Skip to main content

அடிக்கடி தலைவலி தைலம் தேய்க்கலாமா?- பிரபல டாக்டர் அருணாச்சலம் விளக்கம்!

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
Dr Arunachalam - pain relief cream

பருவ மழை பெய்து முடிந்த காலகட்டத்தில் தலைவலி, சளி, இருமல் ஆகியவை வந்து விடுகிறது. சிலர் அதற்காக தலைவலி தைலம், இன்கேலர் போன்றவை பயன்படுத்துகிறார் இது எந்த அளவிற்கு பயன் தரக்கூடியது அல்லது சிக்கலைத் தரக்கூடியது என்ற கேள்வியை டாக்டர் அருணாச்சலம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு...

தலைவலி தைலம் தேய்ப்பது என்பது ஒரு அடிக்சன் தான். ஒவ்வொரு பிராண்ட் தைலம் தடவுவதிலும் அடிக்சன் உருவாகும். அதை உபயோகித்தால் தான் தூக்கமே வரும் என்ற நிலைக்கு அடிக்சனாக இருப்பது, நோயே இல்லாவிட்டாலும் லேசாக தடவுவதோ, உறிஞ்சுவதோ பலனளிப்பதாக நினைத்துக் கொள்வதாகும்.

மூக்கடைப்பு மருந்தை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம், கையிலேயே இன்கேலரை வைத்துக் கொண்டு அடிக்கடி உறிஞ்சிக் கொள்வார்கள். இதில் மெந்தால் இருக்கிறது. இதனை நேச்சிரோபதி என்கிறார்கள். அது மூக்கின் சுவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி திறக்க வைக்கும். அதனாலேயே அதை தொடர்ச்சியாக பயன்படுத்துகிறார்கள். சிலருக்கு தலைவலிக்கு கூட மூக்கின் வழியாக உறிஞ்சினால் சரியாவதாக நினைத்துக் கொள்கிறார்கள். சிலர் லேசான மனநிலை மாற்றத்திற்கு (மூட் சேஞ்ச்) கூட பயன்படுத்துகிறார்கள். இப்படியான பல காரணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

இது போன்ற தைலங்களை, அலோபதி மருத்துவத்தில் இவை நிவாரணியாக இருப்பதை விட, அதை பழக்கத்திற்கு வைத்துக் கொள்வதற்காகவே எடுத்துக் கொள்கிறார்கள் என்கிறோம். கையின் உள்ளே கட்டி இருக்கும், அதற்கு வெளியே ஆயில்மெண்ட் தடவுவார்கள், இதனால் வெளியே ஏற்படுகிற எரிச்சல் வலியை மறக்கச் செய்யும் அப்படித்தான் இந்த தலைவலி தைலங்களும் ஆகும்.

இவை தருகிற வெளிப்புற எரிச்சல்கள் உட்புற வலியினை மறக்கச் செய்யும். அதை நாம் நிவாரணம் அடைந்ததாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் மனநிலை மாற்றத்தால் ஏற்படுகிற தற்காலிக தலைவலிகளுக்கு மெடிக்கலில் வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் தீவிரமான நாள்பட்ட தலைவலி, அதனுடன் கூடிய வாந்தி, மயக்கத்திற்கு சாதாரண தலைவலி தைலம் தீர்வாகாத போது மருத்துவரை பார்த்துத்தான் சரி செய்துகொள்வார்கள்.

மருத்துவர்கள் பரிந்துரைக்காத தைலங்கள், தாங்களாகவே விளம்பரங்களைப் பார்த்து வாங்கி பயன்படுத்துகிற தைலங்கள் தலைவலியை போக்குகிற தன்மையை விட அது வெளிப்புறத்தில் ஏற்படுத்துகிற எரிச்சலே நமக்கு வலியை மறக்கச் செய்யும் அதனாலே வாங்கி பயன்படுத்துகிறார்கள். அது எல்லா நேரத்திற்குமே ஆரோக்கியமானதல்ல, மருத்துவரின் பரிந்துரையின் பெயரிலேயே தலைவலி தைலங்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும்.