Skip to main content

ஒரு ஐடியா இந்த உலகை மாற்றியது - லேரி பேஜை கூகுள் செய்வோம்!  

Published on 26/03/2018 | Edited on 26/03/2018

26 மார்ச் - கூகுள் நிறுவனர்  லேரி பேஜ் பிறந்தநாள் 

சென்னையில் இருந்துகொண்டு கேப்டவுனில் தண்ணீர் இல்லையென்பது நமக்குத் தெரிகிறது. கிறிஸ்டோபர் நோலனின் இரண்டாவது படம், புத்தாண்டைக் கொண்டாட சிறந்த இடம், பாங்காக்கின் பெஸ்ட் ஹோட்டல், ஃபிரான்ஸின் சிறந்த மாடல்... என நாம் தெரிந்து கொள்ள நினைக்கும் அனைத்தையும் தன் வழி கொண்டுவந்து இன்று நம் அறிதலின் வாயிலாக இருப்பது கூகுள். ஒரு வகையில் நம்மை சோம்பேறியாக்கி இருந்தாலும், ஒருவரது சிந்தனை இந்த உலகத்தின் வாழ்க்கை முறையையே மாற்ற முடியும் என்பதன் நிகழ்கால உதாரணம் கூகுள். 

 

Larry pageகூகுளின் இந்த வெற்றிக்கு இருவர் தான் காரணம், ஒருவர் 'லேரி பேஜ்' மற்றொருவர் 'செர்ஜி பிரின்'. இவர்கள் இருவரும் இல்லையெனில் இந்த கூகுள் என்ற ஒன்றை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். வேண்டுமானாலும் வேறொரு பெயரில் வேறு யாராவது கண்டுபிடித்திருக்கலாம். தற்போது இவர்கள் தானே கண்டுபிடித்திருக்கிறார்கள்? அதிலும் லேரிக்கு இன்று நாற்பத்தி ஐந்தாவது பிறந்தநாள் வேறு. எல்லோரும் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிவிட்டு அவரைப் பற்றிய சுவாரசிய தகவல்களை தெரிந்துகொள்வோம்.

 • கூகுளின் தாய் நிறுவனத்தின் பெயர் அல்ஃபபெட். அந்த நிறுவனத்தை நிறுவிய இருவரில் ஒருவர் லேரி பேஜ். அதுமட்டுமில்லை, இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் (CEO - Chief Executive Officer). சுந்தர் பிச்சையையும் இவரையும் குழப்பி கொள்ளாதீர்கள். சுந்தர் கூகுளுக்கு சிஇஓ, ஆனால் இவரோ அல்ஃபபெட் என்னும் கூகுளின் மேலிடத்துக்கு சிஇஓ.
   
 • கூகுள் என்ற வலைதளத்தை இன்று 300 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளில் கூகுளில்  இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட விஷயங்களைத் தேடிப் பார்க்கிறார்கள். இணையத்திலேயே அதிகமாக பார்வையாளர்களை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அல்ல, நொடிக்கு நொடி அதிகமாகிறது.
   larry bin
   
 • லேரி பேஜ்ஜூம் ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்சும் நல்ல நண்பர்கள். தொழில் நிமித்தமாகவும் தனிப்பட்ட முறையிலும் இருவருக்கும் நல்ல உறவு இருந்தது என்கின்றனர்.
   
 • லேரியின் பெற்றோர்களும் கல்லூரி கணினி ஆசிரியர்களாக இருந்ததால் லேரிக்கும் கணினியின் மீது சிறு வயதிலிருந்தே மோகம் இருந்துள்ளது. போகப் போக அதில் வல்லுனராக வருவார் என்று அன்று யார் கண்டது?
   
 • அந்தக் காலகட்டத்தில் அரிதாக இருந்த கணினியை தன் பள்ளிப் படிப்பின் போதே வீட்டில் வைத்து கற்றுக்கொள்ளும் அளவுக்கு இவருக்கு வசதி இருந்தது. பெற்றோரும் கல்லூரி ஆசிரியர்கள் என்பதால் அறிவியல், கணினி சார்ந்த புத்தகங்களையும் வாசிக்க வாய்ப்பிருந்தது.
   
 • மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போதே இன்க்ஜட் பிரின்டரை உருவாக்கியுள்ளார். 'மேஸ் அண்ட்  ப்ளூ' என்ற  சோலார் கார் குழுவில் கல்லூரிப் படிப்பின் போது சேர்ந்து, அந்த சோலார் கார் உருவாக்கத்திற்காக உதவியுள்ளார்.
   larry page 1
   
 • லேரியும், பிரினும் 1995 ஆண்டில் தான் முதல் முறையாக சந்தித்துக்கொண்டனர். முதல் சந்திப்பில் இருந்து, கூகுளை நிறுவியது முதல் தற்போதுவரை அவர்களுக்குள் வாக்குவாதம் என்ற ஒன்று இல்லாமல் எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்று சொல்கின்றனர்.     
   
 • ஒரு சின்ன குடோனில் ஆரம்பிக்கப்பட்ட இவர்களது நிறுவனம் இன்று உலகமெங்கும் படர்ந்துள்ளது. இவர்கள் முதல் முதலில் வாடகைக்கு எடுத்த குடோன் யாருடையது தெரியுமா? யூ-ட்யூப் நிறுவனத்தின் தற்போதைய சிஇஓ சூசனுடையது.  
   
 • 45 வயதாகும் லேரி ஒரு நோய் காரணமாக தன் குரலை சிறிது சிறிதாக இழந்து வருகிறார்.


ஒரு தனி மனிதனின் எண்ணம், கனவு இந்த உலகத்துக்கே பயன்படும், ஒரு நிறுவனம் இந்த உலகின் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படும் என்று நிறுவி ஆசைகளுக்கு எல்லை எதுவுமில்லை என்று உணர்த்தியிருக்கிறார் லேரி. ஹாப்பி பர்த்டே லேரி!                    

 

Next Story

விரைவில் முதல்வரைச் சந்திக்க இருக்கும் கூகுள் அதிகாரிகள்

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Google officials who will meet the Prime Minister soon

தமிழகத்தில் கூகுள் நிறுவனத்தின் செல்போன் தயாரிக்கும் ஆலை உருவாக இருக்கும் நிலையில் விரைவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை கூகுள் அதிகாரிகள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தின் சென்னையில் விரைவில் கூகுள் நிறுவனத்தின் 'பிக்சல்' செல்போன் தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாக அமைகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகி இருந்தது. பாக்ஸ்கான் நிறுவனத்துடன் இணைந்து கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனம் அமைய உள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கை வைத்து மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து முதலீட்டாளர்களை ஈர்த்து தமிழக அரசு உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியிருந்தது. இதனால் தமிழகத்தில் 30 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்கா சென்றுள்ள நிலையில் உலகப் புகழ்பெற்ற கூகுள் நிறுவனத்தின் தலைமையில் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், இந்தப் பேச்சுவார்த்தையின் பயனாக கூகுள் நிறுவன அதிகாரிகள் கூகுள் பிக்சல் செல்போன் தயாரிப்பு நிறுவனத்தை சென்னையில் அமைக்க முன்வந்துள்ளனர். இது தொடர்பாக தமிழக முதல்வரை விரைவில் சந்திக்க கூகுள் அதிகாரிகள் சென்னை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடக்கம்; ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா? 

Published on 06/03/2024 | Edited on 07/03/2024
Too much loss per hour for Block Facebook, Instagram

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, மார்க் ஜுக்கர்பெர்க் என்பவர் தொடங்கிய நிறுவனம் ஃபேஸ்புக். உலகம் முழுவதும் உள்ள இணைய பயனர்களுக்கு தங்களது கருத்துகள் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் முன்னிலையில் உள்ளது. தற்போது, மார்க் ஜுக்கர்பெக் மெட்டா எனும் நிறுவனத்தைத் தொடங்கி அதன் கீழ் ஃபேஸ்புக் மற்றும் மற்றொரு பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.

உலகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பிரபலமான சமூக வலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள், திடீரென்று உலகம் முழுவதும் நேற்று (05.03.2024) இரவு 9 மணியளவில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை முடங்கியிருந்தது. சமூக வலைத்தள கணக்குகளின் பக்கங்கள் தானாகவே லாக் அவுட் (Logout) ஆகியதால் பயனர்கள் தவித்து வந்தனர். மேலும் தகவல் தொடர்பு கிடைக்காததால் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் இணையவாசிகள் அவதியடைந்தனர். இதனையடுத்து, தொழில்நுட்பக் கோளாறுகள் சரி செய்யப்பட்டு 2 தளங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தன. 

இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் 1 மணி நேரம் முடங்கியதால் அமெரிக்க பங்குச் சந்தையில் மெட்டா பங்குகளின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் 23,127 கோடி இழந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

‘புளூம்பெர்க்’ என்ற நிறுவனம் நேற்று (05-03-24) வெளியிட்ட உலகப் பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலில், 179 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் உலகின் 4வது பெரும் பணக்காரராக மெட்டா சி.இ.ஓ மார்க் ஜுக்கர்பெர்க் இருந்தார். இதற்கிடையே, ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் நேற்று 1 மணி நேரம் முடங்கியதால், மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் $2.79 பில்லியன் டாலர் குறைந்து தற்போது $176 பில்லியனாக உள்ளது. இருப்பினும், உலகின் நான்காவது பணக்காரர் என்ற நிலையை மார்க் ஜுக்கர்பெர்க் தக்க வைத்துள்ளார்.