Skip to main content

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி... மகிழ்ச்சியோ மகிழ்ச்சி... - எங்கேயிருந்து வருகிறது மகிழ்ச்சி?

Published on 20/03/2018 | Edited on 20/03/2018

மார்ச் 20 - சர்வதேச மகிழ்ச்சி தினம்  


மகிழ்ச்சி.... தேடுதல்கள் நிறைந்த மனித வாழ்க்கையில் புவி, அண்டம், அதையும் தாண்டி பால்வழி அண்டம், கிரகங்கள் என எல்லாவற்றையும் தொட்ட மனிதனால் இன்றுவரை, பெற முயற்சித்து நூறு சதவீகித  தீர்வு காணாத விஷயம் மகிழ்ச்சி. மனதை மகிழ்ச்சிப்படுத்துவது எப்படி? என்பதை விட கிடைத்த மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்வது எப்படி என அடித்தட்டு ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை எல்லா பொருளாதார அடுக்கில் உள்ள மனிதர்களிடமும் புதைந்திருக்கும் இந்தத் தேடல் நீளுகிறது.

 

happy

 

பணம்தான் மகிழ்ச்சியைக் கொடுக்கும் காரணி எனில், பணம், செல்வம், ஆசை, அரச பதவி என எல்லாவற்றையும் துறந்து மன மகிழ்ச்சியையும் வாழ்வின் நோக்கத்தையும் புத்தர் தேடியதற்கான காரணம் என்ன? இன்று கூட பொருளாதாரம் சார்ந்த வசதிகளில் பெரும் நிறைவு கொண்ட  நோய்வாய்ப்பட்டவர்களிடமும், முதியோர் இல்லத்திலுள்ளவர்களிடமும் 'உங்களிடம் மகிழ்ச்சி உள்ளதா? என்று  கேட்டால், 'இல்லை' என எந்த பாரபட்சமும் இல்லாமல் ஒப்புக்கொள்வார்கள். எனவே மகிழ்ச்சிக்கு பொருளாதாரமும் பணமும் அவசியமல்ல. அப்படி இருக்க எதுதான் மகிழ்ச்சி, எப்படித்தான் அதை தக்கவைத்து கொள்வது என்ற தேடல் இன்றுவரை இருந்துவருகிறது.

 

இன்று வேலை கிடைத்தது, இன்று புதுவீடு கட்டினேன், இன்று கார் வாங்கினேன், இன்று புது உடை உடுத்தினேன் என அன்றன்று கிடைத்த, நம்மால் முடிக்கப்பட்ட நிகழ்வுகள் அந்நாளின் மகிழ்ச்சி. அடுத்த நாளோ அடுத்த வாரமோ அவை பெரும் மகிழ்வை தருவதில்லை. உதாரணமாக, அன்று வரை கார் வாங்க வேண்டும் என்பதை என் மகிழ்ச்சிக்கு உரிய நிகழ்வாக பார்த்த நாம், கார் வாங்கிய பிறகு வேறு ஒரு இலக்கால் மகிழ்ச்சியை அடைய நினைக்கிறோம். மகிழ்ச்சிக்கு இறுதி இலக்கே இல்லை. இப்படி மகிழ்ச்சியைத் தேடும் காரணிகள் மனித வாழ்வில் மனம் மாறிக்கொண்டே போகிறது என்பதே உண்மை. அதனால்தான் தான் மகிழ்ச்சியடைந்த தருணங்களை புகைப்படங்களாக்கி நினைவுறுகிறோம்.

 

happy

 

சோகங்களை அழித்தால்தான் மகிழ்ச்சி பிறக்கும் என்று பிறர் மகிழ்ச்சிக்காகவே வாழ்ந்தவர் சார்லி சாப்ளின். அவர்  ஒரு மேடை நிகழ்ச்சியில் மக்களை நோக்கி ஒரு ஜோக் ஒன்றை சொன்னார். அரங்கமே சிரித்து அதிர்ந்தது. திரும்பவும் அதே ஜோக்கை இரண்டாம் முறை சொன்னார், பாதி பேர் சிரித்தனர். மூன்றாவது முறையும் அதே ஜோக்கை சொன்னார். அரங்கம் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் சாப்ளின் மக்களை நோக்கி  சொன்னார், ''ஒரு சிறிய ஜோக் முதலில் உங்களை சிரிக்க வைத்தது. அடுத்த இரண்டு முறையும்  ஏற்கனவே சொன்னதுதானே என்று  பெரிதாய் ஏற்றுக்கொண்டு சிரிக்கவில்லை. அப்படியிருக்க சோகம் ஒன்றுதானே? அதைமட்டும் ஏன் திரும்பத் திரும்ப ஏற்றுக்கொள்கிறீர்கள்? சோகங்களை அழியுங்கள் வாய்விட்டு சிரியுங்கள்'' என்றார். உண்மையிலேயே மகிழ்ச்சியின் வாசல் சிரிப்புதான்.  

 

இன்று மகிழ்ச்சியை அறிவியல் முறையில் கொண்டுவர லாஃபிங் தெரபி முதல் யோகா வரை எல்லாவற்றையும் அலசுகிறோம். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும்  என கண்ணாடி அறையில் கூட்டமாக நின்று  சிரித்துக்கொண்டிருக்கிறோம். சிரிப்பு எனும் உணர்வுதான் மகிழ்ச்சியின் வாசல். ஆனால் இயற்கையை என்றுமே மிஞ்சாது செயற்கை. பள்ளியிலோ கல்லூரியிலோ ஆயிரம் பேர் கூடியுள்ள சபையில் நம் பெயரை சொல்லி மேடையில் நமக்கு பரிசளிக்கும்போது   அந்த நேரத்தில் எப்படி இருக்கும்? நம் பெற்றோர் உடனிருந்தால் இன்னும் சொல்லமுடியாத மகிழ்ச்சி. இதுபோன்ற நேரங்களில் உங்கள் உணர்வு எப்படி உள்ளது என கேட்டால் அதிகமானோர் கூறும் பதில் அநேகமாக "என்ன சொல்றதுனே தெரில அவ்ளோ சந்தோசமா இருக்கு'' என்பதுதான். எனவே நம் மனம் எந்த நேர்மறை எண்ணத்தை முழுமையாக ஏற்று சுற்றியுள்ள நிகழ்வுகள் அனைத்தையும் மகிழ்ச்சியின் காரணிகளாக நினைக்கிறதோ அந்த நேர்மறை எண்ணம்தான் மகிழ்ச்சியை கொடுக்கும் சக்தி.
 

happyதினசரி நம் வாழ்வில் எவ்வளவு மன நிறைவுடன் இருக்கிறோம், நேர்மறை எண்ணத்துடன் இருக்கிறோம் என்று நம்மால் உணர முடிந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சியையும் உணரமுடியும் என்றும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதியான மனமும் நிறைவும் பெரும்பாலும் மாறாத வகையில் இருந்தால் அதுவே மகிழ்ச்சியை தரவல்லது எனவும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற உளவியல் பேராசிரியர் அக்கேசியா பாரக்ஸ் கூறுகிறார். 

 

வாழ்வில் சுறுசுறுப்பு, தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான மனநிலை, சுகாதாரமான சுற்றுப்புறம், நகைச்சுவை உணர்வு,  உண்மையான உறவுகள், அளவான செல்வம், பிறர் நலம் பேணுதல், போன்ற எல்லா காரணிகளும் மனிதனின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன. அப்படியாகப்பட்ட மகிழ்ச்சிதனை தன் வாழ்வில் பெறுவது மற்றுமின்றி பிறரையும் மகிழ்விப்பதுதான் மகிழ்வின் உச்சமே.   

 

மனநிறைவுடன் நேர்மறை எண்ணங்களை ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ மகிழ்ச்சி தின நல்வாழ்த்துக்கள்....நண்பர்களே.....             

Next Story

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம்; மீண்டும் தொடங்கிய தாக்குதல்

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

The ceasefire ended; The attack resumed

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த நவ. 29 ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது மீண்டும் போர் துவங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக் குழுவின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் காசா மீது தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

 

 

 

Next Story

தொடரும் தாக்குதல்; 3 லட்சம் காசா மக்கள் அகதிகளாக வெளியேற்றம்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

Continued attack; 3 million Gazans evacuated as refugees

 

இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இரு நாடுகளுக்கு நடுவில் காசா இருப்பதால் அங்கு வாழும் மக்கள் எப்போதும் உயிர் பயத்துடனேயே இருந்து வருகின்றனர். இந்த நிலையில்தான் காசாவில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7 ஆம் தேதி காலை, 20 நிமிடத்தில் 5 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 

தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் காசாவை சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் உயிரிழப்பதை விட அப்பாவி பாலஸ்தீன மக்கள் அதிகளவில் உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால் மனித உரிமை அமைப்புகள் சர்வதேச நாடுகளும் தலையிட்டு போரை நிறுத்த வேண்டும். காசா நகரில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பாலஸ்தீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  குறிப்பாக ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருக்கும் கட்டிடங்கள் மீது தாக்குதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் மேலும் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

 

இந்நிலையில் ஐநா வெளியிட்டுள்ள தகவலில், இதுவரை இஸ்ரேல் போர் தொடர்ந்து வரும் நிலையில் காசாவில் இருந்து சுமார் 3.38 லட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். காசாவில் 22 லட்சம் மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் 11 சதவிகித மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போதும் தீவிர தாக்குதல் தொடர்ந்து வருவதால் காசாவில் மீதம் உள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது.