Skip to main content

மாணவர்களைத் தற்கொலைக்கு தூண்டும் ஆன்லைன் கல்வி!

Published on 01/08/2020 | Edited on 01/08/2020
Image

 

கடலூர் அருகே ஆன்லைனில் கல்வி கற்க வசதியில்லாததால் மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு இணையதளம் மூலமாகவும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் கல்வி முறை என்பது மாணவர்கள் இடையே பாகுபாடுகளை ஏற்படுத்தும் என்றும் முறையானதாக இருக்காது என்றும் கல்வியாளர்களும் எதிர்கட்சியினரும் தொடர்ந்து எச்சரித்தும் கூட அரசு செவிமடுக்கவில்லை.

 

ஆன்லைன் கல்வியை முறைப்படுத்தும் நோக்கிலோ, மாணவர்கள் இடையே ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலையை உருவாக்கும் நோக்கிலோ அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இந்த ஆன்லைன் கல்வி எதிர்பாராத பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

 

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே பத்தாம் வகுப்புப் பயிலும் விக்னேஷ் என்னும் மாணவன் இணையதளம் மூலமாக கல்வி கற்க உபகரணங்கள் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 

நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாகவும், அரசு தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்களை நடத்தி வருகின்றன. இதனால் ஆன்லைன் பாடங்களைக் கற்க, விக்னேஷ் தனது பெற்றோரிடம் செல்போன் ஒன்று வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் செல்போன் வாங்கக்கூடிய அளவிற்கு பணம் இல்லை என்பதால் அவரது பெற்றோரால் வாங்கித்தர இயலவில்லை.

 

கடந்த ஜூன் 29 அன்று அவரது தந்தை விஜயகுமார் முந்திரிக்கொட்டை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் செல்போன் வாங்கித் தருவதாகக்கூறி என்று சாந்தப்படுத்தி உள்ளார். இருந்தும் அன்று இரவு 8:30 மணி அளவில் விக்னேஷ் தன் அறையில் அம்மாவின் சேலையில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இதனையறிந்த அவரது பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று, பின் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விக்னேஷ் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

ஏழை நடுத்தர குடும்ப பெற்றோர்கள் இப்போதுள்ள சூழ்நிலையில் விலை உயர்ந்த செல்போன்களையும் தொலைக்காட்சிகளையும் வாங்கி கொடுக்க முடியுமா அல்லது அரசாங்கமாவது மக்களுக்கு அந்த வசதிகளை வழங்கியுள்ளதா எதையுமே செய்யாமல் மாணவர்களை ஏற்றத்தாழ்வுடன் ஆன்லைன் கல்விக்கு தள்ளுவது சரியா என்பதை அரசு பரிசீலக்க வேண்டும். ஆனால் அரசு அதற்கு தயாராக இல்லை.

 

மேலும் அரசு திமுக ஆட்சியின்போது விலையில்லாமல் வழங்குவதற்கு வாங்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்காமல் இன்னும் முடக்கி வைத்துள்ளது. அப்படி வழங்கப்படாமல் வைத்துள்ள இந்த தொலைக்காட்சி பெட்டிகளை தொலைக்காட்சி இல்லாத ஏழை, எளிய படிக்கும் மாணவ மாணவிகள் உள்ள குடும்பத்தினருக்கு வழங்க முன்வர வேண்டும். அதன் மூலம் அவர்கள் அரசு நடத்தும் கல்வியை சுலபமாக படிக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

Next Story

மாற்றுத்திறனாளி கோரிக்கையை நிராகரித்த அரசு; நிறைவேற்றிய நடிகர் பாலா!

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Actor Bala who helped a special person by buying a three-wheeler

ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மாற்றுத்திறனாளி மனைவியான பிரேமா என்பவர் ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருகிறார்.இதையடுத்து 3 வயது முதல் போலியோவால் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியான இவர் தினந்தோறும் வீட்டில் இருந்து பேருந்து மூலம் வேலைக்கு செல்ல 2.கி.மீதூரம் நடந்து சென்று பேருந்து மூலம் வேலைக்கு சென்று வருகிறார். 60சதவீதம் மாற்றுத்திறனாளியான இவர் அரசு சமூக நலத்துறையில்  கடந்த 8வருடங்களாக மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் கேட்டு விண்ணப்பம் செய்த நிலையில் நான்குமுறை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் காலை-மாலை வேலைக்கு சென்று வருவதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தார்.

இந்நிலையில் ஈரோட்டில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்று பங்கேற்பதற்காக தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் பாலாவை உணர்வுகள் அமைப்பு மூலம் மாற்றுத்திறனாளி வாகனம் கேட்டு கோரிக்கை மனு அளித்தார்.இதையடுத்து மாற்றுத்திறனாளி பெண்ணின் மனுவை பெற்று கொண்ட பாலா நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.இதன் பின்னர் மாற்றுத்திறனாளி பிரேமாவும் வீட்டிற்கு சென்று விட்டார்.இதற்கிடையே நிகழ்ச்சி முடிவடைவதற்குள் நடிகர் பாலா உணர்வுகள் அமைப்பினரிடம் நிதி கொடுத்து 50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மாற்றுத்திறனாளி வாகனத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினார்.

இதையடுத்து நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பு நடிகர் பாலா மாற்றுத்திறனாளி பெண் பிரேமா வீட்டிற்கு நேரடியாக சென்று மாற்றுத்திறனாளிக்கு மூன்று சக்கர வாகனத்தை வழங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.இதனால் ஆனந்த கண்ணீருடன் நடிகர் பாலாவுக்கு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் கணவர் நன்றி தெரிவித்தனர்.இதையடுத்து தனது வீட்டிற்குள் பாலாவை அழைத்து தண்ணீர் வழங்கி உபசரிப்பு செய்தார். மாற்றுத்திறனாளி பெண் வார்த்தைகளால் விவரிக்க முடியாமல் சந்தோஷத்தில் திளைத்தப்படி பாலாவுக்கு மீண்டும் மீண்டும் நன்றியை தெரிவித்தார்.மேலும் இந்த வாகனம் எவ்வளவு பெரிய உதவியாக இருப்பதுடன் வாழ்க்கையை  மேம்படுத்த எந்த அளவு உதவியாக இருக்கும் என்று கண்ணீர் மூலம் விவரித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பாலா, “அரசுக்கு அறிவுரை வழங்கும் வகையில் எனக்கு தகுதி இல்லை. என்னிடம் இருந்தால் உதவி செய்வேன். பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் செய்வதற்கு நடவடிக்கை எடுத்து கொண்டு இருக்கிறேன். முன்பு வழங்கிய இலவச ஆம்புலன்ஸ் சேவை நல்ல முறையில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது” என்றார். 

இது குறித்து மாற்றுத்திறனாளி பெண் பிரேமா கூறுகையில், “44வயது காரணமாக பேருந்தில் பயணம் செய்ய முடியவில்லை. அரசியல் கட்சி பிரமுகர்கள் மூலமாகவும் வாகனம் கேட்டும் கிடைக்கவில்லை. இரட்டை பெண் குழந்தைகள் வைத்துக் கொண்டு வாழ்வாதாரத்தை நடத்துவதற்கு சிரமத்தை சந்தித்து வரும் நிலையில் பாலாவின் உதவி பெரும் உதவியுடன் புதிய நம்பிக்கையாக உள்ளது” எனத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கோரிக்கை மனு அளித்து சில மணி நேரத்தில் கோரிக்கை நிறைவேற்றிய நடிகர் பாலாவின் செயல் அப்பகுதியில் காண்போரை நெகிழ்ச்சி யில் ஆழ்த்தியது. 

Next Story

300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு; 100 பாஜகவினர் குண்டுக்கட்டாக கைது

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
BJP workers arrested for struggle in Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 54 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசின் மெத்தன போக்கே காரணம் எனவும் தமிழக அரசின் செயல்பாடு மெத்தனப் போக்கே காரணம் என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கஞ்சா சாராயம் போன்ற போதைப் பொருட்களின் ஊடுருவல் அதிகமாக இருப்பதாகவும் கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாராயத்தால் பலியானவர்களுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசை கண்டித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் ஈடுபட முயன்றனர். அப்போது ஆர்ப்பாட்டத்திற்கு காரில் வந்தவர்களை மறித்து போலீசார் பாஜக நிர்வாகிகளை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் குண்டு கட்டாக கைது செய்து மண்டபத்தில் அடைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் குண்டு கட்டாக கைது செய்து வேனியல் ஏற்றி அனுப்பினர். பாதுகாப்பு பணிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒரு ஏடிஎஸ்பி மற்றும் இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.