Skip to main content

‘நீ சிங்கமாக இரு. நாயாக இருக்காதே’

Body

பிரச்சனைகளைப் பற்றி நினைத்த மாத்திரத்திலேயே வயிற்றுக்குள் ஒரு பயம் உருளத் தொடங்கும். மிகப் பெரிய பூதம் ஒன்றும் பின்னால் நிழல் போலத் தொடர்ந்து வருவதாகப் பயம் தோன்றும்.இதனால் பிரச்சனையை சமாளிப்பது நிச்சயமாக முடியவே முடியாது என்ற தவறான முடிவை மனம் மேற்கொண்டுவிடும்.இந்த எண்ணம் தோன்றிய உடனேயே வாழ்க்கையில் நிம்மதி தொலைந்து போய்விடுகிறது. வாழவே பிடிக்காத ஒரு வெறுப்பு வந்து ஆட்கொள்கிறது.எரிச்சல், கோபம், அழுகை எல்லாம் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்கிறது. அப்புறம் எவ்வளவு துரத்தினாலும் வெட்கம், மானமே இல்லாமல் நம்முடனேயே அவை குடித்தனம் நடத்துகிறது. சந்தோஷம் எங்கே என்று தேடுகிற அளவிற்கு நிலைமை மாறிவிடுகிறது.அதேநேரத்தில் பிரச்சனையைக் கண்டு அஞ்சிநடுங்காமல் தைரியமாக அதனை நேருக்கு நேராக எதிர்த்து நின்றால் பயம்  சட்டென்று நம்மைவிட்டு நீங்கிவிடுகிறது.மனதில் மட்டுமல்லாமல் உடம்பிலும் புதிய தெம்பு வருகிறது. தைரியம் வந்து குடியேறுகிறது. மனம் இறக்கை கட்டிப் பறக்கத் துவங்குகிறது.எனவே பிரச்சனையைக் கண்டு பயந்து தலைதெறிக்க ஓடக் கூடாது. தைரியமாக, அச்சத்தை உதறித் தள்ளிவிட்டு  எதிர்கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
 

confidential story

மன உறுதியும் தன்னம்பிக்கையும் பிரச்சனைக்குத் தெளிவான தீர்வைக் காண உதவும்.இளைஞன் ஒருவனைப் பிரச்சனைகள் துரத்திக் கொண்டே இருந்தது. அவனும் ஒவ்வொரு பிரச்சனைகள் வரும்போதும் அதனைப் பார்த்துப் பயந்து விலகி ஓடினான். அவ்வாறு ஓட ஓட மேலும் மேலும் பிரச்சனைகள் அவனை விரட்டத் தொடங்கியது.ஒரு கட்டத்தில் அதற்கு மேலும் ஓட முடியாமல் சோர்ந்து போனான். மூச்சிரைத்தது. மனம் களைத்துப் போனது. ஆலமரத்தின் நிழலில் வெறுத்துப் போய் அமர்ந்தான்.அப்போது அங்கே வந்த பெரியவர் ஒருவர் அவனது பரிதாப நிலையைப் பார்த்து விசாரித்தார்.ஆறுதலாக அவர் கேட்டதும் பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காமல் இதுவரை குமுறிக் கொண்டிருந்த அவன் வெடித்து அழ ஆரம்பித்து விட்டான். எவ்வளவுதான் ஓடினாலும் பிரச்சனைகள் துரத்திக் கொண்டே வருவதைக் கண்ணீருடன் புலம்பினான்.

அவன் தோளைத் தொட்டு ஆறுதலாக அணைத்த பெரியவர், ‘‘நீ சிங்கமாக இரு. நாயாக இருக்காதே’’என்றார்.‘என்ன சொல்கிறார் இவர்?’ என்று புரியாத குழப்பத்துடன் அவரைப் பார்த்தான் அவன்.‘‘புரியவில்லையா? விளக்கிச் சொல்கிறேன். சிங்கத்தை நோக்கி ஒரு பொருளைத் தூக்கி எறிந்தால் அது அந்தப் பொருளை நோக்கி ஓடாது. மாறாக அந்தப் பொருளை எய்தவர் யாரோ அவர் மீது சீற்றத்துடன் பாயும். ஆனால் அதேநேரத்தில் ஒரு நாயை நோக்கி ஒரு பொருளை எறிந்தால் அது எய்தவரை நோக்கி ஓடாது. அந்தப் பொருளை நோக்கித்தான் ஓடும். அதனால்தான் உன்னை சிங்கம் போல இரு என்று சொன்னேன்’’ என்றார் பெரியவர்.அதாவது பிரச்சனையைக் கண்டு பயந்து ஓடக்கூடாது. தைரியமாக அதனை எதிர்க்க வேண்டும். ஆனால் அதற்காக முட்டாள்தனமாகவும் இருக்கக்கூடாது. பிரச்சனையின் அடிப்படை என்னவென்பதைத் தெரிந்து கொண்டு அதை நோக்கி உங்கள் செயலைத் திருப்பிவிட வேண்டும். அப்போதுதான் பிரச்சனையைத் துரத்தி வெற்றியை மீட்க முடியும்.
 

lion image

சுவாமி விவேகானந்தர் ஒருமுறை காசிக்கு யாத்திரை மேற்கொண்டிருந்தார். அங்குள்ள துர்க்கை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். பின்னர் திரும்பினார்.அவர் நடந்து வந்த பாதையின் ஒருபுறம் மிகப் பெரிய மதில் சுவர். இன்னொரு புறமோ குளம். நடுவில் ஒற்றையடிப் பாதை. கவனமாக அதில் நடந்து கொண்டிருந்தார்.அப்போது திடீரென்று எங்கிருந்தோ குரங்குகள் பட்டாளம் ஒன்று அங்கு வந்து சேர்ந்தது. இவர் மீது அவை கோபமாகப் பாய்ந்தது. பயந்துவிட்டார் சுவாமி. திரும்பி ஓட ஆரம்பித்தார்.இவர் பயந்து ஓடுவதைப் பார்த்ததும் குரங்குகளுக்கு ஒரே ஆனந்தம். அவையும் இவரைத் துரத்த ஆரம்பித்தன.அப்போது அங்கே நின்றிருந்த வயதான துறவி ஒருவர், ‘‘திரும்பி ஓடாதே! அவற்றைத் தைரியமாக எதிர்த்து நில். பயந்து ஓடிவிடும்’’ என்று நம்பிக்கை கொடுத்தார்.அவர் சொன்னதுபோல சட்டென்று திரும்பி எதிர்த்து நின்றார் விவேகானந்தர்.இவ்வாறு சட்டென்று தங்களை நோக்கி அவர் திரும்பியதும் அந்தக் குரங்குகள் பயந்துவிட்டன. அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்து பயந்து ஓடின.இதுபோலத்தான் பிரச்சனைகளைக் கண்டு ஓடக்கூடாது. தைரியமாக அதனை எதிர்கொள்ள வேண்டும். நிச்சயமாக பிரச்சனை உங்களைக் கண்டு பயந்து நடுங்கும். உங்களை நெருங்க அஞ்சும்.இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்சனையை சுமுகமாகத் தீர்க்கும் வழிமுறைகளில் ஈடுபட வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்