Skip to main content

நீங்கள் குறைந்த செலவில் சுற்றுலா செல்ல வேண்டுமா? இந்தியாவைச் சுற்றியுள்ள அழகிய 5 நாடுகள்!

 

tourism

 

ஒட்டுமொத்த உலகமும் கரோனா வைரஸால் ஸ்தம்பித்துப்போன நிலையில், சுற்றுலா தளங்கள் அனைத்தும் 2020 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.

 

கரோனாவால் வீட்டைவிட்டு வெளியே போக முடியாமல் பலரும் முடங்கிக் கிடந்த சூழலில், புத்தாண்டு மற்றும் கிறித்துமஸ் விழாக்களை வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் மூலம் மகிழ்ச்சியாக கொண்டாடிய பல தருணங்கள் நினைவூட்டப்பட்டு, மீண்டும் அதே இடங்களைச் சுற்றி பார்க்கும் ஏக்கத்தை தூண்டியிருக்கின்றன.

 

எனவே, தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு குறைந்த செலவிலும், சுற்றி பார்ப்பதற்கு பாதுகாப்பான முறையிலும் உள்ள 5 அழகான வெளிநாட்டு சுற்றுலாத்தலங்கள் தேர்தெடுக்கப்பட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 

இலங்கை  

 

இலங்கையானது உலகின் பல்வேறு நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு, பார்த்தே ஆக வேண்டிய ஒரு நாடாக அவர்களின் பட்டியலில் ஆண்டுதோறும் இடம்பிடித்து வந்துள்ளது.  

 

இங்கு குறைந்த செலவில் விடுதிகள் கிடைக்கிறது. ஒரு நாளைக்கான சுற்றுலா கட்டணம் இந்திய மதிப்பில் 1500 ரூ முதல் 2000 ரூ மட்டுமே.

 

இங்குள்ள காலி கடற்கரை, கண்டி மலைப்பகுதி, அனுராதபுர பொலநறுவை வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள், தேசிய பூங்காக்கள் மற்றும் பெளத்த விகாரகைகள் முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ளன.

 

இலங்கைக்கே உரித்தான பாரம்பரிய உணவு, கொட்டிக்கிடக்கும் வளம், மத்திய மலைநாட்டு இயற்கை காட்சிகள், மற்றும் விருந்தினர்களை உபசரிக்கும் தன்மை என பல்வேறு காரணங்களால் வேறு எந்த நாட்டையும் விட இலங்கை தனித்தன்மை வாய்ந்ததாக திகழ்கிறது.

 

இங்குள்ள துறைமுகம், புவியியல் அமைவிடம், காலநிலை, புனித மேரி தேவாலயம், ஏராளமான வண்ணமயமான பூங்காக்கள் போன்றவை மிக அழகாக, பார்ப்பவரைக் கவரும் வண்ணம் உள்ளன.

 

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைத் தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக வெகுவாக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

 

மாலத்தீவு

 

மாலத்தீவு இந்திய பயணிகளுக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்றாகும். மிகவும் குட்டி நாடான மாலத்தீவு முழுக்க முழுக்க சுற்றுலாவையே நம்பி இருக்கிறது.

 

மாலத்தீவின் தலைநகரான மேலில் இருக்கும் தேசிய அருங்காட்சியகம், ஹுல் ஹுமாலே தீவு போன்றவை சுற்றுலாப் பயணிகள் அதிகம் சுற்றிப்பார்க்கும் முக்கிய இடங்களாகும். மேலில் இருக்கும் வெள்ளி தொழுகை மசூதி உலகின் பழமையான மசூதிகளில் ஒன்று.

 

மாலத்தீவின் அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் வண்ணம் அமைந்துள்ளன.

 

இங்கு நீங்கள் சுற்றிப்பார்க்க பொது படகுகளை எடுத்துச் செல்லலாம். இருப்பினும், வாரத்தின் 7 நாளும் அவை இயங்காததால், அவற்றின் கால அட்டவணையை நீங்கள் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

இங்கு ஒரு நாளைக்கு செலவாகும் சுற்றுலா கட்டணங்கள் (இந்திய மதிப்பில்) 2,000 ரூ முதல் 2,500 ரூ மட்டுமே. இங்கு ஒரு நாளைக்கு 80 ரூ முதல் 100 ரூ வரை குறைந்த விலையில் உணவுகள் கிடைக்கின்றன.

 

நேபாளம்  

 

உலகின் மிக உயர்ந்த மலைத்தொடர்களை கொண்ட நேபாளத்தின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரம் போன்றவை சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவா்ந்துள்ளது.

 

நீங்கள் குறைந்த பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல விரும்பினால், நேபாளம் சிறந்த இடமாகும். இந்திய - நேபாள எல்லையில் இருந்து ஒருமணி நேரத்தில் நேபாளத்தில் உள்ள முக்கிய மலை பிரதேசங்களை அடைந்துவிட முடியும். இங்கு, அதிகபட்சம் 10 நாளுக்கான சுற்றுலா செலவு (இந்திய மதிப்பில்) 15,000 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும். எனவே தான், நேபாள நாட்டில் ஆண்டுக்காண்டு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும்.

 

வியட்நாம்  

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வியட்நாம் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லும் விருப்பமான  நாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

 

வியட்நாமின், பழங்கால கட்டடங்கள் அனைத்தும் இன்றுவரை உறுதியுடன் நிற்கின்றன. இங்குள்ள நவீன வரலாறு, அழகான கடற்கரைகள், அழகிய நிலப்பரப்புகள், அற்புதமான உணவு மற்றும் படகு சவாரி போன்றவற்றைப் பார்வையிட குறைந்த செலவில் விலை நிர்ணயம் செய்திருப்பது சுற்றுலா பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

 

இங்குள்ள மலை நகரமான Sape- விற்குச் செல்லாமல் வியட்நாமிலிருந்து யாரும் தாய்நாடு திரும்புவதில்லை. மலைசூழ் பிரதேசமான இதில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.

 

மியான்மர்  

 

இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடு. மியான்மரில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் யாங்கோன் மற்றும் மாண்டலே போன்ற பெரிய நகரங்கள் உள்ளன.

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது மியான்மருக்கு குறைவான சுற்றுலா பயணிகளே வருவதால், கரோனா காலகட்டத்தில் பாதுகாப்பிற்கு ஏற்ற இடமாக உள்ளது.

 

மியான்மரின் கலாச்சாரங்கள், இரவு சந்தைகள், பாரம்பரிய சுற்றுலா, ஏராளமான கடற்கரைகள், ஆன்மீக சுற்றுலா போன்றவை இந்திய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்கின்றன.

 

இங்கு இருப்பிடம், உணவு முதல், உள்ளூர் போக்குவரத்து, சுற்றுலா கட்டணங்கள் வரை, எல்லாம் சேர்ந்து ஒரு நாளைக்கு (இந்திய மதிப்பில்) 3000 ரூபாய்க்கும், ஒரு வாரத்திற்கு 10,000 முதல் 15,000க்குள்ளேயும் செலவாகும்.

 

எனவே, நீங்கள் வரும் ஆண்டின் விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்ல விரும்பினால், மேலே கொடுக்கப்பட்டுள்ள ஏதேனும் ஒரு நாட்டினைத் தேர்வு செய்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மன மகிழ்ச்சியோடு கழிக்க வாழ்த்துக்கள்!