Skip to main content

''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’'

Body

மனிதனை மனிதனாக மதிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு இதுவும் மிக முக்கியம். பண வசதி படைத்தவர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், அதிகாரம் படைத்தவர்கள், உடல் வலு பெற்றவர்கள் போன்றவர்களை மட்டுமே மதிப்பதுதான் பலரது செயலாக இருக்கும். இது உண்மையான மதிப்பா என்றால் நிச்சயமாக இருக்காது. பயம் காரணமாக வரும் போலித்தனமான மதிப்பு மரியாதையாகவே இதனைக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்களை விடவும் வசதி குறைவானவர்கள், அதிகாரம் அற்றவர்கள், அவர்களை விட குறைந்த பதவியை வகிப்பவர்கள், நோஞ்சான்கள் போன்றவர்களைக் கண்டால் கொஞ்சம்கூட மதிப்பு தருவதே கிடையாது. புழு பூச்சியைப் போல அவர்களைப் பார்ப்பார்கள். அலுவலக செக்யூரிட்டி தன்னைப் பார்த்ததும் வணக்கம் செய்ய வேண்டும் என்று உயர் அதிகாரிகள் எதிர்பார்ப்பர். அப்படியே அவர் சல்யூட் வைத்தால் பதிலுக்கு வணக்கம் தெரிவிக்க மாட்டார்கள். அதனைக் கண்டுகொள்ளாததுபோல செல்வார்கள்.

security images

 

வணக்கம் தெரிவித்தால் அது மரியாதைக் குறைவு என்ற கருத்து உயர் மட்ட மனிதர்களிடம் நிறைந்திருக்கிறது. பதில் வணக்கம் செய்யவில்லை என்றால் செக்யூரிட்டியின் மனம் வலிக்கத்தானே செய்யும். அவர்களும் மனிதர்கள் தானே? இறைச்சிப் பதப்படுத்தப்படும் தொழிற்சாலை ஒன்றில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் ஒருவர் ஒருநாள் மாலை நேரத்தில் இறைச்சியைப் பதப்படுத்த அமைக்கப்பட்டுள்ள ஃப்ரீஸர் அறைக்குள் நுழைந்தார். அங்கே ஏதோ சோதனை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அறையின் தானியங்கிக் கதவு பூட்டிக் கொண்டுவிட்டது. அவர் உள்ளே மாட்டிக் கொண்டார்.யாரையாவது உதவிக்கு அழைக்கலாம் என்று செல்பேசியைத் தேடியபோது அதனை மேஜை மீதே வைத்துவிட்டு வந்தது நினைவு வந்தது. இப்போது என்ன செய்வது என்ற பயம் வந்துவிட்டது. பயங்கரமாகக் கத்திக் கூச்சலிட்டார். கதவை முடிந்த வரையில் பலமாகத் தட்டி உதவி செய்ய யாராவது வருமாறு அழைத்தார்.ஒரு பயனும் இல்லை. வெளியே யாருக்குமே அவர் எழுப்பிய ஓசை கேட்கவே இல்லை. ஐஸ் கட்டிகளின் குளிர் மிகப் பயங்கரமாக இருந்ததால் ஒரு கட்டத்தில் கை, கால்கள் அனைத்தும் மரத்துப் போயின. குரல் எழுப்பக்கூட வலுவின்றி சோர்ந்து போனார்.  இப்படியே இன்னும் சில நிமிட நேரம் நீடித்தால் தான் இறக்கப் போவது உறுதி என்ற பயம் அவருள் எழுந்தது. 

மனம் தளர்ந்து மயங்கி விழப்போகிற நிலையில் திடீரென்று கதவு திறப்பதுபோல சப்தம் கேட்டது. மகிழ்ச்சி துளிர்விட பார்த்த போது, தொழிற்சாலை காவலாளி கதவைத் திறந்தபடியே, ‘சார்... சார்..’ என்று குரல் கொடுத்தபடியே உள்ளே வந்தார்.சாக இருந்தவனைக் காப்பாற்றிய அந்தக் காவலாளியை கட்டி அணைத்தார் அதிகாரி. பின்னர் அவரிடம், ‘‘நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?’’ என்று சந்தேகத்தோடு கேட்டார்.‘‘சார் ரொம்ப வருஷமா இந்த ஃபேக்டரில வேலை பார்த்து வர்றேன். என்னை யாரும் மனுசனாவே மதிக்கறதில்லை. வணக்கம் சொன்னாலும் பதிலுக்கு சொல்றதே இல்ல. ஆனா நீங்க மட்டும்தான்  காலைலயும், சாயங்காலமும் நான் சல்யூட் அடிச்சா பதிலுக்கு திருப்பி வணக்கம் சொல்வீங்க. அதனால உங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். இன்னிக்குக் காலைல நீங்க வணக்கம் சொன்னீங்க. ஆனா சாயங்காலம் எல்லாரும் திரும்பிப் போயிட்டாங்க. ஆனா பதிலுக்கு வணக்கம் சொல்ற உங்கள மட்டும் காணோம். அதனால சந்தேகம் வந்திச்சி. ஒவ்வொரு இடமா உங்களைத் தேடினேன். அப்பத்தான் இங்க உங்களக் கண்டுபிடிச்சேன்’’ என்றார் காவலாளி.மனிதனை மனிதனாக மதித்துப் பழகிய குணம் இருந்ததால்தான் காவலாளிக்கு பதில் வணக்கம் செய்தார். அதுதான் இன்று அவரது உயிரையே காப்பாற்றி இருக்கிறது. அவரைத் தேடிக் கண்டுபிடிக்கிற அளவிற்கு காவலாளிக்குத் தோன்றி இருக்கிறது என்றால் உண்மையான முன்னேற்றம் என்பது இதுதான். பணத்தில் மட்டுமல்லாமல் பிறரின் மனத்திலும் இடம் பிடிப்பது மட்டுமே உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்