Skip to main content

"மரணத்தைப் பற்றி இளம் வயதில் சிந்திக்க வேண்டியதில்லையே..." - யுகபாரதியின் அணிந்துரை! 

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Yugabharathi

 

கவிஞர் சாக்லா எழுதியுள்ள 'உயிராடல்' என்ற கவிதைத் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது. அத்தொகுப்பிற்கு பாடலாசிரியர் யுகபாராதி வழங்கியுள்ள அணிந்துரை...

 

"வாழ்வின் அழகே மரணமும்"
 

வளரும் இளங்கவிஞர் வாழ்த்துக்கேட்டிருக்கிறார் என்னும் எண்ணத்துடன்தான் சாக்லாவின் `உயிராடல்’ கவிதைநூலை வாசிக்க ஆரம்பித்தேன். தெரிந்த முகமாக நானிருப்பதால் அப்படிப் பலரும் கேட்டு வாழ்த்துரையோ அணிந்துரையோ பெற்றுக்கொள்வது வழக்கம்.  

 

எழுதவேண்டும் எனும் உத்வேகத்துடன் கவிதைகளில் காலோ கையோ வைக்கும் அவர்களில் பலர், ஒருகட்டத்திற்குப் பிறகு அம்முயற்சிகளிலிருந்து வெளியேறிவிடுவர். அப்போது எனக்குள் நானே, ஆசையாய் எழுதிக்கொடுத்த வாழ்த்தும் நம்பிக்கையும் பொய்த்துவிட்டதே என வருத்தமுறுவேன். சம்பந்தப்பட்ட நபர்கள் ஆர்வத்துடன் எழுத முனைந்தாலும் வாழ்க்கை அவர்களை அத்துறையில் மேலெழுந்து முகிழ்க்கும் சந்தர்ப்பங்களைக் கொடுப்பதில்லை.  

 

ஒருதுறையில் தொடர்ந்து செயலாற்ற வாய்ப்பும் வசதிகளும் கூடிவரவேண்டும். அதைவிட, அதை கைவிடாத வைராக்கியம் முக்கியம். தம்பி சாக்லாவின் கவிதைகள், அவர் இத்துறையில் நீடித்து நிலைப்பார் என்கிற அடர்ந்த அபிமானத்தை அளிக்கின்றன. சின்னச்சின்ன கவிதைகளே ஆயினும் அவர் சொல்லவருவதில் ஒருவிதத் தெளிவு தென்படுகிறது. வாழ்விற்கான தேடல்களை மரணத்தின் குவியலிலிருந்து ஆரம்பித்திருக்கிறார். உதிர்ந்துவிழும் ஒற்றை மலர் குறித்து எழுதும் அவர், பூக்களைக் கொடிகள் சொல்லிக்கொண்டு உதிர்ப்பதில்லை என்கிறார். தயக்கத்தையும் தோல்வியையும் இயல்பாக எடுத்துக்கொள்ளும்படியான மனோநிலைக்கு சாக்லா தம்மை தயார்படுத்தியிருக்கிறார். இது எல்லோருக்கும் கிடைத்துவிடக்கூடிய பக்குவம் அல்ல.  

 

மரணத்தைப் பற்றி இந்த இளம் வயதில் இத்தனைதூரம் சிந்திக்கவேண்டியதில்லையே என முதல் வாசிப்பில் எனக்குமே தோன்றிற்று. ஆனால், இரண்டாவது மூன்றாவது வாசிப்பில்தான் அவர் மரணம் என்ற சொல்லுக்கு நேரடியான பொருள்கொள்ளவில்லை என்பது புரிந்தது. உதாரணமாக, `மரணித்ததும் ஏன் குழிக்குள் இறக்குகிறார்கள் என்றான் / துயரத்தை இறக்கிவைத்திட வேண்டுமல்லவா’ என்று எழுதியிருக்கிறார். மரணம் துயரம் தரக்கூடியது என்பதில் சாக்லாவிற்குச் சந்தேகமில்லை. ஆனால், அதைக்கூட கடந்துவாழ்வது பற்றியே அதிகமும் யோசித்திருக்கிறார். 

 

எப்பவும் என் இதயத்திற்கு நெருக்கமான வள்ளலார் மரணமிலா பெருவாழ்வுக் குறித்து சொல்லியும் எழுதியும் இருக்கிறார். ஒருவரின் வாழ்வென்பது பூதவுடலுடன் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. இவ்வாழ்வைத் தாண்டி அகவாழ்வே வாழ்வென்று வள்ளலார் உள்ளிட்ட பல இறைநேசர்கள் கற்பித்திருக்கிறார்கள். தம்பி சாக்லாவின் எழுத்துகளில் தெறிக்கும் மரணம் குறித்த சிந்தனைகளை நான் வேறொரு புரிதலில் இருந்தே விளங்கிக்கொள்கிறேன். ஒரு கவிதையோ நூலோ மேலதிக யோசனைக்கு வழிவகுக்க வேண்டும் அந்தவிதத்தில் `உயிராடல்’ என்னுள்ளத்தில் தனி இடம் பெற்றிருக்கிறது.  

 

இன்னொரு கவிதையில் `உயிர்ப் பிடிலை வாசிக்கிறார் / ராகப் பிழையில் முகாரி இசைக்கிறது’ என்று சொல்கிறார். பிழையாகவிட்டாலே அது ராகத்தில் சேர்த்தியில்லை. அபசுரம் என்று அதைச் சொல்லலாமே அன்றி ராகமென்றோ அராகமென்றோ சொல்வதற்கில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆரம்பத்தில் ராகத்தை அராகமென்றே அழைத்த மரபும் நம்மிடம் உண்டு. அப்படியிருக்கையில் அழகான சொற்சேர்க்கையில் பிடில், ராகம், முகாரி போன்ற வார்த்தைகளை வைத்துக்கொண்டு மிக அற்புதமான சிந்தனையைச் சித்திரமாக வரைந்திருக்கிறார். இப்படி எண்ணி எண்ணி ரசிக்கத்தக்க வாக்கிய அமைப்புகள் இந்நூலில் நிறைய உள்ளன.  

 

`என் மரணம்  / என்னைவிட அழகானது / அதில் மட்டுமே என் ஆயுள் நிறைந்திருக்கிறது’ என்றொரு கவிதை. நிறைவு என்பது முடிவையும் முழுமையையும் குறிக்கும். சாக்லா ஆயுள் நிறைந்திருக்கிறது என்று சொல்ல வருவது முழுமையையே. ஆயுள் நிறைவடைகிறது எனச் சொல்லாமல் நிறைந்திருக்கிறது என்கிறார். அதிலும், என்னைவிட என் மரணம் அழகானது என்கிறார். நான் அற்றுவிட்ட மரணமே அது.  

 

cnc

 

உயிரின் ஓய்வல்ல. உடம்பின் தேய்வல்ல. என்னைவிட அழகானது மரணமென்கிறார். அதைவிட அழகான வாழ்வாக அவருக்குக் கவிதைகள் வாய்க்கட்டுமாக. ஒவ்வொரு மதமும் மரணத்தை ஒவ்வொரு மாதிரி பார்க்கின்றன. இகவாழ்விலிருந்து விடுதலை என்பதாகவும் ஏக இறைவனின் திருவடியை நோக்கிய பயணமாகவும் எனக்கு இக்கவிதைகள் எல்லாமாதிரியான அனுபவங்களையும் வழங்கின. சிந்திக்கவும் இக்கவிதைகளுடன் பரந்துவிரிந்த வெளிகளை தரிசிக்கவும் முடிந்தன. 

 

உயிராடல் என்று தலைப்பிட்டுள்ள சாக்லா மேலும் தன்னை கவிதைத்துறையில் புடம் போட்டுக்கொள்ளவேண்டும். இந்த ஒரு தொகுப்புடன் நில்லாமல் அதிக அதிகமாகக் கவிதைத்துறையில் சாதிக்க வாழ்த்துகிறேன். படைப்பாளனுக்கு மரணமே இல்லை. அவன் படைப்புகளுக்கும் அப்படியே. எனினும், நிறைய முயற்சியும் பயிற்சியும் தேவை. சாக்லா தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கிறார். இந்த ஊக்கத்துடன் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தால் விரைவில் சிகரம்நோக்கிய பயணத்தில் சிறப்பை எய்தலாம். வாரியணைக்கும் அன்புடனும் முத்தங்களுடனும் 
 

நிறைய பிரியமுடன், 
யுகபாரதி  

 

 

Next Story

பார்வையற்றோருக்கான முதல் கவிதை நூல் வெளியீடு! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The first book of poetry for the blind people

 

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட மதன் எஸ். ராஜா தன் முதல் நூலான ‘கசடு’  என்ற கவிதைத் தொகுப்பை சாதாரண அச்சில் மட்டுமல்லாது, தமிழ் இலக்கிய உலகில் முதல்முறையாக அதே மேடையில் பார்வைத்திறன் குறைந்தவர்களும் படித்துக் களியுறும் வகையில் பிரெய்லி வடிவிலும் தன் புத்தகத்தை வெளிட்டார்.  

 

டிசம்பர் 4ஆம் தேதியன்று மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மு. முத்துவேலு, முனைவர் தமிழ் மணவாளன், முனைவர் நெல்லை பி. சுப்பையா, நாவலாசிரியர் கரன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்றினார்கள். விழாவில் பல நண்பர்களும் இலக்கிய, பத்திரிகை ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

 

The first book of poetry for the blind people

 

இந்த வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சமாக முனைவர் உ. மகேந்திரன், பிரெய்லி வடிவில் புத்தகம் வெளியிட்டது குறித்து, “இப்படிப்பட்ட முயற்சிகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுக்கிறது. இனிவரும் இலக்கியப் படைப்புகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்கள் கிடைப்பதற்கான வழிவகுக்கும்” என மிகவும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியதும், அவர் மனைவி ஆசிரியர் மு. சோபனா பிரெய்லி வடிவிலான புத்தகத்திலிருந்து சில கவிதைகளைப் படித்தும் மகிழ்ந்தார். 

 

 

Next Story

"நாட்படு தேறல் என்றால் என்ன..? இம்முயற்சிக்கான காரணம் என்ன..?" - பகிர்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

vairamuthu explains meaning of naatpadu theral

 

கவிப்பேரரசு வைரமுத்துவின் "நாட்படு தேறல்' உலகத் தமிழர்களுக்கு உயிர்ப்பூட்டி வருகிறது. இதை வழங்கும் திராவிட இயக்கத்தின் மூத்த முன்னணிப் படைப்பாளரான வைரமுத்துவுக்கு, அறிமுகம் தேவையில்லை. ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியும், இன்னும் எழுதிக்கொண்டிருக்கிற இலக்கிய ஆச்சரியம் அவர். இலக்கியத்தின் சகல தளங்களிலும் சாதனை நிகழ்த்திவரும் இவர், திரைப் பாடல்களுக்காக ஏழு தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இலக்கியவாதி ஆவார். நாட்டின் உயர விருதுகளான பத்மபூஷண், பத்மஸ்ரீ ஆகிய இரண்டு விருதுகளைப் பெற்று, தமிழர்களை நிமிரவைத்தவர். சாகித்ய அகாடமி விருதையும் தன் பக்கம் வரவழைத்த வைகறை விரலர். டாக்டர் பட்டங்களை வழங்கி, மூன்று பல்கலைக்கழகங்கள் அவரை அள்ளியணைத்து உச்சி முகர்ந்திருக்கின்றன என்பது உபரிச் சிறப்பு. தமிழாற்றுப்படை நாயகரான வைரமுத்துவை, அவரது "நாட்படு தேறல்' குறித்த அறிதல்களுக்காக அவரது நேர நெருக்கடிக்கு நடுவிலும் அணுகினோம். உடனடி உரையாடலிலேயே அவரது மகரந்தத் தமிழ், மணக்கத் தொடங்கியது.

 

அதிலிருந்து...

 

நாட்படு தேறல் இங்கே எந்தவிதமான விளைவை ஏற்படுத்த வருகிறது?

 

தமிழ் இலக்கியத்தில், ஒரு புதுவகை வேதி வினையை நிகழ்த்தக் கூடும் நாட்படு தேறல். பாரதி சொன்னது போல், சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது எனத் தன்னை நிறுவி, தமிழ் இலக்கியப் பரப்பில், அடர்ந்த அழகிய தாக்கத்தை அது ஏற்படுத்தக் கூடும். அது தமிழின் உயரத்தை உயர்த்துகிறதோ இல்லையோ, தமிழ் ரசனையின் உயரத்தை அது வெகுவாகவே உயர்த்தும். நாட்படு தேறலைத் துய்க்கும் இளம் படைப்பாளிகள், தங்கள் மொழிநடையை உயர்த்திக்கொண்டு, வழிநடையை மாற்றிக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இது உலகத் தமிழர்களின் அறிவுக்கு அறுசுவை விருந்து. மனதிற்கு மயிலிறகின் வருடல். ரசனைக்கு ராஜபோதை. தமிழில் இன்னொரு சாதனை எல்லையைத் தொடும் முயற்சி இது. தொய்ந்து கிடக்கும் தமிழ் உணர்வைத் தூக்கி நிறுத்தும் முயற்சிகளுள் ஒன்று "நாட்படு தேறல்' எனில் நாட்பட்ட மது அல்லது கள் என்று பொருள். அந்தத் தலைப்பில் புதிய புதிய திசைகளில் சிறகடித்து, 100 பாடல்களைத் தருகிறேன். வெள்ளித் திரைக்கு வெளியே, பாடல்களின் மூலம் நடத்தும் இலக்கிய வேளாண்மை இது. இதற்காகக் கொரோனா கொடுத்த தனிமைப் பொழுதை நான் நிறையச் செலவிட்டேன். இரவு பகலாய் இதற்காக வியர்வை பெருக்கினேன். என் இந்த அயற்சியற்ற முயற்சிக்குப் பெருங்கலைஞர்கள் பலரும் தோள் கொடுத்துத் தோழமை பாராட்டியிருக்கிறார்கள். என் தமிழைத் தங்கள் கலைக்கரங்களால் தாலாட்டியிருக்கி றார்கள். எனவே, நாட்படு தேறல், நான் எதிர்பார்ப்பதை விடவும் நல்ல பல விளைவுகளை, இசை வெளியிலும் மொழி வெளியிலும் ஏற்படுத்தும்.

 

திரைப்படப் பாடல்களின் தரம் குறைந்து விட்டது என்றுதான் நாட்படு தேறலைத் தருகிறீர்களா?

 

திரைப்பாடல் சமைப்பதென்பது அரிய கலை.

 

அதைச் செப்பமாகச் செய்ய நுட்பமான மனம் வாய்க்க வேண்டும். இன்றைய திரைப்படப் பாடல்களைக் கவனிக்கும்போது, நான் உணர்கிற உண்மை என்னவெனில், அவை உயரங்களில் ஏறி உட்கார்ந்துவிடவும் இல்லை. பள்ளங்களில் இறங்கிப் படுத்துவிடவும் இல்லை. எனினும் நல்ல பாடல்கள் முழுதும் அற்று விடவில்லை என்பதையும் என்னால் சொல்லமுடியும். ஆனால் பெரும்பான்மை என்று பார்க்கிறபோது பெரிய மகிழ்ச்சி இல்லை. ஏனெனில், பெரும்பாலான பாடல்கள் தேய்ந்த நிலையிலும் திரிந்த நிலையிலும் விளங்குவதுபோல் தெரிகிறது. நல்ல சங்கீதம் தழைத்து விடக் கூடாது என்பதற்காக ஒரு சிலர், இசையைக் கூச்சலாக்கிக் கொண்டு குதூகலிப்பது போல், நல்ல தமிழ் வேண்டாம் என்று சிலர் இன்று தமிழைக் கலவை மொழியாக்கி, காக்டெய்ல் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே பாடலாசிரியன் என்கிற ஒரு இனம், மெல்ல மெல்ல அருகி, வெற்றிட நிரப்பிகள் ஆகிவிடுவார்களோ என்று அச்சம் அடிமனதில் தோன்றுகிறது. எனக்குள் தோன்றிய அந்தக் கவலையைக் களைந்தெறிய, மெட்டுச் சிறைக்குள் கவிதையைத் திணிக்காமல், கவிதைக்கு இசைச்சிறகு முளைக்க வைக்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த எண்ணம்தான் "நாட்படு தேறலாய்' என் மனதிற்குள் ஊறி ஊறி மெல்ல மேலெழுந்து வந்திருக்கிறது.

 

நாட்படு தேறல் சங்கச் சொல் அல்லவா?

 

ஆமாம். பழந்தமிழர்கள் கொம்புத் தேனையோ, கனிச் சாற்றையோ மூங்கில் குழாய்களுக்குள் ஊற்றி வைத்து, நிலத்தில் புதைத்து வைப்பார்கள். நீண்ட நெடு நாட்களுக்குப் பிறகுதான் அதை வெளியே எடுப்பார்கள். அப்போது அது வேதியியல் விதிகளுக்கு உட்பட்டு, இயற்கையோடு ரகசியமாகச் சினேகம் வளர்த்து, அந்தச் சாறும் தேனும் உயர்தரமான மதுவாகவோ கள்ளாகவோ உருமாறியிருக்கும். இதைத் தான் புறநானூற்றுப் பாட்டில் "தேட் கடுப்பன்ன நாட்படு தேறல்' என்றார் ஔவைப் பிராட்டியார். காரணம், அதன் ஒரு சொட்டினை எடுத்து நாவில் விட்டால்... தேள் கொட்டியது போல் கடுக்குமாம். அந்த ஒரு சொட்டிலேயே ஒரு உன்னதக் கிறக்கம் மூளையின் உச்சியில் அமர்ந்துகொண்டு தர்பார் நடத்துமாம். இப்படி ஔவையார் அறிமுகம் செய்த சொக்கவைக்கும் சொற்றொடர்தான் நாட்படு தேறல்.

 

தேறல் என்றால் போதை தரும் பொருளல்லவா?

 

கேள்வியின் சூட்சுமம் புரிகிறது. குடிக்கு எதிராகக் கொடி பிடிக்கிற வைரமுத்து, தேறல் என்று தலைப்பிட்டிருக்கிறாரே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழுக்கு மதுவென்று பேர் என்றாரே... அப்படியாயின் மதுவுக்கும் தமிழென்றுதானே பெயர். இந்த மது, உடலைக் கெடுக்கும் மதுவல்ல. உள்ளத்தையும் உணர்வையும் உற்சாகப்படுத்தும் மது. அதனால் தேறல் என்பதில் எள்ளளவும் மீறல் இல்லை.

 

நாட்படு தேறல் புதிதாக எழுத வரும் பாடலாசிரியர்களுக்குப் பாடமாக அமையுமா?

 

அப்படி நான் அறிவித்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் புதிய பாடலாசிரியர் கள் நாட்படு தேறலை மகிழ்ச்சியோடும் ஆசையோடும் அருந்தினால், அவர்களது தமிழ் மேலும் இனிமை பெறும். அவர்களின் கற்பனை மேலும் கற்பனை செய்யும். அவர்களைக் கண்காணாத் தூரங்களுக்கு அழைத்துச்சென்று, சில ஆச்சரியங்களை அறிமுகப்படுத்தும். நாட்படு தேறல் என்றாலே பாடம் செய்யப்பட்ட மதுதான். அதைப் பாடமாக ஏற்றுக்கொள்வது அவரவர் விருப்பம்.

 

இந்த நாட்படு தேறல் திட்டம் எத்தனை நாட்களாக உங்கள் நெஞ்சில் ஊறிக் கொண்டிருந்தது?

 

சொன்னால் நம்பமாட்டீர்கள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக என் நெஞ்சில் ஊறிய திட்டம் இது. செயற்கை எல்லைகள் கடந்து இயற்கையாக எனக்குள் தோன்றுகிற சிந்தனைகளைப் பாடல்களாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான அவகாசத்தைக் கொரோனா கொண்டுவந்து என்னிடம் கொடுத்தது. இந்த 100 பாடல்களையும் 100 இசையமைப்பாளர்களை வைத்து மெட்டமைத்து, நூறு பாடகர்களை வைத்துப் பாட வைப்பதோடு, அந்தப் பாடல்களுக்கான காட்சியை 100 இயக்குநர்களைக் கொண்டு இயக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். என் கனவு இனிய தோழமைகளின் உயர்ந்த ஒத்துழைப்போடு பலித்திருக்கிறது.

 

நாட்படு தேறலின் சிறப்பு?

 

நாட்படு தேறலே சிறப்புதான். என்றா லும், இதைக் கலை நண்பர்களுடன் சேர்ந்து, பார்த்துப் பார்த்து பதமாய் இழைத்திருக்கிறேன். இது பாட்டு முயற்சி மட்டுமல்ல; பல்வேறு கலைஞர்களின் கூட்டு முயற்சி.

 

ஒவ்வொரு பாட்டும் ஒரு சிறுகதை போல் மனதில் சிலவற்றை நிகழ்த்திக்காட்டும் வகையில் அமைகின்றது. கண்ணீர்த் துளியை வைத்துக்கொண்டு கடல் செய்வது போல், ஒரு சிறு தீப்பொறியிலிருந்து எரிமலை செய்வது போல், என் அனுபவங்களில் இருந்து அழகழகான பிரபஞ்சங்களைத் தயாரித்திருக்கிறேன். அதில் இறக்கையுள்ள எவர் வேண்டுமானாலும் பறந்து திரியலாம். பாடல்கள் மெட்டுக்குள் கட்டுப்பட வேண்டும் என்றாலும், பாடல் குறைந்தபட்ச சுதந்திரத்திலும் அதிகபட்சத் தொழில்நுட்பத்தி லும் நாட்படு தேறலாய் வெளியே வருகிறது. மனித குலத்தின் எல்லா உணர்வுகளையும் இந்த நூறு பாடல்களுக்குள் கொட்டி வைத்திருக்கிறேன். ஆசை தீரத் தீர நான் எழுதிய அழகிய வரிகள், இசையையும் காட்சிகளையும் கூடுதலாய்க் கூட்டி வருகின்றன.

 

இதிலுள்ள பாடல்களை 86 வயது பி.சுசீலாவும் பாடியிருக்கிறார். 16 வயது உத்ரா உன்னிகிருஷ்ணனும் பாடியிருக்கிறார். தேவா- ஏ.ஆர். ரகுமான் என்னும் இருவேறு தலைமுறை இசைக் கலைஞர்களும்கூட மெட்டமைத்திருக்கி றார்கள். ஜெரார்ட் பெலிக்ஸ், வாகு மசான் போன்ற இளைய இசையமைப்பாளர்களும் ஈரம் கசியக் கசிய, என் வரிகளை இசை வயப்படுத்தி இழைய விட்டிருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களைப் பிரதிபலிப்பதுபோல், பல்வேறு நூற்றாண்டு களுக்கும் இடையே பாடல்கள் பயணித்திருக்கின்றன. பாதாதி கேசமாய்ப் பாவையரை வர்ணிக்கும் ஏழாம் நூற்றாண்டு இலக்கிய வடிவத்திலும் என் சொற்கள் சிறகடித்திருக்கின்றன. இன்னும் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னால் விண்வெளி யில் டூயட் பாடப்போகும் நாளைய காதலர்களுக்கான இதயத் துடிப்பையும் பூங்கவிதைகளாய் மலரவிட்டிருக்கிறேன். சங்கர் மகாதேவன், ஹரிஹரன், பாம்பே ஜெயஸ்ரீ, உள்ளிட்ட பேசப்படும் பெரும் பாடகர்கள் தொடங்கி, கமல்ஹாசன் மகள் சுருதிஹாசன் வரை தங்கள் குரல்களால் என் இலக் கியத்தை இசைத்திருக்கிறார்கள் அதுமட்டுமல்ல, கண்ணனைக் கனவுச் சொற்கள் கொண்டு பரவசப் பாசுரங்களால் ஆராதித்த ஆண்டாளைப் போல், ஆண்டாளை எண்ணிக் கண்ணன் கிறங்கிப் பாடுவது போன்ற பாசுரத்தையும் பார்த்துப் பார்த்துப் பக்குவமாய் எழுதியிருக்கிறேன். காஃபி ஷாப் கலாசாரத்துக்கு ஏற்பவும் கூட பாடலை உருவாக்கியிருக்கிறேன்.

 

இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களுள் ஒருவரான ராஜீவ்மேனனின், பார்வை தரிசனத்தை மட்டுமே உலகம் இதுவரை பார்த்திருக்கிறது. அவருக்குள் இத்தனை ஆண்டு காலமாய் ஒளிந்துகொண்டிருந்த ஒரு இசைக் கலைஞனையும் வெளியே அழைத்து வந்து இதில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

 

நாட்படு தேறலில் எந்தமாதிரியான பாடல்கள் வருகின்றன என்று சொல்லலாமா?

 

நுட்பம் மிகுந்த நூறு பாடல்களில் ஒன்றிரண்டை மட்டும் நான் கோடிட்டுக் காட்டுகிறேன்.

 

நாக்குச் செவந்தவரே, நாலெழுத்து மந்திரியே - என்ற பாடலை மெட்டமைத்து மேன்மையாகப் பாடியிருக்கிறார் பெண் இசையமைப்பாளரான வாகு மசான். அதைக் காட்சியாக்கி இருக்கிறார் கீர்த்தி மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த கிருத்திகா உதயநிதி. ரோஜாவே தமிழ் பேசு -என்ற பாடலை, கர்நாடக இசைக் கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ பாட, அதை ரசனை பொங்கக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

 

ஆம்பல் பூவைச் சாம்பல் செய்தாய்- என்ற பாடலுக்கு யஷ்வந்த் மெட்டமைக்க, அதை பாப் ஸ்மிதா மிருதுவாகப் பாடியிருக்கிறார். அதை அருமை யாகக் காட்சிப்படுத்தி இருப்பவர் அருள். என் காதலா, காதல் வயது பார்க்குமா?- என்ற ரசமான பாடலுக்கு ரகுநந்தன் மெட்டுக்கட்ட, ஸ்ரீ நிஷா அதைத் தேனாய்ப் பாட, பாடலைக் கண்களுக்கான கவிதையாக மாற்றி யிருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

 

தமிழ் ஈழக் காற்றே - என்ற பாடலை சத்யபிரகாஷ் பாட, அதை பிரிட்டனிலும் இலங்கையிலுமாகப் படமாக்கியிருக்கிறார் ஜீவா முகுந்தன். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

 

ஒரு பாடல் பிறந்த அனுபவத்தைப் பகிருங்களேன்?

 

அனுபவங்கள் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். அப்படி ஒரு நாள் தூக்கம் தொலைந்த நள்ளிரவில், எங்கள் வீட்டு மொட்டை மாடியில் கிடைத்த அனுபவம் ஒன்றும் பாடலானது. அது மனிதர்களோடு நிகழ்ந்த அனுபவமல்ல. நிசப்தத்தின் துணையோடு, வானில் இருந்த நிலவோடு நட்சத்திரங்களோடும் வாய்த்த அனுபவம். அப்போது பக்கத்தில் யாரும் இல்லை. அருகே இருக்கும் கடலின் இதமான இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது. எங்கிருந்தோ ஒரு நாய் குரைக்கத் தொடங்கி, இரவை அடர்த்தியாக்கியது. நானும் இரவும் மட்டுமே விழித்திருப்பதாகத் தோன்றியது. அப்போது இந்த ஒரு இரவில் உலகில் என்னென்ன நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். என்னிடமிருந்தே பாடல் வரிகளாய் பதில் வந்துகொண்டிருந்தது. அது...

 

"இந்த இரவு தீர்வதற்குள்ளே..

ஒருகோடி மொட்டுக்கள் உடைந்திருக்கும்

ஒன்றிரண்டு விண்மீன்கள் உதிர்ந்திருக்கும்

எத்தனையோ கருப்பையில்

உயிர்த்திரவம் விழுந்திருக்கும்

எத்தனையோ படுக்கைகளில்

நோய்த்துன்பம் முடிந்திருக்கும்'

என பிறப்பின் ரகசியத்தையும் இறப்பின் ரகசியத்தையும் தொட்டுக்காட்டிய பாடல்... சரணத்தின் போது...

"இந்த இரவு தீர்வதற்குள்ளே

மென்காற்று கண்டங்கள் கடந்திருக்கும்

வெண்ணிலவு ஒருகீற்று வளர்ந்திருக்கும்'

-என்ற வரிகள் எனக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த போது, என்னை நானே ரசித்துக் கொண்டேன்.

 

புதிதாக உங்கள் நடையில் உங்கள் மொழியில் ஒரு தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் எழுதியிருக்கிறீர்களே?

 

ஆம். தமிழில் எழுதும் கவிஞன் ஒவ்வொருவனும் தமிழை வாழ்த்துவதற்குக் கடமைப்பட்டவன். பாரதி, பாரதிதாசன் தொடங்கி இன்றுவரை உள்ள பலரும் தமிழைத் தங்கள் தலைமேல் வைத்துத் தாங்குகிறார்கள். அந்த வகையில் நானும் தமிழ்த்தாயை நாட்படு தேறலுக்காகவும் ஆராதித்திருக்கிறேன். நிலம் கடந்தும் கடல் கடந்தும் கண்டங்கள் கடந்தும் வாழ்கிற அத்தனை தமிழர்களுக்கும் பாடுவதற்கான பொதுப் பாடலாகவும் புதுப்பாடலாகவும் அது அமைந்திருக்கி றது. அந்தப் பாடலை உலகத் தமிழர்களுக்கு நான் காணிக்கையாக்குகிறேன். இதோ அந்தப் பாடல்...

 

’எழுத்தும் நீயே சொல்லும் நீயே

பொருளும் நீயே பொற்றமிழ்த் தாயே

அகமும் நீயே புறமும் நீயே

முகமும் நீயே முத்தமிழ்த் தாயே

உனக்கு வணக்கம் தாயே - எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!

ஆயிரமாயிரம் ஆண்டுகள் எங்கள்

ஆன்ற புலவோர் எழுத்தில் இருந்தாய்

உழுதும் விதைத்தும் உலகைச் சமைத்த

உழைக்கும் மக்கள் சொல்லில் இருந்தாய்

ஆழி அலையிலும் ஆயுத மழையிலும்

அழிந்துபடாத பொருளாய் இருந்தாய்

நிலவும் கதிரும் நிலவும் வரையில்

நீயே தமிழே எங்கள் முதல்தாய்

உனக்கு வணக்கம் தாயே - எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!

*

காலக் கடலில் கரைந்த நாட்களை

ஓலைச் சுவடியில் ஓதி முடித்தாய்

காதல் வீரம் ஞானம் மானம்

கவியில் கலையில் கட்டி வளர்த்தாய்

அகிலத்துக்கே தமிழர் சேதி

அறமே அறமே என்று திளைத்தாய்

எத்துணை தலைமுறை மாறிய போதும்

எம்துணை யாக என்றும் நிலைத்தாய்

உனக்கு வணக்கம் தாயே - எம்மை

உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!

 

உங்கள் பாணியில் சிலர் பாடல்களை எழுத நினைக்கிறார்களே?

 

இதுதான் மானுட நீட்சி என்பது. சிலர் என் பாடல்களின் சாயலில் எழுதுவதாலும், என் சொற்றொடர்களை எடுத்தாள்வதாலும் நான் எரிச்சலுற மாட்டேன். என் தமிழ் இப்படியும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதே என்று இன்பமுறுவேன். என் பாடல்களில் சிலவற்றில் என் முன்னோடிகளின் சாயல் இருந்திருக்கும். அது போல் என் பாடல்களின் சாயலில் எனக்குப் பின் எழுதத் தொடங்கியர்களிடம் அமைந்திருக்கும். தந்தையின் சொத்தில் பிள்ளைகளுக்குப் பங்கில்லை என்று சொல்ல முடியுமா? என்னை நகலெடுக்க நினைப்பவர்கள், விரைவில் தங்களுக்கென்று ஒரு அசலை அடைந்துவிடுவார்கள். இது இலக்கியத்திற்கான இயற்பியல் விதி.

 

இப்போதும் உங்கள் பாடல்களில் கிராமியம் எட்டிப் பார்க்கிறதே?

 

நான் இப்போது நவீனங்களுக்கு நடுவில் வாழ்கிறேன் என்றாலும், எனது நேற்றுகள் கிராமியத்தில் இருந்து திரண்டவைதானே. நான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் நீர்த்துப்போகாத நினைவுகள், படிமப் பாறைகளாய் உள்ளே உறைந்திருக்கின்றன. என் அறிவும் பருவமும் என் கிராமத்தில்தான் அரும்பத் தொடங்கின. அங்கிருந்துதான் நான் முதன்முதலில் ஆகாயத்தையும் நிலாவையும் சூரியனையும் ரசித்தேன். கிராமியம்தான் எனக்கு என் ஆரம்பபள்ளியாய் இருந்தது. அங்குதான் எனக்கு வேளாண்மை அறிவு வந்தது. எதார்த்த மனிதர்களின் இயல்பு கிடைத்தது. நான், அப்பழுக்கற்ற இளம் கலைஞனாக என்னைத் திரட்டிக்கொண்டதும் அங்கேதான். எனக்குக் கவிதையின் ரகசியங்கள் புரிய ஆரம்பித்த இடம் அதுதான். பெண்ணென்ற பெரும்பொருளின் கிளர்ச்சி மிகுந்த கிறுகிறுப்பை, சிறுதேவதை ஒருத்தி மூலம் நான் அறிந்துகொண்டதும் அங்கேதான். தொலைதூரங்களில் இருந்த மலை தீபங்களைப் போன்ற என் லட்சியங்களை நான் தரிசித்ததும் அங்கேதான். என் பால்ய வயதின் பாலியல் சார்ந்த படபடப்பை நான் உணர்ந்துகொண்டதும் அங்கே தான், ஒழுக்கம் பிறழாதபடி என்னை சென்னைக்கு அனுப்பிவைத்த வெள்ளந்தி பூமியும் அதுதான்.

 

அதனால்தான் என் எழுத்தில் அவையெல்லாம் அடிக்கடி முகக்கவசம் இன்றி முகம் காட்டுகின்றன.

 

தமிழ் மெல்லத் தேய்ந்துவருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்கிறதே?

 

அதிகார மையங்களில் ஆட்சித் தமிழும், கல்விக் கூடங்களில் தாய்த் தமிழும், திரைப்பாடல்களில் இலக்கியத் தமிழும், உரையாடல்களில் உயர் தமிழும், இல்லங்கள் தோறும் இயற்றமிழும் இருக்கும் வரை தமிழுக்குத் தேய்மானம் இல்லை. நெருக்கடிகள் நேரும்போதெல்லாம் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வல்லமை, தமிழுக்கு உண்டு.