Skip to main content

இது ஒரு அப்ரைசல் காலம்! - எதிர்கொள்வது எப்படி?   

Published on 06/05/2018 | Edited on 07/05/2018

கம்பெனியில் வேலை பார்க்கும் உங்களுக்கு, திடீரென்று மேனேஜர் மேல் மரியாதை வரும், அவர் சொல்லும் ஜோக்குகளுக்கு சிரிப்பு வரும், லேட் ஈவினிங் ஆஃபீசில் இருந்து வேலையை முடித்துச் செல்லலாமே என்றெல்லாம் தோன்றும். எப்பொழுதும் வெளுத்துக்கட்டும் ஆஃபீஸ் பார்ட்டியில், குறைவாகவே சாப்பிட தோன்றும். நண்பர் பிரேக் போகலாம் என்று அழைத்தால், 'எதுக்குடா அடிக்கடி, எனக்கு வேலையிருக்கு' என்று சொல்லத் தோன்றும். இதெல்லாம் என்ன? காதலா என்றால் இல்லை, அப்ரைசல் பீதி என்று சரியாகச் சொல்லுவார்கள் கார்ப்ரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள். அந்த அளவுக்கு பரவலாக தெரிந்த விஷயமாகிவிட்டது அப்ரைசல் (appraisal).

 

apraisal dhanushஇந்த காலகட்டத்தில் நமது மேனேஜர்களும் மனிதவள மேலாண்மை துறையும் (HR) நமக்கு வழக்கமாக இல்லாத வேறு ஆட்களாக தெரிவார்கள். 'ஏத்தி வச்சு அழகு பாக்குறவண்டா நான்' என்பார்கள் சிலர். 'பயப்படுறியா குமாரு?' என்று நக்கல் செய்வார்கள் சிலர். நமது திடீர் மாற்றங்களைப் பார்த்து, 'ஆஹான்' என்று நம்மை கலாய்ப்பாளர்கள் நமது டீம் மேட்கள். இது எல்லாத்தையும், 'கண்டுக்காம போடா சுனாபானா, போ..போ...போ..' என்று நம்மை நாமே தேற்றிக் கொள்ளவேண்டும்.

ஏப்ரல், மே மாதம் வந்தாலே அலுவலகத்தில் அப்ரைசல் போர் நடக்கும். 'நமக்கு என்ன ரேட்டிங் வந்துருக்கோ'னு எகிறும் எதிர்பார்ப்போட ஸ்கூல்ல எக்ஸாம் எழுதிட்டு பேப்பர திருத்தி டீச்சர் நம்ம கையில் கொடுக்குற வரைக்கும் இருக்குமே, அதே பரபரப்புக்கும் படபடப்புக்கும் நம்மள திருப்பி கொண்டுபோற விஷயம்தான் 'அப்ரைசல்'. பணியாளர்களோட பணித்திறனை வச்சு அவங்களோட பெர்பாமன்ஸ்க்கு மார்க் போட்டு பணியேற்றம் பண்ணலாமா, பணிநீக்கம் பண்ணலாமா, கொடுக்குற சம்பளத்தை அதிகப்படுத்தலாமா, இல்ல கொடுக்குறது ரொம்ப அதிகம்னு சொல்லி குறைக்கலாமா, இப்படி எல்லா ஏற்ற இறக்க செயல்களையும் மேனேஜ்மென்ட் மற்றும் HR என்ற நவீன கால எஜமான்கள் தீர்மானிக்கற நடைமுறைதான் அப்ரைசல் (Performance Appraisal).

 

apraisal msbaskar1

 

 


அப்ரைசல பாத்து பயப்பட தேவையில்லை. ஒரு வகையில் நம்மள சுய பரிசோதனை செய்வது நல்லதுதானே? இதில் மற்றவர்கள் நம்மை பரிசோதனை பண்ணி ரிப்போர்ட் தருகிறார்கள். அதே நேரம், இந்த அப்ரைசல் முறை சில நிறுவனங்களில் நிறுவனம் மற்றும் ஊழியருக்கு இடையிலான மற்றும் மேனேஜர் - டீம் மெம்பர் இடையிலான தனிப்பட்ட பிரச்சனைகள், காரணங்கள் எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு ஒரு மிரட்டல் கருவியாக நடக்கிறதென்றும் குற்றச்சாட்டுகள் உண்டு. அது, உண்மையும் கூட. பல நிறுவனங்களிலும் தான் உண்டு, தன் வேலையுண்டு என்று செவ்வனே வேலை செய்பவருக்கு குறைந்த ரேட்டிங்கும், வேலையை குறைவாக செய்துவிட்டு அனைவரிடமும், முக்கியமாக மேனேஜரிடம் கலகலவென பழகும் சிலருக்கு அதிக ரேட்டிங் வழங்கப்படுவதுண்டு. இருந்தாலும், அடிப்படையில் அப்ரைசல் என்பது திறமை வாய்ந்த பணியாளரைக் கண்டறிந்து உயர்விக்கும் நிகழ்வுதான். இதை வெறுப்பதை விட எப்படி செவ்வனே எதிர்கொள்வது என்று சிந்தித்து செயல்படுவதுதான் சாமர்த்தியம். அதைத்தான் இப்போ பாக்கபோறோம்.

 

apraisal picமுதல் பாய்ண்டையே எடுத்துக்குவோம். அதிக வேலை செய்து யாரிடமும் பெரிதாக பேசாமல், பழகாமல் இருப்பவருக்குக் குறைந்த ரேட்டிங், வேலை அதிகம் செய்யாமல் அனைவரிடமும் பழகுபவருக்கு அதிக ரேட்டிங் என்ற சூழ்நிலையில் நாம் எப்படி இருக்க வேண்டும்? இரண்டின் கலவையாக இருக்க வேண்டும். இன்றைய வேலை உலகம் என்பது டீம் ஒர்க் என்ற அடிப்படையில்தான் இயங்குகிறது. அதனால், டீமின் மொத்த அவுட்புட் (உற்பத்தி/விளைவு) டீமில் உள்ள அனைவரின் பங்களிப்பில் வருவது என்று நம்பப்படுகிறது. இந்த இடத்தில், வேலை செய்யாமல் அனைவரிடமும் பழகுபவராக இருந்து கொள்ளுதல் நலம் என்று நினைத்தால் அது தவறு. அப்படிப்பட்ட ஆட்கள் சீக்கிரம் மாற்றிக்கொள்வார்கள். சில ஆண்டுகள், அல்லது ஒரு கம்பெனி மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். வேலை செய்ய வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் டீமில் அனைவரிடமும் சுமூகமாக இருப்பது மற்றும் செய்த வேலையை வெளிப்படுத்துவது. ஏனெனில், நிறுவனங்கள் எதிர்பார்ப்பது தனி மனித வேலையை மட்டுமல்ல, டீமுடன் நாம் பழகி, எதிர்காலத்தில் டீமை வழிநடத்தும் திறமையைதான். அதனால்தான் பல இடங்களிலும் நன்றாக வேலை செய்து, ஆனால் அதிகம் பழகாத பலர் அப்ரைசலில் கைவிடப்படுகிறார். அதையும் தாண்டி, அவர்களுக்கு திறமையான, நல்ல மேனேஜர் அமைந்திருந்தால், அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.

 


நம்ம கூட வேலை செய்யும் சீனியர்ஸ்க்கு தெரியும், இந்த அப்ரைசலில் புதுசா நீந்த வந்த கத்துக்குட்டி மீன்கள்தான் முதலில் பிடிக்கப்படுவார்கள் என்று. எனவே உங்கள் பணியில் என்னென்ன சிரமான பகுதி (உங்களுக்கு சிரமம் என நினைக்கும் பகுதி) உள்ளது, உங்கள் நிறுவனத்தில் முக்கியமாகக் கருதப்படும் 'பாராமீட்டர்ஸ்' (parameters - அளவுருக்கள்) என்னென்ன, அதை எப்படி டீல் செய்வது என கேட்டு அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். அப்ரைசல் வரும் மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் இதை நினைக்காம எப்பொழுதும் ஆலோசனைகளை கேளுங்க. அப்படி கேக்கிறவங்கதான் ரியல் புத்திசாலி. நீங்க ரியல் புத்திசாலியா இருக்க ஆசைப்படுறீங்களா, இல்லையா? 

 

apraisal officeசில சமயங்களில் உங்க மேல திணிக்கிற வேலையா இருந்தாலும் பரவாயில்ல, பாட்ஷா பட மாணிக்கம் மாதிரி சிரிச்சுக்கிட்டே ஏத்துக்கங்க. ஆனா, நீங்க செஞ்ச வேலைனு ஒரு பெரிய ஆதாரம் இருக்குற மாதிரி அந்த வேலைய செஞ்சு முடிச்சு, இவர்தாம்பா இந்த வேலைய செய்து முடிக்க சரியான ஆளு அப்படிங்கிற நம்பிக்கையைக் கொடுங்க. தீயா வேல செய்யனும் குமாரு, செஞ்சதுக்கு அடையாளமா சாம்பலாவது இருக்கணும். 

உலகத்தில இருக்க எல்லா சிறந்த நிறுவனங்களிலும் மிக சிறந்த அப்ரைசல் முறைகள் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை. அதாவது, சிறந்த நிறுவனங்களில். அதனால ஒளிவு மறைவு இல்லாத அப்ரைசல் முறைகள் இருக்குதா, இல்லையா என்பதிலேயே நீங்க வேலை செய்யும் நிறுவனத்தோட லட்சணம் தெரிஞ்சிடும். நீங்க பாதிக்கப்பட்டீங்க அப்பிடிக்குறதுக்காக அப்ரைசல தப்பா பேசாம, அதை முழுசா புரிஞ்சுகொள்ள ஆர்வம் காட்டுங்க. அப்படி காட்டினா, இப்போ நல்ல நிறுவனத்துல வேலை செஞ்சிட்டு இருக்கீங்கனு அர்த்தம். இல்லைனா இங்க பேப்பர் போட்டுட்டு, வேற நல்ல நிறுவனத்தல வேலை செய்ய நகரப்போறீங்கனு அர்த்தம். இந்த ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் நடக்கும்.
 

women staff in officeஅப்ரைசல் முடிவை உங்களை மேம்படுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கருதினால், அந்த மன நிலையே போட்டி மனநிலையும் சிரமமும் இல்லாத ஒரு விஷயமா அப்ரைசல அணுக வைக்கும். குறிப்பிட்ட திறமை குறைவு, குறிப்பிட்ட ஆளுமை பண்பில் குறை, சின்னச் சின்ன வேலைகளில் வரும் சின்னச் சின்ன பின்னடைவுகள், அனுபவமின்மை என எல்லாவற்றவையும் பட்டியல் போட்டு வாங்கி வைத்துகொள்ளுங்க. அப்படி செய்தால்தான் அடுத்த அப்ரைசல்ல லென்ஸ் வச்சு பாத்தாலும் ஆப்புரைசலா இல்லாம 'அப்'ரைசலா, திறமை படைத்த ஊழியனுக்கு கரும்ப கையில கொடுத்த மாதிரி இருக்கும்.

 


சமீப ஆண்டுகளாக பல மென்பொருள் நிறுவனங்களும் அதிக சம்பளம் வாங்கும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை தேவையற்ற பாரமாக நினைத்து, அவர்களை வெளியேற்ற ஒரு ஆயுதமாக அப்ரைசல்களை பயன்படுத்துகின்றன. அப்படி நடத்தப்படும் அப்ரைசல்களில் நாம் என்ன செய்தாலும் தேற முடியாது. அதில் பலியாகாமல் இருக்கவும் வழிகள் இருக்கிறதென 'கார்ப்ரேட் குரு'கள் சொல்கிறார்கள். அது தனி கதை. இன்னொன்றையும் நினைவில் வச்சுக்கணும். ஒரு ஆண்டுல நீங்க செய்த பணியை ஒரு அமைப்பு தன்னோட தேவைக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று அளவிடும் முறைதானே தவிர, அது ஒன்னும் உங்களோட வாழ்நாள் பணித்திறமைய ஒட்டுமொத்தமா ''இது தான் நீ'' என்று சொல்லும் விஷயம் இல்லை. உங்களை உள்நோக்கிப் பார்க்க அவங்க கொடுக்குற ஒரு வாய்ப்பு. அதுனால, அடுத்த முறை தூக்கிரலாம்னு  இப்போவே அசத்தலா வேலையைத் தொடங்குங்க நண்பா...

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.