
வெளிநாடுகளில் பாம்பு சாப்பிடுவார்கள் என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். இங்கு அந்த நடைமுறை இல்லை என்றாலும் ஆச்சரியமாக நாம் பார்க்கும் அந்த ஸ்நேக் டயட் முறை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா நம்மிடம் விரிவாக விளக்குகிறார்.
உலக அளவில் பல்வேறு வகைகளிலான டயட்டுகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த ஸ்நேக் டயட். உண்மையில் பாம்பை சாப்பிடுவது ஸ்நேக் டயட் அல்ல. பாம்பு போல் சாப்பிடுவது தான் ஸ்நேக் டயட். பொதுவாக பாம்புகள் உண்ட உணவு செரிக்கும் வரை அடுத்த உணவைத் தேடாது. நினைத்தபோதெல்லாம் சாப்பிடாமல் 10 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை ஆரோக்கியத்திற்காக சாப்பிட வேண்டும் என்று சொல்லும் முறையே ஸ்நேக் டயட்.
பல இடங்களில் மாதக்கணக்கில் சாப்பிடாமல் இருப்பவர்கள் இருக்கிறார்கள். அப்படி சாப்பிடாமல் இருக்கும்போது உடலுக்குத் தேவையான உப்பு கலவைகளை கெமிக்கலாக (ஸ்நேக் சால்ட்) உடலுக்குள் செலுத்துவார்கள். உடல் எடையை சீக்கிரம் குறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் டயட் தான் இது. இதை நானே 9 நாட்கள் செய்திருக்கிறேன். ஆனால் மற்றவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இதைச் செய்யக்கூடாது. உணவு எடுத்துக் கொள்ளாமல் அதற்கு பதிலாக பல நாட்கள் ஸ்நேக் ஜூஸ் குடித்தே வாழும் முறை இது.
ஸ்நேக் டயட் முறையை 48 மணி நேரம் பின்பற்றினால் உடலுக்கு எந்தத் தீங்கும் வராது. பக்தியால் நாம் இருக்கும் விரதம் போன்றது தான் இது. இந்த டயட்டின் முதல் நிலை 48 மணி நேரம் எதுவும் உண்ணாமல் இருப்பது. இரண்டாம் நிலை எதுவும் உண்ணாமல் ஜூஸ் மட்டும் குடித்து உயிர் வாழ்வது. மூன்றாம் நிலை என்பது கொஞ்சம் உணவு எடுத்துக்கொண்டு மீண்டும் டயட் முறைக்குச் செல்வது. தேவையான கலோரிகளை எடுத்துக்கொண்டால் போதும் என்பதுதான் இந்த டயட் நமக்கு சொல்லும் செய்தி. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் மட்டும் இந்த முறையை முயன்று பார்க்கலாம். ஆனால், மருத்துவரின் ஆலோசனை என்பது இதில் மிக மிக முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.