Skip to main content

பக்கவாதம், முடக்குவாதம்; சில புரிதல்கள்.. - விளக்குகிறார் டாக்டர் அருணாச்சலம்

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Doctor Arunachalam  about  Paralysis

 

பக்கவாதம், முடக்குவாதம் குறித்து நாம் அறியாத பல்வேறு தகவல்களை டாக்டர் அருணாச்சலம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்...

 

தற்போது சிறு குழந்தைகளுக்கும் பக்கவாதம் ஏற்படும் நிலை இருக்கிறது. வைரஸ் தொற்றுகளால் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படுகிறது. முடக்குவாதம் என்பது பெரும்பாலும் மூட்டு பகுதிகளில் தான் ஏற்படும். இது காலை நேரத்தில் அதிகமான வலியை ஏற்படுத்தும். நேரம் செல்லச் செல்ல வலி குறைவது போன்று இருக்கும். வீக்கம் அதிகமாக இருக்கும். இந்த வலி பெரும்பாலும் திடீரென்று தான் ஏற்படும். வேறு நோய்க்கிருமிகள் நம்மைத் தாக்கும்போது அதற்கான மருந்துகளை நாம் சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும் இந்தப் பிரச்சனை ஏற்படும். 

 

இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். முடக்குவாத நோயைக் கண்டறிவதற்குப் பல்வேறு வகையான பரிசோதனை முறைகள் இருக்கின்றன. பரிசோதனைகளில் நோய் உறுதியானால் அதன் வீரியத்தைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும். இந்த நோயை வரவிடாமல் தடுக்கும் மருந்துகள் இன்னும் கிடைக்கவில்லை என்றாலும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களை முடக்கி விடாமல் தரமான ஒரு வாழ்க்கையை வாழ வைப்பதற்கான மருந்துகள் இருக்கின்றன. முந்தைய சந்ததியினருக்கு இந்த நோய் இருந்தால் அது நமக்கும் வர வாய்ப்பிருக்கிறது.

 

முடக்குவாதம் என்பது பொதுவாக 45 வயதுக்குள் தொடங்கும். அதன் பிறகு தொடர்ந்து அதிகரிக்கும் தன்மை கொண்டது. தொடர்ந்து சரியான சிகிச்சைகள் எடுத்துக்கொண்டால் அதன் பாதிப்புகளை முடிந்த அளவு குறைக்கலாம்.

 

 

 

Next Story

மூட்டை மூட்டையாக வீசப்பட்ட மருத்துவ கழிவுகள்;  தனியார் மருத்துவமனை நிர்வாகம் அடாவடி

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
private hospital dumping medical waste near a government school in Karur

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டிபாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அரசு பள்ளிக்குச் செல்லும் சாலையின் இரண்டு புறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு மலை போல் குவிந்துள்ளது. மேலும், ஒரு பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளுக்கு அடிக்கடி தீ வைக்கும் நிகழ்வும் ஏற்படுகிறது. 

இந்த நிலையில் கரூர் மாநகரில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் நூற்றுக்கணக்கான கண்ணாடி பாட்டில்கள் சாக்கு மூட்டையில் நிரப்பி அந்தக் குப்பை மேட்டில் தூக்கி வீசப்பட்டுள்ளது. மேலும், அந்தத் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் விபரங்கள் அடங்கிய ஸ்கேன் சென்டர் சீட்டுகளும் சிதறிக் கிடந்தன.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்த போது, மருத்துவமனை நிர்வாகம் நேரில் வந்து பேசுங்கள் என்று அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் குற்றம் சாட்டினர். மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பைகள் கொட்டக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனை கழிவுகளை வீசி சென்றதால், அவ்வழியாக செல்லக்கூடிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், குடியிருப்பு பகுதி பொது மக்களுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

வரப்போகும் தலைமாற்று அறுவை சிகிச்சை; மிராக்கல் கொடுத்த 'பிரைன் பிரிட்ஜ்'

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
upcoming head transplant; Viral video

மனித உடல் உறுப்புகளின் திடீர் செயலிழப்புகள் மற்றும் விபத்துகளால் ஏற்படும் உறுப்பு செயல் இழப்புகளைத் தடுப்பதற்காக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதயம் முதல் கல்லீரல் வரை, கண்கள் முதல் சிறுநீரகம் வரை என உடல் உறுப்புகள் மாற்றப்படுவது இப்பொழுது சர்வ சாதாரணம் முறையாக மாறி வருகிறது. குறிப்பாக அண்மை காலமாகவே மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு தேவைப்படுவோருக்கு மாற்றி பொருத்தப்படுவது பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வருங்காலத்தில் தலையையே மாற்றி வைத்துக் கொள்ளும் அறுவை சிகிச்சை முறை வரப்போவதாக ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணையவாசிகளால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் நிறுவனமான 'பிரைன் பிரிட்ஜ்' என்ற நிறுவனம் வீடியோ ஒன்றை கடந்த மே 22ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது மருத்துவ உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காரணம் மனிதனின் உடலில் எத்தனை அமைப்புகள் இருந்தாலும் அடையாளம் காணப்படும் முக்கிய அமைப்பாக இருப்பது முகமும் தலையும்தான். அதனை மாற்றியமைக்கும் சிகிச்சைக்கான அந்த வீடியோதான் இந்த சிலாகிப்புக்குக் காரணம்.

'பிரைன் பிரிட்ஜ்' நிறுவனம் தொடர்ந்து தலைமாற்று அறுவை சிகிச்சைக்கான ஆய்வை மேற்கொண்டு வருகிறது. ரோபோக்களின் உதவியுடன் இந்த அறுவை சிகிச்சை எப்படி சாத்தியம் என்பது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. ஆட்டோனோமஸ் சர்ச்சிக்கல் ரோபோஸ் வகை ரோபோக்கள் ஒரு மனிதனின் உடலில் இருக்கும் தலையை மற்றொரு மனிதனுக்கு மாற்றும்படியாக அந்த வீடியோ அமைந்துள்ளது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நரம்பியல் நோய்கள் உள்ளவர்கள் மற்றும் கேன்சர் உள்ளவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவ உலகில் இதுவும் ஒரு மைல் கல்லாக அமையுமா இல்லையா என்பது விரைவில் தெரியவரும் என்கின்றனர் மருத்துவ உலகினர். இந்த ஆய்வு ஒருவேளை வெற்றிகரமாக முடிந்தால் இன்னும் எட்டு வருடத்தில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடைமுறைக்கு வரும் என  'பிரைன்  பிரிட்ஜ்'  நிறுவனத்தின் தலைமைத் தெரிவித்துள்ளது மருத்துவ உலகிற்கு மிராக்கல் கொடுத்துள்ளது.