Skip to main content

இளம் பெண்களுக்கு முகப்பரு வரவைக்கும்... மாதவிடாய் காலத்தில் உடல்வலி உண்டாக்கும்... எது அது? வழியெல்லாம் வாழ்வோம் #13

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

பெண்கள் நலம்: பாகம் 2

கடந்த வழியெல்லாம் வாழ்வோம் பகுதியில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் மற்றும் தாதுப்பொருட்கள் பற்றிபார்த்தோம். இந்தப் பகுதி, பெண்களுக்கு இத்தகைய ஊட்டச்சத்துக்கள் எவ்வகையில் பயன்படுகின்றன என்று பார்ப்போம். 

 

sai pallavi

 

விட்டமின் D: 

உலக அளவில் 2013ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில், 'உலகளவில் சுமார் 1 பில்லியன் மக்கள், அவர்களின் இரத்தத்தில் மிகக் குறைந்த அளவில் வைட்டமின் டி-யைக் கொண்டிருப்பதாகவும், இந்தக் குறைபாடு அனைத்து வயதினரிடையேயும், அனைத்து இனத்தினரிடையேயும் பரவலாகக் காணப்படுவதாகவும்' கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக மக்களிடம் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில், 'நோய்களை எதிர்த்துப் போராடும் திறனில், வைட்டமின் டி சத்து முதலில் கூறப்பட்டதைக் காட்டிலும், மிகக் கணிசமான பங்கை வகிப்பதாகக் கூறுகிறது. வைட்டமின் டி குறைபாடு பல்வேறு கடுமையான நோய்கள் மற்றும் நோய்த் தொற்றுகளுக்கு மிக எளிதாக ஆட்படுத்திவிடும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


விட்டமின் D என்பது கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்றவற்றை மேம்படத்தக் கூடிய ஒரு ஊட்டச்சத்து ஆகும். விட்டமின் டி சத்து உடலில் போதுமானதாக இருந்தால், அதுபுற்றுநோய், கணைய நோய், எலும்புருக்கி நோய், இதயம் மற்றும் இரத்த நாளங்கள் சம்பந்தப்பட்ட நோய்கள், சிறுநீரக   நோய், காசநோய், குளிர்காய்ச்சல், உடல் பருமன், முடி உதிர்தல் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களை நம் உடலுக்கு வர விடாமல் தடுக்கிறது. அதே போல், விட்டமின் டி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சளி,   இருமல், காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் போன்றவை வராமல் காக்கிறது.

விட்டமின் டி ஊட்டச்சத்தின் வகைகள்:

விட்டமின் D வகை ஊட்டச்சத்துக்களில் விட்டமின் D2, D3 ஆகியவை மிக முக்கியமானவை. விட்டமின் D2 என்பது உணவுகளிலிருந்து நேரடியாகப் பெறப்படும் விட்டமின். ஆனால் விட்டமின் D3 என்பது உடலின் தோல்களின் மீது சூரிய ஒளி படும்போது கிடைக்கும்   விட்டமின் ஆகும். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொலஸ்ட்ராலில் இருந்து வைட்டமின்   D-யை உடல் ஒருங்கிணைத்துக் கொள்ளும். இதன்காரணமாக, வைட்டமின் D3 ‘சூரிய ஒளி வைட்டமின்' என்றும் குறிப்பிடப்படுகிறது. விட்டமின் D2 குறைபாடு, குழந்தைகளிடம் ரிக்கெட்ஸ்   என்னும் என்புருக்கி நோயை உருவாக்குகிறது. இதனால் குழந்தைகளின் எலும்புகள் மேன்மையடைந்து,  சில  நேரங்களில் நொறுங்கியும் போகின்றன.

பெண்களின் உடல் வலிமைக்கு விட்டமின் D மிக முக்கியம். கீழே தவறி விழுவதால் உண்டாகும் எலும்பு முறிவு, ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு உதிர்வு போன்றநோய்கள் ஏற்படாமல் இருக்க சரியான அளவிலான விட்டமின் D அவசியம்.  

 

 


விட்டமின் D3 குறைபாடு இளம்பெண்களுக்கு அதிகப்படியான முகப்பருவை உருவாக்கி, அவர்களுக்கு  மனஉளைச்சலையும் தன்னம்பிக்கையின்மையையும் உருவாக்குகிறது. இது குறிப்பாக குளிர்காலங்களில் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் கால் உளைச்சல் மற்றும் அதிக உடல் வலிகள்   ஆகியவற்றுக்கும் இந்த விட்டமின் குறைபாடே காரணம். நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்ய   வேண்டிய பெண்களுக்கு ஏற்படும் கால்வலிகளுக்கு காரணமும் இதுவே.

மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நின்ற பிறகானகாலங்களில் ஏற்படும் ஹார்மோன்களின்  மாறுபாடும், பெண்களின் உடலில் விட்டமின் D3 அளவை வெகுவாகக்குறைக்கிறது. எனவே அந்த வயதில் பெண்கள் சூரிய ஒளி உடலில் படும்படியான பயிற்சிகளை மேற்கொள்வது  அவசியம்.

  sun bath

 

சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு:

பொதுவாக, சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு, அவர்கள் உணவு உண்பதன் மூலமாக கிடைக்கும்   சத்துக்கள் சரியான அளவு சென்று சேர்வதில்லை. அதன் காரணமாக அவர்கள் உடல் வலிமையிழந்து   காணப்படுவர். அதிலும் குறிப்பாக இந்த விட்டமின் டி குறைபாடு அவர்களது எலும்பை முற்றிலும்   பாதிப்புக்குள்ளாக்குகிறது. அதனால் வலுவிழந்த எலும்புகளோடு, அடிக்கடி அவர்கள் காயப்படுவதும்   நடக்கிறது. இத்தகைய காயங்களைக் குணமாக்கவும் விட்டமின் டி முக்கியம். 

 

 


கர்ப்பிணிப் பெண்களுக்கு: 

சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் கூடிய ஆரோக்கியமானகுழந்தைகளின் உருவாக்கத்திற்கு மிகவும்   முக்கியமானதான வைட்டமின் D. மேலும் இது குறைமாத பிரசவம் நிகழும் அபாயங்களையும் குறைக்க  வல்லதாகும்.

விட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகள்:

மன அழுத்தம், முதுகு வலி, உடல் பருமன், எலும்புருக்கி நோய், மல்ட்டிபிள் ஸெலரோசிஸ், ஈறு நோய்,   மாதவிடாய்க்கு முந்தைய பிணி, மூச்சிரைப்பு நோய், மார்புச் சளி, உயர் இரத்த அழுத்தம் போன்றவை   வைட்டமின் D குறைபாட்டின் அறிகுறிகள் ஆகும்.

இத்தகைய அறிகுறிகள் தென்படுமானால் விட்டமின் D3-ஹைடிராக்சி

(D3OH) போன்ற சோதனைகளை மேற்கொண்டுவிட்டமின் டியின் அளவை சரிபார்த்துக் கொள்ளலாம்.   அதற்கேற்ற வகையில் உணவு முறையை மாற்றியும், சூரிய வெளிச்சத்திலிருந்து D3 சத்தைப் பெறும் வகையிலும் பயிற்சிகள் மேற்கொள்வது அவசியம்.