நம்மை விட பெரிய மிருகங்களை சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்களே அது எந்த விதத்தில் சரியானது? பீஃப் சாப்பிடுவது நல்லதா, கெட்டதா என்ற கேள்வியை பிரபல டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் நக்கீரன் யூடியூப் சார்பாக கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
மருத்துவ முறையில் எந்த விலங்குகளின் உணவையும் ஏற்பதும் மறுப்பதும் முடியாது அது கலாச்சாரம் சார்ந்தது அவ்வளவு தான். மாமிச உணவு என்பதை அனிமல்ஸ் புரோட்டீன் என்று மருத்துவ முறையில் சொல்கிறோம். எந்த விலங்கையும் குறிப்பிடுவதில்லை. அதே சமயத்தில் விலங்குகளிலிருந்து கிடைக்கிற பால், முட்டை, தோல், உறுப்புகள், தசை, கால்கள் எல்லாமே அனிமல்ஸ் புரோட்டீன் என்ற பட்டியலில் தான் அடங்கும். எல்லா விலங்கு உணவுகளிலும் நாம் எதிர்பார்ப்பது உயர் ரக புரதம் தான்
உலக மக்கள் தொகையை கணக்கில் எடுக்கும் போது எட்டு கோடி மக்களுக்கும் விவசாயத்தின் மூலம் மட்டுமே உணவை நிறைவாகத் தந்து விட முடியாது. அதனால் தான் மாமிச உணவை மையமிட்ட உணவு வகைகளைத் தருகிற வியாபாரம் உள்ளுக்குள் வருகிறது. சீனாவில் பூச்சிகளை உண்ண ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் பூச்சிகளில் தான் புரதம் அதிகமாக உள்ளது. எளிமையாக கிடைக்கக் கூடிய, கொல்லுவதற்கும் எளிதாக சமைக்கவும் எளிதாக உள்ளதாகச் சொல்லி செய்கிறார்கள்.
நமக்கு அந்த பூச்சி உணவுகள் அருவருப்பு தன்மையை தரக்கூடியது. அப்படித்தான் பீஃப் சாப்பிடுவதையும் பார்க்கப்படுகிறது. நமது மூதாதையர்கள் சாப்பிடவில்லை, அதனால் நானும் சாப்பிடவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் வீடுகளில் சமைக்காமல் வெளியே போய் சாப்பிடுகிறார்கள். கேரளாவில் அதிக அளவில் மாட்டுக்கறி உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. அது பொருளாதாரம் சார்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஒரு மாடு பலருக்கு உணவாகும் என்ற அடிப்படையில் அதிகம் எடுத்துக் கொள்கிறார்கள்
ஆட்டுக்கறியில் கிடைக்கிற புரதம் போல் தான் மாட்டுக்கறியிலும் இன்னும் சொல்லப்போனால் பன்றி இறைச்சியிலும் இருக்கிறது அதனால் இளம் வயதில் அனைவரும் பீஃப் சாப்பிடலாம். வயதான பிறகு ஜீரனத்தன்மையைப் பொறுத்து சாப்பிடலாம். எந்த விதமான கெடுதலும் கிடையாது.