Skip to main content

மலத்தை வைத்தே நோயினை கண்டறியலாமா? - பிரபல மருத்துவர் சந்திரசேகர் விளக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

  Dr Chandrsekar | Hemorrhoids | Constipation | Motion Problem |

 

மலச்சிக்கலால் உருவாகும் மூல நோயின் தன்மைகள் பற்றி தொடர்ச்சியாக நமக்கு விழிப்புணர்வு தகவல்களை டாக்டர் சந்திரசேகர் அளித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக உணவு முறையினால் ஏற்பட்ட மாற்றத்தால் ஏற்படும் சிக்கல் பற்றியும், வெளியேறும் மலத்தினை வைத்தே நோயின் தன்மையை கண்டறிவது பற்றியும் விளக்குகிறார்.

 

நமது உணவு முறையே சரிவிகித உணவாகத்தான் இருந்து வந்தது. அதாவது கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கும், செரிமானத்திற்கு ரசம் ஊற்றி சாப்பிடுவார்கள், புரதத்திற்கு பருப்பு கூட்டு இருக்கும், நார்ச்சத்திற்கு பொரியல் இருக்கும் இவ்வாறாக அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவை நாம் எடுத்துக் கொண்டோம். தண்ணீரும், மோரும் இறுதியாக எடுத்துக் கொள்ளுதல் எளிமையாக செரிமானம் அடைந்து சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த உணவு முறை காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

 

ஆனால், இப்போதெல்லாம் எல்லா காய்கறிகளையுமே ஒன்றாக சேர்த்து சமைத்து கொடுக்கிறார்கள். உணவில் கறியை வேக வைத்து பிரியாணியாக கொடுக்கிறார்கள். பக்கெட் சிக்கன் என்று வெறும் சிக்கனை மட்டுமே வாங்கி வைத்து உண்ணுகிறார்கள். இது சரியாக செரிமானம் அடையாமல் மலச்சிக்கலை உருவாக்குகிறது. முந்தைய காலங்களில் மலம் வெளியேறிய பிறகு பரிசோதிப்பார்கள், கருப்பாக இருந்தால் உள் உறுப்புகளில் இரத்த கசிவு இருக்கிறது, வெள்ளையாக வெளியேறினால் மஞ்சள் காமாலை இருக்கிறது, ரத்தக்கசிவு வெளியேறினால் மூலம் இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வார்கள்.

 

இன்றைய வெஸ்டர்ன் டாய்லெட் முறையில் எப்படி மலம் வெளியேறுகிறது என்று அவரவர்களுக்கே தெரியாத நிலையில் தான் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்படி நோய் என்ன இருக்கிறது என்பது கண்டறிய முடியும்? நோயினை கண்டறிய முடியாத சாத்தியமற்ற நிலையில் தான் இந்த வாழ்க்கை முறை இருக்கிறது. வலியே இல்லாமல் இரத்தம் வருகிற மலச்சிக்கலால் மூல நோய் உருவாகும். ஆரம்பத்திலேயே மலச்சிக்கலை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டால் மருந்து, மாத்திரை, உணவு பழக்க வழக்க மாற்றங்களால் மூல நோயைச் சரி செய்ய முடியும். நோயின் தன்மை முற்றும் போது அறுவை சிகிச்சையால் தான் மூல நோயைச் சரி செய்ய முடியும்.

 


 

Next Story

இளம் வயதில் முதிய தோற்றத்திற்கு என்ன காரணம்? - ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
 Kirthika Tharan | Skin | Allergy |

இளம் வயதிலேயே சிலர் பார்ப்பதற்கு வயதான தோற்றமாக காட்சியளிக்கிறார்கள். இதற்கான காரணங்களைப் பற்றி ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்குகிறார்.

சிலர் இளம் வயதிலேயே பார்ப்பதற்கு வயதான தோற்றமளிப்பார்கள். சிலர் வயதானாலும் இளமையாக இருப்பார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக உணவில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் இளமை சம்பந்தப்பட்ட விசயங்களுக்கு முக்கிய பங்களிக்கிறது. மேலும் ‘ஸ்கின் மைக்ரோப்ஸ்’ உடலெங்கும் பரவி இருக்கிறது அவையும் ஒரு காரணமாகும். ஸ்கின் மைக்ரோப்ஸ் என்பது நமது உடலில் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை பல்வேறு வகை நுண்ணுயிரிகள் தோலில் மேல் உள்ளது. அவற்றை எப்போதும் சமநிலையில் வைத்துக் கொண்டால் நாம் இளமையாக இருப்போம்.

ஸ்கின் மைக்ரோப்ஸை தொந்தரவு செய்யும் அளவிற்கு நச்சுத்தன்மை மிக்க பொருட்களை தோலின் மீது பயன்படுத்தும் போது அவை உயிரற்ற தன்மையாகி தோலிற்கு பாதுகாப்பு அளிக்காமல் போய் விடுகிறது. இதனால் தோல் இளமைத்தன்மையற்று காட்சியளிக்கிறது. நாம் உடலுக்கு பயன்படுத்துகிற கிரீம்கள், சோப்புகள், ஆகியவற்றினை தோல் மருத்துவர் பரிந்துரையின் பேரில் தான் வாங்கி பயன்படுத்த வேண்டும். ஆனால், நாம் அப்படி பயன்படுத்துவதில்லை. இதனாலும் இளமைத் தோற்றம் இல்லாமல் ஆகிவிடுகிறது.

ஆயில் ஸ்கின், டிரை ஸ்கின் என ஒவ்வொருவருக்கும் ஸ்கின் வித்தியாசப்படும். உடலுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றங்கள் உடலுக்கு வெளியே தோலிலும் வெளிப்படும். அதை முறையாக ஸ்கின் ஸ்பெசலிஸ்ட்டுகளிடம் காண்பித்து நாம் சரி செய்துகொள்வதில்லை. உடனடியாக நச்சுத்தன்மையின் அளவோ, வீரியமோ தெரியாத கிரீம்களையோ, சோப்பையோ பயன்படுத்தி சரியாக்கி விட்டதாக நினைத்துக் கொள்கிறோம். 

பச்சைப்பயிறு மாவு கரைத்து உடலில் பூசுங்கள் என்றோ இயற்கைக்கு சார்ந்த பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்றோ இன்றைய அவசர காலகட்டத்தில் சொல்ல முடியாது, மாடர்ன் என்னவோ அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறிக்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் அதிகப்படியான நச்சுத்தன்மை வாய்ந்த கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்த்தே ஆக வேண்டும். குறிப்பாக வெயிலில் போனால் சன் ஸ்கிரீன் லோசன் என்று தடவுகிறார்கள். வெயில் தோலுக்கு உணவாகும், அதிலிருந்து கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு நன்மையை உண்டாக்க கூடியது. 

அப்ப எப்படித்தான் தோலினை பராமரிப்பது என்றால், ‘மைக்ரோப்ஸ் ப்ரண்ட்லி ஸ்கின் கேர்’ முறைக்கு நாம் மாற வேண்டும். அவை தயிர், பால் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், நிறைய தண்ணீர் குடித்தல், நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்ளுதல் போன்ற சிறு சிறு விசயங்களில் கவனம் செலுத்தும் போது தோல் இளமையாக காட்சியளிக்கும்.

Next Story

பன்றிக் காய்ச்சல் நுரையீரலை பாதிக்குமா? - டாக்டர் ராஜேந்திரன் விளக்கம்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 Dr Rajendran | Swine flu 

மழைக் காலங்களில் பரவக்கூடிய பல்வேறு வகையான காய்ச்சலைப் பற்றி நமக்கு ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேந்திரன் விளக்குகிறார்.

இன்றைய காலத்தில் வைரஸ் காய்ச்சல், டெங்கு தவிர மற்றுமொரு கவனிக்கப்பட வேண்டிய காய்ச்சல் பன்றிக் காய்ச்சல் ஆகும். ஸ்வைன் ப்ளூ ஹெச்1 என் 1 இன்புளுயன்சா வைரஸ், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவக் கூடியது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவரை கடித்த கொசு மற்றவரை கடிக்கும்போது அதனால் பரவக்கூடியது டெங்கு காய்ச்சல். 

ஆனால் பன்றிக் காய்ச்சல் என்பது பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து வருகிற மூச்சுக்காற்று, இருமல், சளி ஆகியவற்றாலும், கை, கால் ஆகியவற்றைக் கொண்டு எங்கெல்லாம் தொடுகிறோமோ அதன் மூலம் பரவக்கூடிய தன்மையைக் கொண்டது. 

பன்றிக் காய்ச்சல் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் தீவிரமான உடல் சூட்டோடு காய்ச்சல், உடல் வலி, வரட்டு இருமல், கடுமையான தலைவலி, தொண்டை வலி ஏற்படும். மருத்துவர்கள் தொண்டை வலி என்றதும் தொண்டையை பரிசோதித்துப் பார்ப்பார்கள். ஆனால் அங்கே வலியால் வீங்கியோ அல்லது சிவந்து போயோ இருக்காது இப்படியாக எந்த அறிகுறிகளுமே இல்லாமல் கடுமையான தொண்டை வலி ஏற்பட்டால் அது பன்றிக் காய்ச்சல் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். 

நோயின் தீவிரத்தன்மையை அறியாமல் சாதாரண காய்ச்சல்தான் என்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போட்டுக் கொண்டு சாதாரணமாக இருந்து விடக்கூடாது. தீவிர சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் விட்டால் சுவாசப் பாதையிலிருந்து நுரையீரலை நோக்கி காய்ச்சல் நகரக்கூடும் இதனால் மூச்சுத் திணறல் ஏற்படும்.  

பன்றிக் காய்ச்சல் என்றதும் நாங்கள் பன்றிக்கறி எதுவும் சாப்பிடவில்லையே, பன்றியிடம் அருகில் எதுவும் போகவில்லையே என்று நினைப்பார்கள். அது காய்ச்சலை வேறுபடுத்த வைக்கப்பட்ட பெயராகும். காய்ச்சலின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து உறுதிசெய்து கொண்டு அருகில் உள்ள மருத்துவமனையையோ, மருத்துவரையோ அணுகி முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.