Skip to main content

இனிமேல் எல்லா பண்டிகைகளுக்கும் நீங்களே வீட்டில் வெண்ணெய் தயார் செய்வது எளிது!

Published on 30/12/2020 | Edited on 30/12/2020

 

butter

 

பண்டிகை நாட்கள் தொடக்கி விட்டாலே, எல்லா வீடுகளிலும் வித விதமான இனிப்பு மற்றும் உணவு வகைகளை செய்து அசத்துவர். அவற்றில் அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகள் இருக்கும். பெரும்பாலும், கடையில் வாங்கிய வெண்ணெயினை கொண்டே உணவு பொருட்கள் தயார் செய்வது வழக்கம்.

 

வெண்ணெய்யானது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்துள்ளது. இதனை பண்டைய நாகரீகங்களில் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

 

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். வளர்ந்துவிட்ட நவீன காலத்தில், பல பாரம்பரிய உணவு முறைகளைத் நாம் தொலைத்து வருகிறோம்.

 

இந்த சூழலில், இனி வரும் பண்டிகை காலத்தில், எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்து பாருங்கள், அப்படி செய்தால் அதிக சுவையுடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கே ஒரு வித்தியாசம் தெரியும்...!

 

வெண்ணெய் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

 

1, பண்டிகை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு அதாவது, ஒரு பத்து அல்லது பதினைந்து நாளைக்கு முன்பிருந்து, தினமும் காய்ச்சி ஆற வைத்த பாலில் சேரும் ஆடையை மட்டும்  ஒரு பாத்திரத்தில் எடுத்து சேர்த்து வைத்து கொள்ளவும்.

 

2, பின் அதனை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு ஓரிரு நிமிடங்கள் அரைத்து கொள்ளவும், வேண்டுமென்றால் சிறிது அளவு புளித்த தயிர் சேர்த்து கொள்ளலாம்.

 

3, பிறகு நிறைய குளிர்ந்த தண்ணீர் விட்டு மறுபடியும் அரைக்க வேண்டும். சேர்த்து வைத்த பாலாடை முழுதையும் இதே போல் அடித்து வெண்ணெய் எடுத்து கொள்ளவும்.

 

4, அப்போது, வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே மிதக்கும். அவற்றை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பந்து போல் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு முறை தண்ணீரில் அலசினால் பந்து போல் வெண்ணெய் உருண்டு வரும் .

 

5, நெய் வேண்டுமென்றால், ஒரு அடி கனமான கடாயில் குறைத்த அளவு தீயில் அந்த வெண்ணெயை வைத்து உருக்கவும். அப்போது, வெண்ணெய் முழுதும் உருகி பொன்னிறத்தில் வரும். அதனை எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.

 

வெண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

 

வெண்ணெயில் நிறைய கலோரிகளும் ஊட்டச்சத்துகளும் அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகள், இளம் வயதினர், உடல் உழைப்பு அதிகமுள்ளவர்கள், உடல் மெலிந்தவர்கள், காச நோயாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு  வெண்ணெய் கலந்த உணவு வகைகள் உகந்ததாகும்.

 

வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில், இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நீங்கள் ஒல்லியாக இருந்தால், வெண்ணெயை மதிய உணவில் தினமும் 5 முதல் 10 கிராம் வரை வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.

 

வெண்ணெயில் 'வைட்டமின் ஏ’ அதிகம் உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. மேலும், இவை மாங்கனீசு, குரோமியம், அயோடின், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில்,  புரதம், கொழுப்பு ஆகியவையும் காணப்படுகின்றன.

 

வெண்ணெய் கலந்த உணவு பொருட்களை இரவில் சாப்பிட்டால், செரிமானம் குறைந்து உறக்கம் கெடும். எனவே, இவற்றை பகல் நேரங்களில் சாப்பிடுவது  சிறந்த வழிமுறையாகும்.

 

ஆகையால், ''அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு'' என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பொருட்களை அளவோடு உண்டால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

 

 

 

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.