Skip to main content

“தினமும் பல் துலக்காவிட்டால் வரும் பிரச்சனைகள்” - விளக்குகிறார் பல் மருத்துவர் அருண் கனிஷ்கர்!

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

"Problems that come from not brushing your teeth daily" - explains dentist Arun Kanishkar

 

சரியான முறையில் பல் துலக்குவதன் அவசியம் குறித்தும், தவறினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பல் மருத்துவர் டாக்டர் அருண் கனிஷ்கர் நமக்கு விளக்குகிறார்.

 

சரியான முறையில் நாம் பல் துலக்கவில்லை என்றால் ஈறு சம்பந்தமான நோய்கள் நமக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பல்லில் ஈறு வீக்கம் பாதிப்பு ஏற்படும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிட்டால் இதை குணமாக்குவது எளிது. நம்முடைய பற்களை சுற்றி எலும்புகள் இருக்கின்றன. பற்களுக்கும் எலும்புகளுக்கும் நடுவில் ஃபைபர்கள் இருக்கும். கிருமிகள் இந்த எலும்பு பகுதியை அடைந்துவிட்டால் பீரியண்டோன்டிடிஸ் என்கிற ஒருவகை பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். 

 

பீரியண்டோன்டிடிஸ் என்ற பல் சம்பந்தப்பட்ட நோயில் எலும்பு கொஞ்சம் கொஞ்சமாக தேய ஆரம்பிக்கும். பற்களின் வேர் பகுதி வெளியே தெரிய ஆரம்பிக்கும். இந்த நோய் ஏற்படும்போது உடனடியாக பல் மருத்துவரை அணுக வேண்டும். இந்த நேரத்தில் பற்களின் வேர் பகுதிகளை பிரஷ் மூலம் நாம் சுத்தப்படுத்த வேண்டும். எனவே ஈற்றில் அழற்சியாக இருக்கும் போதே அதைச் சரி செய்து விடுவது நல்லது. இல்லையென்றால் அது பீரியண்டோன்டிடிஸ் எனும் நிலைக்குச் சென்றுவிடும். இதனால் பல் ஆடி கீழே விழும் நிலையும் ஏற்படும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஏற்படும்.

 

பிறப்பிலேயே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை போன்ற நோய்கள் இந்த நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்த நோயை நிச்சயம் குணப்படுத்த முடியும்.