Skip to main content

உறவுகளுக்கிடையே ‘கேஸ் லைட்டிங்’ என்றால் என்ன? - மனநல மருத்துவர் ராதிகா  முருகேசன் விளக்கம்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
drradhika-murugesan-mental-health-tips- Gaslighting

உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப்  பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில்  'கேஸ் லைட்டிங்'  என்றால் என்னவென்று விளக்குகிறார்.

சோஷியல் மீடியாவில் 'கேஸ் லைட்டிங்' என்று  சுலபமாக பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. ஒரு சிலர் இதை டார்க் காமெடி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த 'கேஸ் லைட்டிங்' என்பது 1930ல் பிரிட்டிஷில் வந்த திரைப்படம் ஒன்றின் மூலம் பிரபலமானது. அதில் வரும் வக்கிர புத்தி கொண்ட கணவன் தன் மனைவியை எமோஷனல் அபியூஸ் பண்ணுபவன். வீட்டில் இருக்கும் எல்லா கேஸ் விளக்குகளையும் மங்க வைத்து விடுகின்றான். மனைவி அதை சரிசெய்யும்படி சொல்லும்போதும் கூட அதை அப்படியே மனைவியின் பக்கம் திருப்பி உனக்கு தான் ஏதோ மனக்கோளாறு அதனால் தான் அப்படி தெரிகிறது மற்றபடி விளக்குகள் எல்லாமே நன்றாகத் தானே எரிகிறது என்று குழப்பிவிடுகிறான். அந்த மனைவியும் அதை நம்பி சுயநம்பிக்கையை இழந்து தனக்கு தான் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று தன்னை இழக்கிறாள். இதன் மூலமாவே 'கேஸ் லைட்டிங்' பிரபலம் ஆனது.

இது காலம் காலமாகவே நடந்து வருகிறது. ஆனால் அவ்வளவாக இதை யாருமே எமோஷனல் அபியூஸ் என்று கவனம் காட்டவில்லை. இந்த 'கேஸ் லைட்டிங்' எங்கு அதிகமான நம்பிக்கை இருக்கிறதோ அங்கு நடக்கலாம். ரொம்ப அன்யோன்யமாக இருக்கும் உறவுகளிடமும், சில சமயம் பெற்றோர் - குழந்தைகள் உறவிலும் கூட இது நடக்கலாம். எல்லோர் முன்னாடியும் தன்னுடைய பார்ட்னரை அசிங்கப்படுத்துவது, மட்டம் தட்டுவது அல்லது அவர் கூச்சம்படும்படி ஏதும் செய்வது, கண்ட்ரோல் செய்வது போன்றவை 'கேஸ் லைட்டிங்'இல் நடக்கும். அதை குறித்து கேட்டால் கூட, உனக்கு தான் ஏதோ பிரச்சனை, நான் விளையாட்டாக சொன்னதை நீதான் அப்படி எடுத்து கொள்கிறாய் என்று சொல்லி அவரையே குற்றவாளி ஆக்குவது.

கடந்த காலத்தில் நடந்த சம்பவத்தை சொல்லி காட்டும்போது கூட தான் அப்படி சொல்லவே இல்லை, தன்னுடைய பார்ட்னர் தான் பொய் சொல்கிறார் போல மாற்றி நிஜத்தை மறுப்பது இது 'கேஸ் லைட்டிங்கில்' அடங்கும். இது போன்றவை எந்த ஒரு நபர் 'நார்சிசம்' குணாதசியம் கொண்ட நபர்களோடு இருக்கிறார்களோ, இந்த  'கேஸ் லைட்டிங்' என்ற எமோஷனல் அபியூஸ் நடக்கும். இவர்களோடு நாளடைவில் இருந்து இன்னல்களை அனுபவிக்கும்போது அவர்கள் தங்களுடைய சுய மதிப்பை இழந்து, தான் யார் என்ற அடையாளத்தையே இழந்து விடுவார்கள். இதுவும் ஒரு வகை எமோஷனல் அபியுஸ்தான்.

 

Next Story

லவ் பிரேக் அப் ஆனால் ஏன் இப்படி ஆகுறாங்க? - மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் விளக்கம்

Published on 22/07/2024 | Edited on 22/07/2024
Psychiatrist Radhika Murugesan explained

காதல் என்ற விஷயமே ஜஸ்ட் காமம் தான். காமம் தான் காதல். ஒருவரை பார்த்து ஒரு ஈர்ப்பு வரும்போது தற்செயலாக ஹார்மோன்ஸ் கூட ஆரம்பிக்கும். டோபோமைன்ஸ் கூடும். காதல் என்பதே ஆல்டர் மெண்டல் ஸ்டேட் (Alter Mental state) தான். அதனால் தான் காதல் தோல்வி அடைந்த பிறகு, விட்டுட்டு போனவங்கள பத்தியே நினைச்சுட்டு இருப்பாங்க. அவுங்க ஆன்லைன்ல இருக்காங்களா, சமூக வலைத்தளங்களில் இருக்காங்களா என செக் பண்ணிட்டே இருப்பாங்க. இந்த மாதிரி ஸ்டாக்கிங் செய்வாங்க. இப்படி உள்ளவங்கள நான் ஓசிடி மாதிரியே சிகிச்சை அளித்திருக்கிறேன். அவர்களும், 3 அல்லது 4 மாதங்களிலே சரி ஆகியிருக்கிறார்கள். 

காதல் என்பது ஒரு போதைப் பொருள் மாதிரி. ஒரு போதைப்பொருள் பயன்படுத்தும் போது டொபொமைன்ஸ் அதிகமாக இருக்கும். திடீரென, அந்த போதைப்பொருளை நிறுத்திவிட்டால் ஒருவிதமாக நடந்துகொள்வார்கள். அது போல் தான் காதலிலும் இருக்கிறது. பார்த்தவுடன் காதல் வருது என்கிறார்கள். அது கண்டிப்பாக காமத்தினால் தான் வருகிறது. அது எப்படி ஒருத்தங்கள பார்த்தவுடன் அவுங்கள பத்தி ஒன்னுமே தெரியாமல் காதல் வரும். இந்த காதல், காமம், சமூகம் இத பத்தி பேசும்போது தான் எனக்கு தோனுது. நிறைய இளம் காதலர்கள், காதலிக்கும் போது நெருக்கமாக ஒரு காவியக் காதல் போல் காதல் செய்வார்கள். ஆனால், அவர்கள் இருவரும் கல்யாணம் செய்த பிறகு, சின்ன சின்ன விஷயத்திற்கு அளவுக்கு அதிகமாக கோபப்படுவது, சண்டை போடுவது போல் இருப்பார்கள். இவர்கள் இருவரும் பிரிந்துபோக வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஆனால், ஏதோ இடத்தில் இந்த சமூகத்திற்காக திருமணம் செய்துவிட்டோம், அதனால் சேர்ந்து தான் வாழ வேண்டும், குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்று ஒரு நிலைப்பாடு எடுக்கும் போது அங்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. 

இளைஞர்களுக்கு அவர்களுடைய மனநிலையை எப்படி ஒழுங்குப்படுத்துவது என்று தெரியவில்லை. கோபம் வந்தால் எப்படி கையாளுவது, ஒரு பேச்சுவார்த்தையை எப்படி உருவாக்க வேண்டும் என்பது போன்ற திறமை இல்லாததால், அதிகளவு கோபப்படுவது, எமோஷனலாக கத்துவது போன்றெல்லாம் தான் நடக்குது. இதுக்குமேல், இந்த உறவு சரியா வராது என்று புரிந்தாலும், திருமணத்தில் தான் இருப்பேன் அதைத் தாண்டி என்னால் யோசிக்க முடியாது என்ற மனநிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் கையாளுவது மிக மிக கஷ்டம். 

ஒரு வேளை காதல் வந்துவிட்டது. ஆனால், அந்த காதல், கடைசி வரைக்கும் ரோமியோ ஜூலியட் மாதிரி எல்லாம் இருக்காது. காதல் என்பது முதல் கட்டம் தான். ஆண்டாண்டு காலமா ஈர்ப்பே இல்லாமல், ஒரே சாதிக்குள்ள இருக்கனும் வேண்டும் அரேஞ் மேரேஜ் நடந்துட்டு இருந்த சிஸ்டம்ல காதல் என்ற கான்செப்ட்க்கு வந்துருக்கோம். காதல் செய்து கல்யாணம் செய்ய வேண்டும். அது இயற்கை. ஒருத்தங்கள பார்த்தவுடன் அவருடன் வாழ்நாள் முழுவதும் பயணிக்க வேண்டும் என்று தோனுகிறது. ஆனால், அதுக்கு மேல் நிறைய விஷயம் இருக்கிறது. அதை அவர்களோடு பழகுனா தான் தெரியும். அதனால், காதல் என்பது முதல் கட்டம் தான். அதுக்கு மேல் ஒரு பெரிய பிராஸஸ் இருக்கு. சில பேருக்கு அவர்களிடம் இருக்கும் முதர்ச்சியால் அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொண்டே இருப்பார்கள். அதோடு சேர்த்து அந்த காதலையும் வளர்ப்பார்கள். அது தான் 50, 60 வயதுகொண்ட ஒரு தம்பதிகூட ரொமாண்டிக் தம்பதியராக இருப்பார்கள். 

கணவன் மனைவி உறவுக்குள் நட்பு இல்லையென்றால் எதையுமே செய்யமுடியாது. எக்காரணம் கொண்டு திருமணத்தில் இருந்து விட்டு போகக்கூடாது, அந்த சிஸ்டத்தை உடைக்கக்கூடாது என்ற நோக்கத்தில் தான் காதலை புனிதப்படுத்துகிறார்கள். அந்த சிஸ்டத்தை எதிர்கேள்வி கேட்கக்கூடாது அத புனிதப்படுத்தி செய்யக்கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அப்படி எதிர்கேள்வி கேட்டு செய்தால், பெண்களுக்கு கற்பு கிடையாது போன்றவற்றை சொல்வார்கள். மற்றபடி காதலுக்கு புனிதமும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது. 

Next Story

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை; தமிழக அரசு ஏற்பாடு!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
TN govt arrangement for Mental health counseling for students

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சேவையினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (06.05.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர் தி.சி. செல்வ விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பள்ளிக் கல்வித் துறை மூலம் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவர்களில் தேர்ச்சி பெறாத 51 ஆயிரம் 919 மாணவர்கள் (32 ஆயிரத்து164 ஆண்கள் மற்றும் 19 ஆயிரத்து 755 பெண்கள்) எனப் பெறப்பட்ட பட்டியலிட்ட மாணவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படவுள்ளது. 

TN govt arrangement for Mental health counseling for students

இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் 104 என்ற தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 என்ற நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் என்ற சுகாதாரத் துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மன நல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும். 30 மனநல ஆலோசகர்கள் 3 சுழற்சி முறையில் செயல்படுவர். 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ் வளாகம் 30 மன நல ஆலோசகர்களைக் கொண்டும். 14416 நட்புடன் உங்களோடு மனநல சேவை மையமானது 10 இருக்கைகளுடன் மனநல ஆலோசகர்கள், 4 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது. 14416 நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் கட்ட சேவை மையமானது அரசு மன நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், சென்னையில் 10 இருக்கைகளுடன் 30 மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள், மற்றும் 1 மன நல மருத்துவரைக் கொண்டு செயல்படுகிறது.

மேலும் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்படும் மாணவர்களை அவர்களின் மன நலம் கருதி தொடர் அழைப்புகள் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது. அவர்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மன நல உளவியலாளர்கள், மன நல மருத்துவர் சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் முன்னுரிமை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபெற்று நல்வாழ்வு அமைந்திட ஆலோசனை வழங்கப்படுகிறது. மனநல ஆலோசனைகளுக்கு மருத்துவ உதவி எண் 104 மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை எண் 14416 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தப் பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான உடனடி மறுதேர்வு தொடர்பான அறிவிப்பு நாளை (07.05.2024) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.