Skip to main content

அதீத மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு குட்டி ட்ரிக் - மனநல மருத்துவர் ராமகிருஷ்ணன் சொல்லும் ஐடியா

 

athma hospital chief doctor ramakrishnan about mental health

 

மன அழுத்தம் (Stress) என்பது தற்போதைய காலத்தில் அனைத்து வயதினருக்கும் ஏற்படும் சாதாரண பிரச்சனையாகப் பார்க்கப்பட்டாலும், அது தற்கொலை என்ற அசாதாரண முடிவு வரை சிலரை இழுத்துச் சென்றுவிடுகிறது. வேலைக்குச் செல்லும் பலரிடம் அவர்களுக்குரிய பிரச்சனை குறித்துக் கேட்டால் முதலில் சொல்வது மன அழுத்தத்தைப் பற்றித்தான். அதே போல மாணவர்களிடம் கேட்டாலும், அவர்களது முதல் பிரச்சனை மன அழுத்தமாகவே இருக்கும். இப்படி அனைத்துத்தரப்பு மக்களும் தற்போது மன அழுத்தம் என்கிற கொடுமையை அனுபவித்து வருகின்றனர். உலக அளவில் ஒரு ஆண்டில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொள்கின்றனர். அதாவது, 40 நொடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

 

இப்படியான புள்ளிவிவரங்கள் கேட்பதற்கே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், அதிகம் பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழக்கின்றனர் என்பதுவே நிதர்சனமான உண்மை. இந்த தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன அழுத்தம். நாளுக்கு நாள் மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை அதிகரித்துக்கொண்டே வருகிற இன்றைய சூழலில், திருச்சியில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனையின் தலைமை மனநல மருத்துவர் ராமகிருஷ்ணனிடம் நக்கீரன் சார்பாக மனநலன் தொடர்பான சில கேள்விகளை முன்வைத்தோம். 

 

athma hospital chief doctor ramakrishnan about mental health

 

மன அழுத்தம் என்பது என்ன..? எதனால் எல்லாம் இந்த பிரச்சனை வருகிறது..? 

இன்றைக்கு மன அழுத்தத்துக்கான அர்த்தமே நிறையப் பேருக்குப் புரியலை. எடுத்ததுக்கெல்லாம் நான் மன அழுத்தம், டென்ஷன்ல இருக்கேன்னு சொல்றாங்க. இந்த இரண்டு வார்த்தைகள்தான் அடிக்கடி உபயோகப்படுத்துறாங்க. 4 வயசு குழந்தைகூட நான் டென்ஷனா இருக்கேன்னு சொல்றாங்க. ஏன்னு கேட்டா வீட்டுப்பாடம் எழுதணுமாம். இது ஒரு ரகம்னா, வீட்ல சமைக்கணும்னா டென்ஷனா இருக்குன்னு சொல்லிட்டு ஆர்டர் பண்றாங்க. இதுவும் சாப்பாட்டை ஆர்டர் பண்ணி சாப்பிடுற பழக்கம் அதிகமானதுக்குக் காரணமா இருக்கலாம். முன்னாடியெல்லாம் கூட்டுக் குடும்பத்துல 30 பேர் இருந்தாலும் எந்த நவீன கருவிகளும் இல்லாம சமைச்சு சாப்பிட்டு போனாங்க. இன்னைக்கு நவீன கருவிகள் இருந்தாலும் சமைக்க மாட்டேங்குறோம். இன்னைக்கு காலக்கட்டத்துல மன அழுத்தம் இல்லாம இருக்கவே முடியல. ஏதோ ஒரு அழுத்தம் இருந்துகிட்டே இருக்கணும், இல்லைனா வாழ்க்கையே போர் அடிச்சிடும்னு நினைக்கிறார்கள். அதுதான் மக்களுக்குத் தெரிய மாட்டேங்குது. மன அழுத்தத்தை எப்படி overcome பண்றதுன்னுதான் யோசிக்கணும்.

 

எங்கு மன அழுத்தம் அதிகம்? வேலை பார்க்கும் இடத்திலா? வீட்டிலா?

முன்னாடியே சொன்ன மாதிரி எல்லா இடங்களிலும் மன அழுத்தம் இருக்கு. காலையில வீட்ல ஆரம்பிச்சு ஆபீஸ்க்கு கிளம்பிப்போய், நைட்டு வீட்டுக்குத் திரும்ப வர்ற வரைக்கும் மன அழுத்தம்தான். அதுவும், ஆபீஸ்ல நம்மகூட வேலைப் பார்க்கிற 4 பேர் வரலைனா அதையும் நாமதான் பார்க்க வேண்டியிருக்கும். அதுலகூட ஒரு மன அழுத்தம் இருக்கு. ஆனால், இந்தமாதிரி சின்ன சின்ன விஷயங்களைக் கூட மன அழுத்தம்னு சொல்லி மூளையில ஏத்திக்காம இருக்கணும். அப்படி மன அழுத்தத்தை ஏத்திக்கிட்டா நிச்சயமா டிப்ரஷன் அதிகமாகிடும். அதனால மூளையை ஃப்ரீயா வச்சுக்கங்க. அதுதான் ஒரே தீர்வு.

 

கேமிங் அடிக்ஷன், குறிப்பாக ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளால் ஏன் அதிகமான நபர்கள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்?

இன்றைக்கு கேமிங் அடிக்ஷனில் மிக மோசமானது ஆன்லைன் ரம்மி மாதிரியான பணம் பறிக்கும் கேம்கள்தான். இவர்கள் முதலில் கிரெடிட் பாய்ண்ட்களைக் கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நமது கவனத்தை ஆன்லைன் ரம்மி பக்கம் திசை திருப்புவார்கள். உள்ளே சென்று விளையாடத் துவங்கும்போதுதான் நம்மை அறியாமல் நாம் ரம்மி விளையாட்டுக்குள் சிக்க ஆரம்பிக்கிறோம். பொழுதுபோக்குக்காக ஆரம்பிச்சு பணத்துக்காகன்னு விளையாடுற நேரத்துலதான் பிரச்சனையே ஆரம்பிக்குது. முடிவு தற்கொலையில் போய் முடியுது. ரம்மி மட்டுமில்லை, Dream 11 மாதிரியான கேம்களும் ஆபத்தான கேம்கள்தான். இதற்கு அடிமையாவதற்குப் பெயர் எண்ணச்சுழல் நோய். இந்த நோயானது ஜெயிக்கணும், பணத்தை வாங்கணும்னு மனச நினைக்க வச்சுக்கிட்டு இருக்கும். இதை முழுசா தடுக்கணும்னா இந்த மாதிரி விளையாட்டுகளை அறவே தவிர்க்கணும்.

 

மன அழுத்தத்தை அதிகமாக உணரும்போது, அதை எதிர்கொள்வதற்கு ஒரு குட்டி ட்ரிக் சொல்லுங்க?

மன அழுத்தம் அதிகமா இருக்குற நேரங்களில் வேகமா ரியாக்‌ஷன் காட்ட வேண்டாம். விபத்தில் சிக்குறது, ஹார்ட் அட்டாக்ல தவிக்கிறதுதான் என்னைப் பொறுத்தவரை எமர்ஜென்சி. நிதானமா யோசிச்சு முடிக்காம, அவசர கோலத்தில் டக்குனு முடிக்கிறது. அவசரக் கோலத்தில் முடிக்கலைனா தலையையா வெட்டிடப் போறாங்க. இதுவரைக்கும் 75 ஆயிரம் நோயாளிகளுக்கு மேல பார்த்துட்டேன். என்கிட்ட ட்ரீட்மெண்ட்க்கு வர்ற எல்லாருக்கும் நான் சொல்றது இதுதான். மன அழுத்தத்தில் இருக்கும்போது அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். அதுவே கூடுதல் மன அழுத்தம் இல்லாம நம்ம பாதுகாக்கும்.

 

அடிக்கடி சோசியல் மீடியா பார்க்கிறது கூட அடிக்ஷன்ல வருமா?

இன்றைக்கு 5 நிமிடம் கூட சோசியல் மீடியாவைப் பார்க்காம யாராலையும் இருக்க முடியாது. கிடைக்கிற நேரங்களில் எல்லாமே சோசியல் மீடியாவில்தான் பெரும்பாலான மக்கள் இருக்கிறார்கள். நம்மை யார் கவனிக்கிறார்கள், நமக்கு ஏன் லைக் போடலைனு ஒருவித கவலைக்கு ஆளாகிடுறாங்க. இது எல்லாமே டிப்ரஷனோட அறிகுறிகள்தான். அவ்ளோ ஏன் செல்ஃபி அடிக்ஷனே வியாதிதான். சோசியல் மீடியாவில் அடிக்ட் ஆகும் குழந்தைகளைப் பெற்றோர்கள் சிறுவயதிலிருந்தே திசை திருப்ப வேண்டும். குழந்தைகளிடம் அன்பு காட்ட வேண்டும். அதேபோல பெற்றோர்கள் நேரம் ஒதுக்கி, தங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல், சுற்றுலா செல்லுதல் மாதிரியான விஷயங்களில் கவனம் செலுத்த வைக்கலாம். ஆரம்ப நிலையிலேயே கேமிங் அடிக்ஷனை கண்டுபிடித்தால் அவர்களை வரைதல், நீச்சல் போட்டிகள், சிலம்பம் எனப் பல விஷயங்களில் தொடர்ச்சியாக ஈடுபடச் செய்வது அவர்களின் அடிக்ஷனைக் குறைக்கும்.

 

அடிக்ஷனில் இருந்து விடுபட நினைக்கிறவர்களுக்கு ஆத்மா மருத்துவமனை என்ன மாதிரியான உதவிகளைச் செய்யும்?

இப்போது கேமிங் அடிக்ஷனுக்காக ஒரு வார்டே கொண்டு வரப்போகிறோம். அங்க அவங்களுக்கு தனியா கிரிக்கெட், புட்பால், கபடி-ன்னு முழுக்க முழுக்க Physical Game தான் இருக்கபோகுது. அங்கவச்சு அவங்களுக்கு பயிற்சி கொடுத்தா முழுமையா இந்த அடிக்ஷனில் இருந்து வெளியே கொண்டுவரலாம். எங்ககிட்ட வர்ற பெரும்பாலான நோயாளிகளைக் கவனமா பார்த்துத்தான் குணப்படுத்த வேண்டியிருக்கும். ஆரம்ப கட்டம்னா ஈஸியா குணப்படுத்தி அனுப்பிடலாம். முத்தின நிலைனா கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் குணப்படுத்த வேண்டியிருக்கும். மக்களுக்காகவே 98424 22121-ங்குற நம்பர் 24 மணிநேரமும் இயங்குது. மன அழுத்தம் மாதிரியான பிரச்சனைகளுக்கு எப்போது வேணாலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !