நேற்று வரை துணிப்பைகளும், பாத்திரங்களும் பயன்பட்ட நிலையில், அதைத் தவிர்த்து கௌரவம் எனும் பெயரில் இப்பொழுது பாலிதீன் பைகளைத் தூக்கி சுமந்து நமது வருங் காலத்தை விஷமாக்குகிறோம். அரசும், தன்னார்வலர்களும் பாலீதீனை தவிர்ப்பீர் என காது கிழியக் கத்தினாலும் செவி மடுப்பதில்லை நாம். " நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு எங்கள் சந்திதியினரைக் காக்கின்ற கடமை இருக்கு" என பனை ஓலையில் பல தரப்பட்ட வடிவங்களை செய்து அசத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் நாகலாபுரம் மக்கள்.
"கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு பனை ஓலைப் பொருட்கள் எந்த வடிவத்திலாவது அவர்களுடன் உறவாடிக்கொண்டு தான் இருக்கின்றது. திருமணப்பெண்ணிற்கு முறம், கல்யாண சீர்வரிசைப்பெட்டி, பனை ஓலை விசிறி என்றும் பிறந்த குழந்தைக்கு கிலுகிலுப்பை, மிட்டாய் பெட்டி என்றும் தரம் பிரித்து பனை ஓலைகளில் வித்தை காட்டுபவர்கள் ஒட்டு மொத்த குடும்பத்திற்கும் உப்பு முதற்கொண்டு அனைத்தையும் சேமித்து வைக்கும் கலனாய் பனை ஓலைப்பெட்டியை செய்வது சிறப்பான ஒன்று. அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பதற்கேற்றார் போல் ஓலைப்பெட்டியில் வைக்கப்படும் உணவுப்பொருள் பனை ஓலைப்பெட்டியால் தனி மணத்தை பெறும் என்பார்கள். அந்த வகையில் பனை ஓலை பெட்டியில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆரோக்கியம் தருவதாகவும், அதே நேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பல நாட்கள் கெடாமலும் இருக்கும். இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். வீட்டில் தான் இப்படி என்றால் பலகாரக்கடைகளிலோ இனிப்பு, கார வகை திண்பண்டங்களை பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்துக் கொடுப்பார்கள். இதனால் பனை ஓலைப்பெட்டிகள் இல்லாத கடைகளையும் பார்த்தது கிடையாது. இப்பொழுது இந்த நவீன உலகில் எளிதில் கையாளக்கூடியப் பாலீதீன் பைகளை தூக்கி அலைய உணவும், சந்ததியும் விஷமானது தான் மிச்சம். அதனால் தான் பனை ஓலைப்பெட்டித் தயாரிப்பில் அக்கறை காட்டுகிறோம். இப்படியாவது பாலீதீனைத் தவிர்க்கலாமே?" என்றார் நாகலாபுரத்தை சேர்ந்த விவசாயி ஒருவர்.
ஈரப்பதமாய் எடுக்கப்படும் பனை ஓலைகள், வேண்டுகின்ற வடிவமாய் வெட்டிக் கிழிக்கப்பட்டு, கொட்டான்கள், கிலுப்பைகள் என தயாரிப்புக்களாக மாறுகிறது. இதில் கழிவு என்பதே இல்லை. விசிறிக்கு கிழிக்கப்படும் கழிவுகள் பனைமரக்கருப்பட்டி வைக்கப்படும் பெட்டிகளில் வடிவமாய் மாறுகிறது. "எதிர்கால சந்ததியினரைக் காக்கும் மகிழ்வுடனே போராடி வரும் எங்களுக்கு எங்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க பனை ஓலைத் தொழிலுக்கு அரசு மானியம் ஏதாவது கொடுத்தால் மிகச்சிறப்பாக இருக்கும்" என்கின்றனர் பனை ஓலையில் கலை நயம் கற்பிக்கும் நாகலாபுரம் மக்கள். மீண்டும் செக்கு எண்ணெய், பனை வெல்லம் என்று இயற்கையையும் ஆரோக்கியத்தையும் நோக்கிச் செல்லும் இளைஞர்கள் மத்தியில் பனை ஓலை வடிவங்களுக்கும் 'பவுசு' கூடியிருப்பது என்னவோ நிதர்சனமான உண்மை.