Skip to main content

உலகம் இதுவரை பார்க்காத சினிமா படம்...  ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2 ரகசியம்!!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018
avatar


 

2020 டிசம்பர் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் அவதார் 2 படத்தின் முதல் காட்சியை பார்க்க காத்திருக்கிறீர்கள். ஒரே இருட்டு திடீரென படம் ஆரம்பமாகிறது. நீங்கள் ஆழ்கடலுக்குள் இழுத்து செல்லப்படுவதாக உணர்கிறீர்கள். அது உலகின் மிக ஆழமான மெரினா அகழியின் தரைத்தளம். உடனே உங்களை நோக்கி வினோதமான மீன்கள், ஜந்துகள் பாய்ந்து வருகின்றன. ஆழ்கடலுக்குள் இருக்கும் புகையும் எரிமலை மிரளவைக்கிறது. பெரிய பிளவு பள்ளத்தாக்கு இடையே வேகமாக பயணிப்பது போன்று இருக்கிறது. உங்களின் உடல் முழுவதும் சிலிர்த்து போகிறது. ஆழ்கடலில் கனிம வளங்களை எடுக்கும் மனிதர்களுக்கும் அரிய உயிர்களை காக்கும் வேற்று கிரக வாசிகளுக்கும் நடக்கும் உக்கிரமான போர் ஆச்சர்யமூட்டும் காட்சிகளாக கண் முன்னால் நடப்பதை பார்க்கிறீர்கள்.

 

இப்படி ரசிகர்களை ஒரு சினிமா படம் அசத்த முடியுமா. படத்தின் காட்சிகள் வழியே அதிகபட்ச உணர்ச்சிகளை கொடுத்து படத்துடன் முழுமையாக ஒன்றிபோக வைக்க முடியுமா. முடியும் என்று சவாலாக அவதார் 2 படத்தை இயக்கி வருகிறார் சினிமாவின் உலக நாயகன் ஜேம்ஸ் கேமரூன். டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர். அதிகபட்ச காட்சியமைப்பும் ஒலி அமைப்பும் கொடுத்து ரசிகர்களை படத்துடன் முழுமையாக ஒன்றிவிட வைக்கும் முயற்சி தான் அவதார் 2,3,4,5 தொடர் படங்களின் நோக்கம். நாம் இந்த உலகை எப்படி பார்க்கிறோமோ அதே போன்று தத்ரூபமாக காட்சிப்படுத்தினால் மட்டும்தான் இது சாத்தியமாகும்.


  
நாம் எப்படி இந்த உலகை பார்க்கிறோம் என்பதை முதலில் பார்ப்போம். நமது இரு கண்களும் சரியான இடைவெளிக் கொண்டு அமைந்துள்ளன. இதனால் நாம் இருமை பார்வை அமைப்பு (Binocular Vision System) கொண்டுள்ளோம். அதனால் இரண்டு கண்களும் ஒரே உருவத்தை தனித்தனியே பார்க்கின்றன. ஒவ்வொரு கண்ணும் அனுப்பும் தகவலை மூளையானது இரண்டு கண்களின் காட்சிகளை ஒருங்கிணைத்து முழுமையான காட்சியாக பார்க்கிறது. அதாவது முப்பரிமாணத்தில் (3D) பார்க்கிறோம். இயற்கையிலேயே இந்த உலகமும் முப்பரிமாணத்தில் அமைந்துள்ளது. அதனால்தான் தூரத்தில் நமக்கு வேண்டியவர் நிற்பதை பார்ப்பதோடு எவ்வளவு தூரத்தில் நிற்கிறார் என்பதையும் பார்த்த உடனேயே கண்டுபிடித்து விடுகிறோம். இதுமட்டுமல்ல 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட நம்மை சுற்றி நடப்பதை துல்லியமாக பார்க்க முடியும். ஆக இயல்பிலேயே முப்பரிமாணத்தில் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் சினிமாக்களை (3D படங்களை தவிர) இரண்டு பரிமாணங்களில் (2D) தட்டையாக பார்த்து கொண்டிருக்கிறோம். 

 

avatar  
மனிதனின் பார்வை திறன் போலவே சினிமாவை காட்டும் சிந்தனையில் வந்ததுதான் 3D சினிமா. நமது கண்களின் பார்வை போலவே இரண்டு கேமராக்களை கொண்டு ஒரே படத்தை சற்று மாறுபட்ட கோணத்தில் படம் பிடிக்கப்படுகிறது. அப்படி எடுக்கப்பட்ட படத்தை சினிமா தியேட்டரில் இரண்டு சினிமா புரஜக்டர்கள் கொண்டு திரை மீது ஒளிக்கற்றைகள் விழவைக்கப்படுகிறது. சினிமா பார்த்துக்கொண்டிருக்கும் போது தலைக்கு மேலே செல்லுவதுதான் ஒளிக்கற்றைகள். அதாவது இரண்டு ஒளிக்கற்றைகள். அதில் ஒன்று கிடைமட்ட ஒளிக்கற்றை (Horizontally Polorised). இன்னொன்று செங்குத்தான ஒளிக்கற்றை (vertically Polorised) . திரையில் இரண்டு உருவங்களும் ஒன்றன் மீது ஒன்று விழுகின்றன. இப்போது நாம் திரையில் தோன்றும் உருவத்தை பார்த்தால் இரண்டு வித உருவங்களை இரண்டு கண்களும் பார்ப்பதால் மூளைக்கு அப்படியே கடத்தப்பட்டு மூளை குழம்பி தெளிவில்லாத படத்தை பார்க்கும். அப்போது தான் நாம் பாக்கெட்டை தடவி பார்ப்போம். அடடே டிக்கெட் வாங்கும்போதே கண்ணாடி கொடுத்தார்களே என்று. அதை எடுத்து மாட்டினால் படம் முப்பரிமாணத்தில் தெளிவாக தெரியும். இப்போது என்ன நடந்தது.

 

இந்த 3D கண்ணாடி என்பது போலராய்ட் கண்ணாடிகள். இந்த கண்ணாடிகள் ஒரே மாதிரித் தோற்றமளித்தாலும் உண்மையில் அதன் கோணம் இரண்டு விதமாய் இருக்கும். சாதாரணமாக 45 முதல் 135 டிகிரி வரையிலான மாற்றுக் கோணத்தில் இருக்கும். போலராய்ட் பில்டர் வழியாக வரும் படங்களில் ஒன்றை ஒரு கண்ணும் இன்னொன்றை இன்னொரு கண்ணும் பார்க்கும் படியாக இது அமைந்திருக்கும். ஒவ்வொரு கண்ணுக்கும் ஒருவித கண்ணாடி. திரையில் விழும் கிடைமட்ட ஒளிக்கற்றைகளானது வலது பக்க பார்வைக்கும், செங்குத்தான ஒளிக்கற்றையானது இடது பக்க பார்வைக்கும் செல்லும். அதாவது கண்ணாடியின் வலது பக்க கண்ணாடி கிடைமட்டமான ஒளிக்கற்றை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது செங்குத்தான ஒளிக்கற்றை பார்க்க தடுத்து விடுகிறது. இடது பக்க கண்ணாடி செங்குத்தானதை மட்டும் பார்க்க அனுமதிக்கிறது கிடைமட்டமான ஒளிக்கற்றை பார்க்க தடுத்து விடுகிறது. இதன் மூலம் இரண்டு கண்களும் தனிதனியே பார்க்கிறது. இதனால் இரண்டு கண்களும் ஒரே படத்தை வித்தியாசமான கோணத்தில் பார்க்கும் போது நிஜமான ஒரு முப்பரிமாணக் காட்சி கிடைக்கும். ஒரு கண்ணை மூடிவிட்டுப் பார்த்தால் தெளிவில்லாத 2D  தான் தெரியும்.  நமது மூளை இரண்டு உருவங்களையும் கலவையாக புரிந்துக்கொண்டு 3D காட்சிகளை பார்த்து ரசிக்கவைக்கிறது. 
 
  
இப்போது பிரச்சினை 3D கண்ணாடிதான். கண்ணாடி மாட்டிக்கொண்டு பார்ப்பதனால் சினிமாவை முழுமையாக ரசிக்க முடியாமல் உறுத்தல் செய்கிறது. பெரும்பாலானவர்களுக்கு தலைவலி கூட ஏற்படுத்துகிறது. இப்போது வரும் 3D படங்கள் கூட இரண்டு பரிமாண படங்களை முப்பரிமாணம் போல மாற்றிக் காட்டும் வித்தைதான். போகட்டும் இந்த பிரச்சினையில்லாமல் இயற்கையாக இந்த உலகை பார்த்து ரசிக்கும் முப்பரிமாண காட்சிகளை போலவே சினிமா காட்சிகளையும் காட்ட முன்வந்துள்ளன புதிய லேசர் ஆட்டோ ஸ்டிரியோஸ்கோபி (Autostereoscopy) புரெஜக்டர்கள் வந்துவிட்டன. இப்போது அதே இரண்டு ஒளிக்கற்றைகள் லேசர் புரெஜக்டர் மூலம் சிதறடிக்கப்பட்டு மிகவும் சிறிய ஒளி தொகுதிகளாக மாற்றப்படுகின்றன.

 

இதனால் பல ஆயிரக்கணக்கான சிறு ஒளி தொகுப்புகள் இரண்டு கோணங்களில் மாறுபாடு அடைந்து திரையில் விழுகின்றன. திரையிலேயே 3D கண்ணாடி வேலை நடந்துவிடுகிறது. இப்போது அனைத்து சிறு ஒளித்தொகுப்புகளும் இடைமட்ட மற்றும் செங்குத்தான ஒளிக்கற்றையாக திரையிலிருந்தே நமது கண்களுக்கு வந்து சேருகின்றன. இவை பார்வை நரம்புகளால் மூளைக்கு கடத்தப்பட்டு முப்பரிமாண படமாக கண்ணாடியில்லாமல் பார்க்க முடிகிறது. இதன் மூலம் வெற்று கண்களில் 3D படத்தை பார்க்கலாம். படம் பார்க்கும் உணர்வை மாற்றி காட்சிகள் அனைத்தும் நம் கண் முன்னால் நடப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். இப்படிப்பட்ட படமாக தான் அவதார் 2 உலகில் முதல் முதலாக வெளிவர இருக்கிறது. இதற்காக ஜேம்ஸ் கேமரூன் அமெரிக்காவின் கிறிஸ்டி டிஜிட்டல் நிறுவனத்திட்ம் RGB லேசர் புரெஜக்டர் சிஸ்டத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். இந்த லேசர் புரெஜக்டர் 60,000 லூமினஸ் வெளிசத்தில் சிறு ஒளி தொகுப்புகளை உருவாக்கி கண்ணாடியில்லா 3D சினிமாவை திரையில் காட்டும். இப்படி 3D படமாக அவதார் 2 காட்டப்பட்டாலும் படம் மிக துல்லியமாக இல்லாவிட்டால் காட்சிகள் நமது கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வை நிச்சயம் தராது. இதனையும் மாற்றிகாட்ட இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். 

 

இதுவரை அனைத்து படங்களும் பொதுவாக 24 பிரேம்களை கொண்டது. அதாவது 1 நொடிக்கு 24 பிரேம்களில் படம் பிடித்து அதே 24 பிரேம்களில் படத்தை திரையில் ஓடவைப்பது தான் நடைமுறை. இதன் மூலம் தெளிவான காட்சிகளையும் தெளிவான ஒலியையும் கேட்கலாம். இந்த 24 பிரேம் ரேட்டை தாண்டும் உலகின் முதல் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவதார் 2 படத்தை ஒரு நொடிக்கு 60 பிரேம்களில் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை 48 பிரேம்களே அதிகபட்சம். அதாவது மிக அதிக பிரேம் எண்ணிக்கையில் படம் பிடித்து அதே 60 பிரேம்களில் திரையில் அவதார் 2 படம் ஓடும். இப்படி அதிக பிரேம் ரேட்களில் படம் எடுத்து திரையில் காட்டும்போது அவதார் 2 மிக மிக துல்லியமான தெளிவான படமாக இருக்கும். 1 நொடிக்கு 60 பிரேம் என்பது உலக சினிமா இதுவரை பார்க்காதது. அப்படியென்றால் இப்படத்தின் தெளிவான காட்சியமைப்பு பிரமிக்க வைக்கும். 60 பிரேம் ரேட்டில் RGB லேசர் புரெஜக்டர் படம் ஓட்டி காட்டிவிடும். ஆனால் படம் பிடிக்கும் கேமரா சொதப்பிவிட்டால். அதற்கு தான் அவதார் 2 காட்சிகள் சோனி வெனிஸ் கேமிராவில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. புத்தம் புது வரவான இந்த கேமரா இரவில் கூட மிக துல்லியமாகவும், பிரகாசமாகவும் படம் பிடிக்கக் கூடியது. அதிக பிரேம் ரேட்டில் படம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே ஜேம்ஸ் கேமரூன் இருபது வருடங்களாக படம் பிடித்து வந்த சோனி சினி அல்டாவை இந்த முறை மாற்றிவிட்டார். தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தாலும் டைட்டானிக் ஒளிப்பதிவாளர் ரசல் கார்பெண்டரை பெரிதும் நம்பி இருக்கிறார்.


  
என்னதான் மிக பிரகாசமாக படம் பிடித்தாலும் காட்சிகளும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கதாபாத்திரங்களும் மிக துல்லியமாக இல்லாவிட்டால் நம்பகத்தன்மை குறைந்துபோய் படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும். இதற்காக அவதார் முதல் பாகத்தை கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைத்து கொடுத்த நியூசிலாந்து நாட்டை சேர்ந்த வெட்டா டிஜிட்டல் நிறுவனமே அவதார் 2 படத்திற்கும் வடிவமைப்பு செய்து தருகிறது. இந்த நிறுவனமே அதிகபட்ச ஹாலிவுட் படங்களுக்கு வடிவமைப்பு செய்து அதிகமுறை ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளது. இதுவரை எந்த ஹாலிவுட் படத்திற்கும் இல்லாத அளவில் 8 அடுக்கில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் செய்யப்படுகிறது. அவதார் 2 படத்தில் உலகின் ஆழமான பகுதியான மெரினா அகழி தான் கதைகளம். இதில் ஏற்கனவே ஜேம்ஸ் கேமரூன் இறங்கி மூன்று மணிநேரம் படம்பிடித்து வந்துள்ளார். அந்த பூமியின் ஆழமான பகுதியில் இருக்கும் நில அமைப்பு குறிப்பாக புகையும் எரிமலை, ஆறுகள், தாவர வகைகள், உலகம் தோன்றி இன்னும் அழியாத அரிய வகை உயிரினங்கள், அனைத்தும் அவதார் 2 படத்தில் இன்னும் வித்தியாசமாக காட்டப்படுகிறது. இதற்காக அதிகபட்ச உயிர்தன்மை கொண்ட வடிவமைப்பு செய்ய வேண்டிய வேலையை சவாலாக ஏற்றுள்ளது வெட்டா டிஜிட்டல் நிறுவனம். அவதார் முதல் பாகத்தில் மலை காடுகளை கொண்ட பண்டோரா கிரகத்தை மிக சிறப்பாக வடிவமைத்து அசத்தியிருந்தனர். இந்த படத்தில் எந்த படத்திலும் இல்லாத அளவில் வடிவமைப்பு இருக்கும். 

 

avatar


 

இந்த அவதார் 2 படத்திற்கு மட்டும் 250 மில்லியன் பணத்தை தயாரிப்பு செலவாக நியூசிலாந்தில் கொட்டியிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூனும் அவரது நெருங்கிய நண்பர் ஜான் லண்டுவேவும். தனது வாழ்நாளில் சம்பாதித்த பணத்தை அவதார் 2, 3 படங்களில் செலவு செய்கின்றனர். இதில் வசூலானால் தான் அவதார் 4,5 படங்களை எடுக்க உள்ளனர். இவ்வளவு விஷயம்  நடந்துவருகிறது. ஆனால் அமெரிக்க மீடியாக்கள் அவதார் 2 படத்தில் இங்கிலீஷ் ரோஸ் நடிப்பதை பெரிய செய்தியாக வெளியிடுகின்றன. அவர் தான் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லட். ” நான் இங்கிலாந்து பெண். ஜிம்மின் (ஜேம்ஸ் கேமரூனின் செல்ல பெயர்) படத்தில் இனிமேல் நான் நடிக்கவே மாட்டேன்” என்று டைட்டானிக் படத்திற்கு பின்னர் பேட்டியளித்திருந்தார் கேட் வின்ஸ்லட். இப்போது அவதார் 2 படத்தில் நடிப்பதை பற்றி கேட்டதற்கு ”ஆமாம் அதிகமான பணத்திற்காகவே ஜிம்மின் படத்தில் நடிக்கிறேன்” என்றார் வெகுளியான கேட். இதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் ”கேட்டும் நானும் இருபது ஆண்டுகள் கழித்து அவதார் 2 படத்தில் இணைகிறோம். இருவரும் பல புதுமைகளை படைக்க இருக்கிறோம். எனது வாழ்வில் கேட் ஒரு சுவரஸ்யமானவள்” என பதிலளித்தார். அவதார் 2 யூனிட் இப்போது உற்சாகமாக படப்பிடிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறது. டைட்டானிக் படத்திற்கு ஆஸ்கார் விருதை கொடுத்தபோது ஜேம்ஸ் கேமரூன் ஒரு கையில் ஆஸ்கார் விருதையும் அருகில் இருந்த கேட் வின்ஸ்லட்டை அணைத்தபடி “  I  am the king of the world ” என்று கத்தினார். அதே காட்சியும் அதே டயலாக்கும் மீண்டுமொருமுறை அவதார் 2 ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் உலகம் பார்க்க தான் போகிறது.

 

 


  

 

Next Story

“மத்திய அரசு பாசிச கொள்கையை கடைப்பிடிக்கிறது” ஆ.ராசா எம்.பி!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
The central govt adheres to the principle of favoritism A Rasa MP

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.

இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா எனப் பலரும் உரையாற்றினார்.

அந்த வகையில் மக்களவையில் திமுக எம்.பி. ஆ.ராசா பேச்சுகையில், “பாசிச கொள்கையை மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. சிறுபான்மையினர், பட்டியலினத்தோரை மத்திய அரசு ஒடுக்கப்பார்க்கிறது. மத்திய பாஜக அரசு நினைப்பதை குடியரசுத் தலைவர், சபாநாயகர் மூலமாக சொல்கின்றனர். 8 முறை பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். எமர்ஜென்சியை அமல்படுத்தியதற்காக முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார். ஒவ்வொருவரும் அவரவர் செய்துகொண்டிருக்கும் வேலையையே செய்ய வேண்டும் எனப் பாஜக நினைக்கிறது. பாஜக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சர்வாதிகாரம் கொண்டவை. பாசிச கொள்கை கொண்ட பாஜக எமர்ஜென்சி பற்றி பேச அருகதை இல்லை” எனப் பேசினார். 

Next Story

‘உலக அரங்கில் இந்திய சினிமா’ - ஜேம்ஸ் கேமரூன் மகிழ்ச்சி

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
James Cameron about rajamouli rrr

51வது சாட்டர்ன் விருதுகள் நடந்து முடிந்த நிலையில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் 2 படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதற்காக விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இந்திய சினிமா குறித்து மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் நடந்த கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் விழாவில் ராஜமௌலியை சந்தித்து பேசிய ஜேம்ஸ் கேமரூன் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து பாராட்டியிருந்தார். இந்த நிலையில் சாட்டர்ன் விருது விழாவில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் அவருடன் அந்த நேரத்தில் நேர்மையாக இருந்தேன். இது அற்புதமானது என்று நான் நினைத்தேன். இந்திய சினிமா உலக அரங்கில் கவனம் ஈர்ப்பதை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என பதிலளித்தார். 

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது.