Skip to main content

மிலிட்டரியாக வேண்டிய அஜித் ரசிகர், மாற்றுத் திறனாளியான சோக கதை ! 

விளையாட்டு பலருக்கு பொழுதுபோக்கு, சிலருக்கு வாழ்க்கை. விளையாட்டிற்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களும் உண்டு. கிராமத்தில் இருந்து சென்ற கபில்தேவ், சச்சின், தோனி போன்றவர்கள் கிரிக்கெட்டை மட்டுமே விளையாடி இந்தியாவையே தன்வசப்படுத்தியவர்களில் முக்கியமானவர்கள். எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் தனது இடுப்புக்கு கீழே செயலிழந்த நிலையிலும் இந்தியாவிற்காக வீல்சேர் கூடைப்பந்தை விளையாடியே தீருவேன் என்று அனல் பறக்க களத்தில் நிற்கிறார் நெல்லை மண்ணுக்கு சொந்தக்காரர் லெட்சுமணன்.
 

ajith fans

நெல்லை மாவட்டம் கொக்கிரக்குளத்தை சேர்ந்த அம்பலவாணன்-நங்கையார் தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தவர்தான் லெட்சுமணன். தந்தை சமையலராகவும், தாய் துணிக்கடையிலும் வேலை செய்கிறார். ஏழ்மையிலும் மகிழ்ச்சியாக வாழ்ந்த குடும்பத்தில், கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம் லெட்சுமணனின் வாழ்வையே புரட்டி போட்டது. 2012-ம் வருடம் லெட்சுமணன் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அப்போது நடிகர் அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் வெளியாகியுள்ளது. அஜித்தின் வெறித்தனமான ரசிகர்களில் இந்த லெட்சுமணனும் ஒருவர். இந்த திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்தவருக்கு, மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆசை வர, நண்பனை அழைப்பதற்காக நண்பரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
 

lakshmanan

வீட்டின் மாடியில் நின்று மரம் வெட்டிக் கொண்டிருந்த நண்பன், மரத்தை வெட்டிவிட்டு போய்விடுவோம் என்று சொல்லியிருக்கிறார். நண்பனுக்கு உதவியாக மாடியின் கைப்பிடி சுவரில் நின்று கொண்டு மரம் வெட்ட ஆரம்பித்திருக்கிறார். திடீரென்று லெட்சுமணன் மீது மரம் சறிய ஆரம்பிக்கவும், செய்வதறியாமல் திகைத்து மாடியில் இருந்து கீழே குதிக்கவும், வீட்டின் ஸ்லேப்பின் மீது விழுந்து அலறி இருக்கிறார். முதுகெலும்புகள் முறியும் சத்தம் கேட்டிருக்கிறது. வலியில் கதறி துடித்தவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்பு மதுரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உடல் முழுக்க அம்மன் போட்டிருக்கிறது. எந்தவித சிகிச்சையும் தொடர முடியாததால், இதுவரை அளித்த சிகிச்சை அனைத்தும் பயனற்று போனது.
 

lakshmanan

எழுந்து உட்காரவோ, நடக்கவோ முடியாமல் படுத்த படுக்கையானார். பல சிகிச்சைகள் அளித்தும் சரிவராததால் ஆய்க்குடியில் உள்ள அமர் சேவா சங்கம் என்ற தொண்டு நிறுவனத்தில் தங்கி பயிற்சி பெற்றிருக்கிறார். எப்படியாவது உடலை சரிசெய்து நடந்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தவரிடம், இனிமேல் நடக்கவே முடியாது என்ற அதிர்ச்சியான தகவலை கூறியிருக்கிறார்கள். பலநாட்கள் வேதனையில் துடித்து, தனிமையில் சென்று அழுது புரண்டிருக்கிறார். பின்பு இதுதான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டு புதிய உத்வேகத்துடன் களம் இறங்கியிருக்கிறார். அங்கிருந்து கொண்டே அழகப்பா பல்கலைக் கழகத்தில் தொலைதூரக் கல்வி மூலம் டிகிரி படிக்க ஆரம்பித்திருக்கிறார். மேலும் கணினி, டைப்பிங், தொலைபேசி பழுது பார்த்தல் போன்ற அனைத்தையும் கற்றிருக்கிறார். நடக்கவே முடியாது என்று சொன்ன வார்த்தையை முறியடிக்க பல பயிற்சிகள் எடுத்துக் கொண்டு 15 நாட்களில் ஸ்டிக் வைத்து மைதானம் முழுக்க நடக்க ஆரம்பித்திருக்கிறார். இவரைப் போல் பாதிக்கப்பட்டு, இவரோடு பயிற்சி எடுத்த கார்த்திக் என்பவர்தான் மாற்றுத்திறனாளிகளுக்கான கூடைப்பந்து போட்டி உள்ளது. அதில் கலந்து கொண்டு சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறார்.
 

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று கூடைப்பந்து போட்டிக்கான கேம்ப் நடப்பதை அறிந்த லெட்சுமணன், தன்னந்தனியாக சென்னை மண்ணில் கால் வைத்திருக்கிறார். நன்றாக நடக்க முடிந்த நபர்களே சென்னையில் முகவரி தேடிப் போக திணறும்போது, தன்னந்தனியாக வீல்சேராடு தேடி அலைந்து கேம்ப் நடந்த இடத்தை அடைந்திருக்கிறார். கூடைப்பந்து என்றால் என்னவென்றே தெரியாத லெட்சுமணனை, மற்றவர்கள் விளையாடுவதை இரண்டு நாட்கள் பார்க்க சொல்லியிருக்கிறார் கோச் தாயுமான சுப்பிரமணியன். பின்பு மூன்றாவது நாளில் இருந்து களத்தில் இறங்கி விளையாட ஆரம்பித்திருக்கிறார் லெட்சுமணன். வெளிநாட்டை சேர்ந்த மற்றொரு கோச் ஜெஸ்பாலின் துணையோடு பயிற்சி பெற்று 60 பேர் பங்கேற்றதில் முதல் ரவுண்டிலேயே செலக்ட் ஆகி தூள் கிளப்பியிருக்கிறார். இதனால் தாய்லாந்து நாட்டில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அங்குள்ள விளையாட்டு வீரர்கள் தரமான வீல்சேர் வைத்து விளையாடி இருக்கிறார்கள். ஆனால் இவர்களோ தரமில்லாத வீல்சேரை வைத்து  விளையாடி இருக்கிறார்கள். விளையாடும்போது வீல்சேரோடு கீழே விழும் நிலையில், வெளிநாட்டு வீர்ர்களோ எளிதில் எழுந்து விலையாடினர்.. ஆனால் நம் இந்திய வீரர்களோ கஷ்டப்பட்டு எழுந்து விளையாடியிருக்கிறார்கள். இதனால் தோல்விகளைத் தழுவி பல பாடங்களைக் கற்று இந்தியா வந்தனர். இப்போதும் இந்தியாவிற்குள் திறம்பட விளையாடி அசத்தி வருகிறார்கள். 
 

லெட்சுமணனின் திறமையைப் பார்த்த சத்தியபாமா பல்கலைக்கழகம், அங்கேயே இலவசமாக சீட் கொடுத்து கல்வி அளித்து கொண்டிருக்கிறார்கள்.லெட்சுமணனிடம் பேசினோம், “நான் வெறித்தனமான தல ரசிகர். நான் நல்லா இருக்கும்போது விளையாடவே போக மாட்டேன். இந்தப் பிரச்சனைக்கு பிறகுதான் விளையாட்டை முழுசா கத்துக்கிட்டு போட்டியில் கலந்துக்க ஆரம்பிச்சேன். வீட்டுல முதல் பையனா இருந்துட்டு குடும்பத்துக்கு ஏதும் பண்ண முடியாம இருக்குறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு. என் இடத்துல இருந்து தம்பி ஆனையப்பன் படிச்சிட்டே வேலை பாத்துட்ருக்கான். எல்லாத்துக்கும் மேல நண்பன் மாயாண்டிதான் நான் விளையாடுறதுக்கு முக்கியமான காரணம். நான் விளையாடுற இடத்துக்கு எல்லாம் என்னைய சைக்கிள்ல வச்சி தள்ளிட்டு வருவான். 
 

நான் விளையாடுறதுக்காக அவன் வேலையையே விட்டுட்டு கூட வந்துருக்கான். மாயாண்டி இல்லனா, இன்னிக்கு நான் இல்ல. எங்களுக்கு பெரிய பிரச்சனை என்னனா, ரயில்ல உள்ல மாற்றுத்திறனாளி கோச்ல வந்து கையும், காலும் நல்லா இருக்குறவங்க மனசாட்சியே இல்லாம படுத்துருப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் காதுல கேக்காத மாதிரியே படுத்துருப்பாங்க. அப்புறம் எங்களுக்கேத்த பாத்ரூம் கிடையாது. இதைக் கண்காணிக்க வேண்டிய டி.டி.ஆரும் எங்க கோச்சுக்கு வர மாட்டாரு. எங்களால தன்னந்தனியா ரயில்ல இருந்து இறங்க முடியாது. இப்படிதான் ஒருமுறை ரயில்ல இருந்து இறக்கிவிட ஆள் இல்லாம, ஒருமுறை மதுரைல இறங்குறதுக்கு பதிலா விருதுநகர்ல போய் இறங்குனேன். நடு ராத்திரியில என்ன பண்றதுனே தெரியாம முழிச்சிட்ருந்தேன். இதெல்லாம் அரசு சரி பண்ணா நல்லா இருக்கும். இப்படி எத்தனை தடைகள் வந்தாலும் சரி, இந்தியாவிற்காக விளையாடுறதுதான் என்னோட இலட்சியம்” என்று தன்னம்பிக்கையோடு கூறுகிறார் லெட்சுமணன். இவர் சாதிப்பதற்கு தடையாக இருப்பது வீல்சேர் மட்டும்தான். வெளிநாட்டில் ஆர்டர் கொடுத்து வாங்க 1.5 லட்சம் பணம் இல்லாமல் தவிக்கும் இந்த விளையாட்டு வீரனுக்கு நாம் உதவிக் கரங்களை நீட்டினால் மட்டுமே இந்தியாவிற்காக விளையாட இவர் போன்ற எண்ணற்ற திறமையாளர்கள் உருவாகுவார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்