Skip to main content

நோபல் பரிசு வழங்கும் இடங்கள் !

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்பு களால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும்.

1. இயற்பியல் (Physics)

2. வேதியியல் (Chemistry)

3. இலக்கியம் (Literature)

4. மருத்துவம்(Medicine)

5. அமைதி (Peace)

6. பொருளாதார அறிவியல் (Economic Science) ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது.

nobel prize

* நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார்.

* டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்திவந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

* ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

நோபல் பரிசு வழங்கும் இடங்கள்:

* அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது.

* இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள்- சுவீடன் நாட்டில் வழங்கப்படுகின்றன.

சுவீடன் நடுவண் வங்கி - பொருளாதார அறிவியல் நோபல் பரிசு

* பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக் கட்டளையின் அவ்வருட வருமானத் தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர்.

* அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.
 

 

Next Story

பாலஸ்தீன விவகாரம்; ஐரோப்பிய நாடுகள் எடுத்த அதிரடி முடிவு!

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
the Palestinian issue; Action decision taken by European countries

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம் காசாவை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. 

the Palestinian issue; Action decision taken by European countries

இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராகச் சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் கடந்த 10 ஆம் தேதி (10.05.24) கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐ.நா அவையில் முழு நேர உறுப்பினராகச் சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா, பப்புவா நியூ கினியா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து எதிராக வாக்களித்தன. மேலும் 25 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தன. இதன் அதிக பெரும்பான்மை ஆதரவின் மூலம், பாலஸ்தீனம் ஐ.நா சபையில் முழு நேர உறுப்பினராக இருக்கவிருக்கிறது. 

the Palestinian issue; Action decision taken by European countries

இந்நிலையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளும் அங்கீகரித்துள்ளன. அதே சமயம் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ள ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய 3 நாடுகளில் இருந்து தூதரக அதிகாரிகளை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக தமது நாட்டுத் தூதுவர்களைத் திரும்ப அழைத்துள்ளதாக இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்காமல் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை ஏற்படுத்த முடியாது என நார்வே பிரதமர் ஜோனாஸ் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 28 ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

Next Story

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு! 

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

Nobel Prize for Economics Announcement!
கிளாடியா கோல்டின்

 

2023 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஆராய்ச்சியாளர்கள் கேட்டலின் கரிக்கோ, ட்ரூ வெய்ஸ்மன் ஆகிய 2 பேருக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு கடந்த 2 ஆம் தேதி அறிவித்தது. கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் எம்.ஆர்.என்.ஏ (mRNA) வகை கொரோனா தடுப்பு மருந்து குறித்த ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகித்த 2 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 

 

அதனைத் தொடர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு கடந்த 03ம் தேதி அறிவித்தது. அதன்படி அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஃபெரங்க் க்ரவுஸ் மற்றும் ஆனி ஹூலியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களின் உலகத்தை ஆராய்வதற்கான புதிய கருவிகளைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து வேதியியல் துறைக்கான நோபல் பரிசு கடந்த 04ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வேதியியலுக்கான நோபல் பரிசு மௌங்கி ஜி. பாவெண்டி, லூயிஸ் இ.புரூஸ் மற்றும் அலெக்ஸி ஐ.எகிமோவ் ஆகிய மூவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குவாண்டம் புள்ளிகளைக் கண்டுபிடித்துத் தொகுத்ததற்காக நோபல் பரிசு வழங்குவதாக நோபல் பரிசு தேர்வுக் குழு தெரிவித்து இருந்தது.

 

அதனையடுத்து இலக்கியத்திற்கான நோபல் பரிசு, நார்வே நாட்டைச் சேர்ந்த ஜோன் ஃபொஸ்ஸே என்பவருக்கு அறிவிக்கப்பட்டது. நாடகம் மற்றும் உரைநடையில் சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக இந்த பரிசு வழங்குவதாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு தேர்வு குழு அறிவித்தது. 

 

இந்நிலையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை கிளாடியா கோல்டின் என்பவருக்கு இன்று (9ம் தேதி) அறிவித்தது நோபல் பரிசு தேர்வுக் குழு. அமெரிக்காவைச் சேர்ந்த கிளாடியா கோல்டின், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான ஆய்வு மேற்கொண்டார். அதன் அடிப்படையில் அவருக்கு இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.