Skip to main content

அனீமியா நோய் பெண்களுக்கு மட்டும்தான் வருமா? - டாக்டர் அருணாச்சலம் விளக்கம்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Does  anemia  occur only in women? - Explained by Dr. Arunachalam

 

அனீமியா நோய் குறித்த பல்வேறு தகவல்களை டாக்டர் அருணாச்சலம் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

 

பெண்களில் பத்தில் ஐந்து பேருக்கு அனீமியா நோய் இருக்கிறது என்கிறது புள்ளிவிவரம். அடிக்கடி இரத்தப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. குழந்தை வயதில் இருப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கும் அனீமியா நோய் என்பது உயிருக்கே ஆபத்தாகக் கூட முடியும். இந்த நோய் இருப்பவர்களின் கை முழுக்க வெள்ளையாக இருக்கும். கண்கள் மற்றும் நாக்கிலும் இதற்கான அறிகுறிகள் தெரியும். எந்தப் பரிசோதனைகளும் செய்யாமல் இருப்பவர்கள் கண்டிப்பாக இரத்தசோகை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை இந்தப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். 

 

முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு இந்த நோயும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த நோய் அதிகமாக இருக்கிறது. வெறும் சோறு மட்டும் சாப்பிடுவதால் அனைத்து சத்துக்களும் நமக்குக் கிடைக்காது. கீரை, பழங்கள் ஆகியவற்றை உண்ண வேண்டும். இட்லி பொடி, ஊறுகாய் ஆகியவற்றுக்கு பதிலாக புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி ஆகியவற்றை உண்ண ஆரம்பித்தால் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். உணவில் இலைகளை அதிகம் பயன்படுத்த வேண்டும். 

 

இன்று மக்களுக்குத் தேவையான காய்கறிகளை விவசாயிகள் பயிரிடுவதில்லை. பாரம்பரிய உணவுகளை நாம் ஊக்குவிக்க வேண்டும். அவரைக்காய், வெள்ளரிக்காய், பீன்ஸ், வெண்டைக்காய், மொச்சை ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. டிரை ப்ரூட்ஸ் என்று சொல்லப்படுகிற பேரிச்சம்பழம், காய்ந்த திராட்சை ஆகியவற்றிலும் இரும்புச்சத்து அதிகம். ஈரல் போன்ற ஆட்டின் உறுப்புகளில் இரும்புச்சத்து இருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு அவற்றை வழங்க வேண்டும். 

 

ஹீமோகுளோபின் குறையும்போது வேலை செய்யும் திறன் குறையும். உணவின் மூலம் அதைச் சரிசெய்ய முடியும். இரத்தத்தை இழக்கும் சமயத்தில் ஆண்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் இது ஏற்பட அதிக வாய்ப்புண்டு. காய்கறிகள், பழங்களை நாம் சரியாக உண்டு வந்தாலே இந்த நோய் ஏற்படாமல் தடுக்கலாம். இந்த நோயால் இதயமும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.