
பண்டிகை நாட்கள் தொடக்கி விட்டாலே, எல்லா வீடுகளிலும் வித விதமான இனிப்பு மற்றும் உணவு வகைகளை செய்து அசத்துவர். அவற்றில் அதிக அளவு வெண்ணெய் கலந்த உணவு வகைகள் இருக்கும். பெரும்பாலும், கடையில் வாங்கிய வெண்ணெயினை கொண்டே உணவு பொருட்கள் தயார் செய்வது வழக்கம்.
வெண்ணெய்யானது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பழக்கத்தில் இருந்துள்ளது. இதனை பண்டைய நாகரீகங்களில் பயன்படுத்தியதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். வளர்ந்துவிட்ட நவீன காலத்தில், பல பாரம்பரிய உணவு முறைகளைத் நாம் தொலைத்து வருகிறோம்.
இந்த சூழலில், இனி வரும் பண்டிகை காலத்தில், எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்து பாருங்கள், அப்படி செய்தால் அதிக சுவையுடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கே ஒரு வித்தியாசம் தெரியும்...!
வெண்ணெய் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!
1, பண்டிகை தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு அதாவது, ஒரு பத்து அல்லது பதினைந்து நாளைக்கு முன்பிருந்து, தினமும் காய்ச்சி ஆற வைத்த பாலில் சேரும் ஆடையை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து சேர்த்து வைத்து கொள்ளவும்.
2, பின் அதனை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு ஓரிரு நிமிடங்கள் அரைத்து கொள்ளவும், வேண்டுமென்றால் சிறிது அளவு புளித்த தயிர் சேர்த்து கொள்ளலாம்.
3, பிறகு நிறைய குளிர்ந்த தண்ணீர் விட்டு மறுபடியும் அரைக்க வேண்டும். சேர்த்து வைத்த பாலாடை முழுதையும் இதே போல் அடித்து வெண்ணெய் எடுத்து கொள்ளவும்.
4, அப்போது, வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே மிதக்கும். அவற்றை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பந்து போல் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு முறை தண்ணீரில் அலசினால் பந்து போல் வெண்ணெய் உருண்டு வரும் .
5, நெய் வேண்டுமென்றால், ஒரு அடி கனமான கடாயில் குறைத்த அளவு தீயில் அந்த வெண்ணெயை வைத்து உருக்கவும். அப்போது, வெண்ணெய் முழுதும் உருகி பொன்னிறத்தில் வரும். அதனை எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
வெண்ணெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:
வெண்ணெயில் நிறைய கலோரிகளும் ஊட்டச்சத்துகளும் அதிகம் இருப்பதால், வளரும் குழந்தைகள், இளம் வயதினர், உடல் உழைப்பு அதிகமுள்ளவர்கள், உடல் மெலிந்தவர்கள், காச நோயாளிகள், விளையாட்டு வீரர்களுக்கு வெண்ணெய் கலந்த உணவு வகைகள் உகந்ததாகும்.
வெண்ணெய் சாப்பிடுவது, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லது. ஏனெனில், இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட வழிவகுத்து, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நீங்கள் ஒல்லியாக இருந்தால், வெண்ணெயை மதிய உணவில் தினமும் 5 முதல் 10 கிராம் வரை வெண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
வெண்ணெயில் 'வைட்டமின் ஏ’ அதிகம் உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. மேலும், இவை மாங்கனீசு, குரோமியம், அயோடின், துத்தநாகம், செம்புச்சத்து, செலீனியம் ஆகிய தாது உப்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில், புரதம், கொழுப்பு ஆகியவையும் காணப்படுகின்றன.
வெண்ணெய் கலந்த உணவு பொருட்களை இரவில் சாப்பிட்டால், செரிமானம் குறைந்து உறக்கம் கெடும். எனவே, இவற்றை பகல் நேரங்களில் சாப்பிடுவது சிறந்த வழிமுறையாகும்.
ஆகையால், ''அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு'' என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பொருட்களை அளவோடு உண்டால் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழலாம்.