு செய்து, அதற்கான ஆய்வை செய்தனர். "அப்பொழுதெல்லாம் சாம்பிராணி தூளாகத்தான் தயாராகும். அதை பயன்படுத்த ஒரு தட்டு அல்லது வேறு உபகரணம் தேவை. வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்வது என்று முடிவெடுத்த பிறகு, அதை பயன்படுத்துவதை எளிதாக்க ஏதாவது செய்யணுமே என்று தோன்றியது. என்ன பண்ணலாம்னு யோசிச்சு முதலில் தூள் சாம்பிராணியோடு அதை பயன்படுத்த கப் தனியாகப் போட்டு அனுப்பினோம். அதிலும் சில வசதிக் குறைவுகள் இருந்தன. கப்பிலேயே சாம்பிராணி தயார் செய்தால் என்ன என்று யோசிச்சுதான் 'கப் சாம்பிராணி' என்ற கான்செப்டுக்கு வந்தோம். ஆரம்பத்தில் செய்த முயற்சிகள் சில காமெடியாகவும் விபரீதமாகவும் கூட முடிந்ததுண்டு. ஆய்வுல ஒரு முறை குபீர்னு தீப்பிடித்தது. இப்படி பல முயற்சிகளுக்கு அப்புறம் இப்போ உள்ள மாடல் வந்தது. ஒரு பொருளை முதன் முறையாக கண்டுபிடிக்குறதும் வடிவமைக்குறதும்தான் கஷ்டம். அது வெளிவந்துட்டா, அதை பார்த்து எப்படி செஞ்சாங்கன்னு தெரிஞ்சு பலரும் அதே போல செய்வாங்க. அப்படித்தான் எங்களுக்கும் நடந்தது. அதுனாலதான் நாங்க அதை தடுக்குற வேலையை விட்டுட்டு எங்கள் 'ப்ராண்ட்'டில் கவனம் செலுத்தினோம்" என்கிறார் நிறுவனர்களில் ஒருவரான ஜே.கே.முத்து.

 

 

 

எப்படி 'பிசினஸ்' என்ற வார்த்தை தெரியும் முன்பே ஆடியோ கேசட் வியாபாரத்தை  தொடங்கினாரோ, அது போலவே 'பிராண்டிங்' (branding) என்ற வார்த்தையை பற்றியெல்லாம் தெரியும் முன்பே அந்த செயல்முறையை மிக சிறப்பாக செய்துள்ளார்கள் முத்து, சம்பத் ஆகிய இந்த இரு நண்பர்கள். சாம்பிராணி தயாரிப்பில் இறங்கிய ஆரம்ப காலத்தில் தங்கள் பொருள்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த ஒரு கண்காட்சியில் ஸ்டால் ஒன்றை புக் செய்தார்கள். ஆர்வத்துடன் கண்காட்சிக்குத் தயாராகி ஸ்டாலை ரெடி பண்ண சென்றவர்களுக்கு அதிர்ச்சி... இவர்களுக்குப் பக்கத்திலேயே இவர்களது ஸ்டாலை மறைக்கும் விதமாக இன்னொரு ஊதுபத்தி - சாம்பிராணி ஸ்டால். இவர்களுக்குப் பிறகு அந்த ஸ்டாலை கேட்டு வாங்கியிருக்கிறார்கள் அவர்கள். இருவருக்குமே இது பாதிப்பு என்று எடுத்து சொல்லியும் கேட்கவில்லை. கவலைப்பட்டது போலவே முதல் நாள் கண்காட்சியில் மக்களின் கவனம் ஸ்ரீமதியின் மீது படவில்லை. மக்களை கவரலாம் என்று பெரிய ஆர்வத்துடன் வந்த நண்பர்களுக்குக் கடும் ஏமாற்றம். ஆனால், சூழ்நிலை எப்போதுமே நமக்கு சாதகமாக அமையாது, அதை அமைத்துக்கொள்ள வேண்டுமென்று அறிந்தவர்கள் அவர்கள். அடுத்த நாளே ஒரு ஏற்பாடு செய்தனர். மக்கள் வரும் பாதையில் இவர்களை மறைத்து ஸ்டால் போட்டிருந்த அந்த நிறுவனத்தை கண்டுகொள்ளாமல் நேரே 'ஸ்ரீமதி' ஸ்டாலுக்கு வந்தனர். அப்படி என்ன ஏற்பாடு அது? ஒரு திரைப்படத்தின் மாஸ் ஸீன் போல இருந்தது அந்தக் காட்சி. 'ஸ்ரீமதி' ஸ்டால் முன்பு பிரம்மாண்ட சாம்பிராணியை செய்து நிறுத்தி மக்களை அசரவைத்தனர் நண்பர்கள். தரமான பொருளை செய்தாலும் அதை கொண்டு சேர்க்க தடைகள் வரும், அதை சந்தித்து வெல்ல விளம்பரம் வேண்டும் என்பதை உணர்ந்தனர்.

 

srimathi giant sambrani

பிரம்மாண்ட சாம்பிராணி

 

தங்கள் தயாரிப்புக்கு மக்கள் மனதில் என்ன இடம் இருக்கவேண்டும், எப்படி சென்று சேர வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தனர். பொதுவாகவே சாம்பிராணி, ஊதுபத்தி ஆகியவை பக்தியோடும் இந்து மதத்தோடும் தொடர்புடையவையாகவே விளம்பரப்படுத்தப்படும். ஆனால், பக்திக்கும் அதை தாண்டி குழந்தைகள், பெண்களின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாகவும் ஒரு கிருமிநாசினியாகவும் சாம்பிராணியின் பலன் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இவர்கள், தங்கள் தயாரிப்பில் எங்குமே ஒரு மதத்தின் அடையாளங்களை பயன்படுத்தவில்லை. தங்கள் சாம்பிராணி பாக்கெட்டுகளில் 'பிரார்த்தனைக்கு மட்டுமல்ல' என்பதை உணர்த்தும் விதமான வாசகத்தை பயன்படுத்துகிறார்கள். இது, ஒரு வியாபார வியூகம் அல்ல. பொருளின் நன்மையை சரியாகக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறை.

 

சரி, அப்படியென்றால் வியாபாரத்துக்காக அவர்கள் செய்த வியூகம் என்ன? அதிலுள்ள மேலாண்மை பாடம் என்ன? "பொதுவா பத்தி, சாம்பிராணி பாக்கெட்டுகள் ஆரஞ்சு, மஞ்சள் என பளீர் நிறங்களில் இருக்கும். ஸ்ரீமதி சாம்பிராணி பாக்கெட்டுகள் பிங்க், மெஜந்தா சார்ந்த நிறங்களில் இருக்கும். என்ன காரணம் தெரியுமா?" என்று கேட்டார்  முத்து. என்னவா இருக்கும் என்று நாம் யோசிக்கும்போதே, "ஒரு சர்வே சொல்கிறது... 20-40 வயது பெண்களுக்கு பிடித்த நிறம் பிங்க் - மெஜந்தா என்று. 20-40 வயது பெண்கள்தான் பெரும்பாலும் வீட்டுக்குத் தேவையான பொருள் வாங்குவதை தீர்மானிப்பவர்கள். அவர்களை கவர இந்த நிறத்தில் வந்தோம்" என்று சீக்ரட் சொன்னார். பேக்கிங்கில் இப்படி என்றால் போட்டியை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேட்டோம். "போட்டிகளை எப்போதுமே தரத்தால்தான் எதிர்கொள்கிறோம். அமெரிக்காவுக்கு அனுப்பும் சாம்பிராணி என்ன தரத்தில் இருக்கிறதோ, அதே தரம்தான் நம் ஊருக்கும். ஆனாலும் விலை குறைவான புது பிராண்டுகள் வரும்போது அந்தப் போட்டியை சமாளிக்க எங்களால் தரத்தை குறைக்க முடியாது. அதே நேரம் விலையை குறைவாகவும் கொடுக்க வேண்டும் என்பதால் சாம்பிராணியின் பவரை மட்டும் குறைத்து 'வாசம்' என்னும் ப்ராண்டை கொண்டு வந்தோம். அதன் மூலம் போட்டியை கொஞ்சம் குறைக்க முடிந்தது" என்கிறார்கள்.

 

 

 

 

"இந்த ஐடியாக்கள் எல்லாம் எப்படி சார் வருகிறது? பெரும் நிறுவனங்களில் இதை 'காம்படிஷன் கில்லிங் ஸ்ட்ராட்டஜி' என்கிறார்கள்" என்ற கேள்விக்கு "அவுங்களும் நமக்குள்ள இருந்து போனவங்கதான சார்? நமக்கு அந்த ஐடியாவெல்லாம் வராதா?" என்று சிரிக்கிறார் ஜே.கே.முத்து. "நூறு முயற்சி பண்றோம் அதுல ரெண்டு வெற்றி பெறுது. அவமானங்கள், தோல்விகள் நிறைய இருக்கு சார். வெளிய தெரியுறது  வெற்றிகள் மட்டும்தான், தோல்விகள் அமுங்கிடும். ஆரம்பத்தில் எது முதல், எது லாபம்னு தெரியாம பண்ணினோம். அப்போ நிறைய இழந்துருக்கோம். அதெல்லாம் பாடமாகி இப்போ உதவுது" என்று இருவரும் சொல்லும்போது தொழில்முனைவதன் வலியும் வெற்றியும் ஒன்றாகப் புரிகிறது.

 

"வெளிநாட்டுக்கெல்லாம் ஏற்றுமதி செய்யும் தைரியம் எப்படி வந்தது? அங்கெல்லாம் தரக் கட்டுப்பாடுகள் அதிகமாயிற்றே?" என்ற கேள்வியை நாசூக்காகக் கேட்டோம். "நம்ம வீட்டுக்கு ஒரு பொருளை செய்தால் எவ்வளவு தரமாக செய்வோமோ அதே தரத்தில் வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்பதுதான் எங்கள் அடிப்படை கொள்கை. இதை முன்னாடியே சொன்னோம். அந்தத் தரம்தான் நம்பிக்கையை அளித்தது. கப் சாம்பிராணிக்கு முதலில் இங்கு கிடைத்ததை விட வெளிநாடுகளில்தான் வரவேற்பு. ஆனால் அதுவும் ஈஸியா இல்ல. ஆரம்பத்தில் நிறைய எதிர்வினைகள் வந்தன. சில நேரங்களில் எதிர்மறையாகவும்... பொருள் எப்போதும் தரமாக இருக்கும். சில நேரங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் பேக்கிங்கில், பேக்கிங் மேல் தர வேண்டிய தகவல்களில், சிறு தவறுகள் நடக்கும். சில நேரம் எண்ணிக்கையில் தவறு நடக்கும். இதெல்லாம் நமக்குதான் சின்ன தவறு. அவுங்களுக்கு இது ரொம்ப பெருசு. உடனே போன் பண்ணி, எங்களை திட்டினாலும் பரவாயில்ல... மொத்தமா 'இந்த இந்தியாக்காரங்களே இப்படித்தான், எதுவும் ஒழுங்கா இருக்காது'னு சொல்லுவாங்க. எங்களுக்கு கோபமாகவும் சங்கடமாகவும் இருக்கும். எங்கள் ஊழியர்களிடம் இதை குறிப்பிட்டு சொல்வோம். 'நம்ம நாட்டு பேரை காப்பாத்தணும், தவறில்லாம செய்ங்க'னு. இப்போதெல்லாம் சிறு தவறுகளும் கூட நடப்பதில்லை" என்று சொல்லி சிரித்தார்கள்.

 

உலகமெங்கும் நோய்கள், கிருமிகள் குறித்த பயம் மிகுந்திருக்கும் இந்தக் காலகட்டத்தில் சாம்பிராணி போன்ற நம் பாரம்பரிய கிருமிநாசினியை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதை தரமாகத் தரவேண்டும் என்ற உறுதியுடன் வெற்றிகரமாக  செயல்பட்டு வரும் 'ஸ்ரீமதி சாம்பிராணி மற்றும் அகர்பத்திகள்' நிறுவனத்தின் ஜே.கே.முத்து - சம்பத்குமார் இருவரின் கதையும் சுவாரசியமானது, நமக்கு பாடமாவது. அவர்கள் தயாரிக்கும் பொருள் நமக்கு மிகுந்த பயனளிப்பது.

 

 

Next Story

1857 கி.மீ. சைக்கிள் ஓட்டும் போட்டியில் வென்ற கொரியத் தமிழர்

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
Korean Tamil wins cycling competition

உலகம் முழுவதும் தமிழர்கள் வேலைக்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், பணிபுரியும் நாட்டில் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்து, சாதனை புரிபவர்கள் மிகவும் சிலரே இருக்கிறார்கள். அப்படி பல துறைகளிலும் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் சாதனை புரிந்த தமிழர்களைக் கவுரவிக்க, தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விழா நடத்தி விருது வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டுக்கான அயலகத் தமிழர் விருது வழங்கும் விழா 2024 ஜனவரியில், சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.  மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்த அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 14 அயலகத் தமிழர்களுக்கு விருதுகளை வழங்கினார். இதில் 58 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 உலகத் தமிழ்ச் சங்கங்களைச் சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் விருதுபெற்ற 14 அயலகத் தமிழர்களில், அவர்களில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகேயுள்ள குதிரைகுத்தி கிராமத்தைச் சேர்ந்த முனைவர் குருசாமி ராமன் தனித்த சிறப்புடையவர். இவருக்கு விளையாட்டில் சாதனை புரிந்த தமிழர் பிரிவில், தமிழ்நாடு அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கத்துடன் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

Korean Tamil wins cycling competition

முனைவர் குருசாமி ராமன், கொரியாவில் 1857 கிலோமீட்டர் தூரமுள்ள சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றிபெற்ற முதல் இந்தியத் தமிழர் என்ற பெருமையைப் பெற்றவர். இதன்மூலம், தமிழ்நாட்டுக்கும், கொரியாவில் வசிக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்த குருசாமி – மாரியம்மாள் தம்பதியின் மகனாக, பின்தங்கிய கிராமத்தில் பிறந்த முனைவர் ராமன் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலைக்கழகத்தில் ஜினோமிக்ஸ் பிரிவில் ஆராய்ச்சியாளராகவும் உதவி பேராசிரியராகவும் தென் கொரியாவில் உள்ள யெங்ணம் பல்கலையில் கடந்த பத்து வருடங்களாக பணிபுரிகிறார். முனைவர் ராமன், மனைவி பொன் அருணா மற்றும் மகள் அதிராவுடன் தென் கொரியாவில் வசித்து வருகிறார்.

Next Story

காவலாளி டூ கரீபியன் ஹீரோ; உத்வேகம் அளிக்கும் சமர் ஜோஸப் கிரிக்கெட் பயணம்!

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
shamar joseph cricket journey

காபாவில் ஆஸ்திரேலிய அணியைக் காலி செய்த சமர் ஜோஸப், முதல் பந்திலேயே ஸ்மித் விக்கெட் எடுத்து சாதித்த ஜோஸப், மேற்கு இந்திய தீவுகளின் அடுத்த வால்ஸா இந்த ஜோஸப் என கடந்த இரண்டு வாரமாக கிரிக்கெட் உலகம், சமூக வலைத்தளங்கள்  முழுவதும் என  சமர் ஜோஸப் பேச்சு தான். யார் இந்த சமர் ஜோஸப் ?

மேற்கு இந்திய தீவுகளில் ஒரு சிறிய கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். கிரிக்கெட் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தாலும் தன்னுடைய பொருளாதார சூழ்நிலையால் தொழில் முறை கிரிக்கெட்டில் விளையாட முடியாத நிலை. படிக்கவும் முடியாத சமர் ஜோஸப் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி ஆகப் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் மீது கொண்ட தீராப் பற்றால் விடாமுயற்சியால் கயானா அணிக்கு நெட் பவுலராக தேர்வாகிறார். செக்யூரிட்டி வேலை பார்த்துக் கொண்டே நெட் பவுலராகச் சேர்ந்து அதில் கிடைக்கும் வருமானத்தை குடும்ப தேவைக்காக பயன்படுத்துகிறார்.

இந்நிலையில், மேற்கு இந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணி என்னும் ஒரு அணி உள்ளது. அதன் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் உள்ளார். அந்த அணிக்கு அனலிஸ்ட் ஆக, கிரிக்கெட் வீரர் அஸ்வின் நண்பரான பிரசன்னா உள்ளார். கடந்த ஆண்டு கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளின் பயிற்சிக்காக நெட் பவுலிங் செய்த சமர் ஜோஸப் திறமையை பார்த்த பிரசன்னா, ஜோஸப்பை கூடுதல் வேகமாக பந்து வீச சொன்னபோது, அப்படியே செய்து அசத்த, கேப்டன் இம்ரானிடம், இவரை அணியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறார். அன்று தான் தொழில் முறை கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அடுத்த போட்டியிலேயே கயானா அமேசான் வாரியர்ஸ் அணிக்காக களமிறங்கினார். கடந்த வருடம் கயானா அணியும் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முதல் தர போட்டிகளில் பங்குபெற்று சிறப்பாக ஆடி, தேசிய அணியில் இடம் பிடித்தார். தன் அறிமுக டெஸ்ட் ஆட்டத்திலேயே உலகின் மிக்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படும் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தின் விக்கெட்டை தனது கிரிக்கெட் கேரியரின் முதல் பந்திலேயே வீழ்த்தி அசத்தினார். அந்த முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தாலும் பரபரப்பான இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணிக்கு 217 ரன்கள் என்ற  இலக்கு. எளிதாக வென்று விடுவார்கள் என்று நினைத்த போது, சமர் ஜோஸப்பின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். சிறப்பாக பந்து வீசிய சமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிக்கு முக்கிய காரண்மாக அமைந்தார். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று அசத்தியுள்ளார். இரண்டாவது இன்னிங்சில் பேட் செய்த போது ஸ்டார்க் வீசிய பந்து சமர் ஜோஸப் பாதத்தை பதம் பார்த்து வெளியேறிய போதும், பதறாமல் பந்து வீசி ஆஸ்திரேலிய அணியை காபா மைதானத்தில் வீழ்த்த உறுதுணையாக இருந்தார். காபாவில் ஆஸியை வீழ்த்த முடியாது என்ற மாயையை இந்திய அணி முதலில் தகர்த்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி இனி டி 20 அணி மட்டுமே என்று விமர்சித்தவர்களே வியக்கும் வண்ணம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.

வால்ஸ், மார்ஷல், ஆம்ப்ரோஸ், மைக்கேல் ஹோல்டிங் என வேகப்பந்து வீச்சுக்கு புகழ் பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு அப்படி பெயர் சொல்ல ஒரு வீரர் இல்லையே என்ற ஏக்கத்தைத் தீர்க்க இந்த சமர் ஜோஸப் இருக்கிறார் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியின் ரசிகர்களும், உலக கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்கள், அவர் வாழும் பராகரா என்ற கிராமத்தில் 2018 வரை இண்டர்நெட் இல்லை, ஆனால் தற்போது இண்டர்நெட் முழுவதும் அவர் பேச்சு தான் எனவும், காவலாளி டூ கரீபியன் ஹீரோ எனவும் சமர் ஜோஸப் பற்றி சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர். 

- வெ.அருண்குமார்