Skip to main content

இது இராவணனின் அம்பறாத்தூணி! - கபிலன் வைரமுத்துவின் சிறுகதை தொகுப்பு விமர்சனம்

Published on 08/10/2020 | Edited on 08/10/2020

 

kabilan vairamuthu's ambarathooni book review

 

 

இன்று எப்படி பழங்கால பொருட்களுக்கென்று தனி காட்சியகங்கள் இருக்கின்றனவோ அது போல காதல், கோபம், மகிழ்ச்சி என மனிதர்களின் உணர்வுகளெல்லாம் தனித்தனி காட்சி தேசங்களாக இருக்கின்றன. விரும்புகிறவர்கள் அந்தந்த தேசங்களுக்கு சுற்றுலா சென்று வரலாம். மூலா என்ற பெண், பிரிவு என்ற காட்சி தேசத்திற்கு செல்கிறாள். பிரிவு என்றால் என்ன என்பதை படிப்படியாக உணர்கிறாள், இது நிகழ்வது முப்பத்தோராம் நூற்றாண்டில். இது ஏதோ ஓ.டி.டியில் கோடிக்கணக்கான பட்ஜெட்டில் எடுக்கப்படும் ஆங்கில வெப் சீரிஸின் கதை அல்ல. கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் ‘அம்பறாத்தூணி’ என்ற சிறுகதை தொகுதியில் இடம் பெறும் ஒரு கதை.

 

முப்பத்தோராம் நூற்றாண்டில் நிகழும் கதை எனில் இத்தொகுதி முழுக்க எதிர்காலத்தை பற்றியதோ என்ற எண்ணம் உங்களுக்கு வந்தால் பல ஆச்சர்யங்கள் இந்த தொகுதியில் காத்திருக்கின்றன. வள்ளி என்ற முதல் கதையே 1806 ஆம் ஆண்டு வேலூரில் நடந்த சிப்பாய் புரட்சியின் பின்னணியில் எழுதப்பட்டிருக்கிறது. பூலித்தேவன் வாசுதேவநல்லூரில் குலசேகரன் கோட்டையை எழுப்பும்போது நிகழும் ஒரு சம்பவம் கதையாக வருகிறது. இன்னொரு பக்கம் 1899 -ஆம் ஆண்டு மாஸ்கோ சிறையில் இருந்து தப்பிக்கும் மூன்று கைதிகளின் கதை சொல்லப்படுகிறது. அந்த கதையில் ஒரு சிறு பாத்திரமாக லியோ டால்ஸ்டாயின் மகன் செர்ஜி வருகிறார். 1876 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பஞ்சம் நேர்ந்தபோது அதை புகைப்படம் எடுக்க வந்த ஒரு அதிகாரியை கதாபாத்திரமாக வைத்து ஒரு கதை எழுதப்பட்டிருக்கிறது. அந்த கதையில் பேசப்படும் கடைசி வசனம் தன்மானத்தின் உச்சம்.

 

kabilan vairamuthu's ambarathooni book review

 

ஒருவன் தன் வாழ்வில் முதல் முறையாக பொய் சொல்ல வேண்டும் என்ற மிகச்சிறிய கருவை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருப்பது அசாதாரண முயற்சி. இரண்டாம் உலக போர் காலத்தில் மஞ்சவேலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு ஜமீன்தார் பெண் பார்க்க போகும் கலகலப்பான காதல் கதையை முழுக்க முழுக்க வட்டார வழக்கில் எழுதியிருக்கிறார் கபிலன்வைரமுத்து. நகரத்தில் பிறந்து வளர்ந்த கபிலன் இந்த சமீந்தார் கதையில் தென்னை மரங்களைத் தாக்கும் காண்டாமிருக வண்டைப் பற்றி துல்லியமாக எழுதியிருப்பது தன் கதைகளுக்காக அவர் எல்லை கடந்து இயங்கியிருக்கிறார் என்பதற்கு சான்று. வரலாற்று கதைகளாக மட்டும் இல்லாமல் நிகழ்காலமும் இதில் இருக்கிறது. டெல்லி பல்கலைக்கழத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை எந்த வசனமும் இல்லாத ஒரு சிறுகதையாக பதிவு செய்திருக்கிறார். கார்டூன் பாத்திரங்களுக்கு தமிழில் குரல் கொடுக்கும் பின்னணி கலைஞர்கள், சினிமாவில் உதவி எழுத்தாளர்கள் என்று சமகால சாமானியர்களைப் பற்றியும் இந்த சிறுகதைத் தொகுதி பேசுகிறது.

 

 

ஆழ்கடல் சுரங்கம் பற்றிய கதை தமிழ் இலக்கியத்திற்கு புதுமை. அது கதாபாத்திரத்தின் காணொளி பதிவாக அமைக்கப்பட்டிருப்பது சிறுகதைக்குள் ஒரு நேர்த்தியான திரைக்கதை. இப்படி பன்முகமாக இருந்தாலும் மனித நேயமும் சமூக மனசாட்சியும் இந்த கதைகளின் அடிநாதம். “பகுத்தறிவு என்பது ஆன்மீகத்திற்கு மட்டுமே எதிரானது என்று பொதுப்புத்தியை இவர்கள் பரமாரிக்கும் வரை அது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறாது” என்றும் “நிலா - ஆழ்கடல் சுரங்கம் - மனிதர்களின் அந்தரங்கம் - இம்மூன்றும்தான் எதிர்கால உலக பொருளாதாரம்” என்றும் கதைகளுக்கிடையே சமூக அரசியலை போகிற போக்கில் ரத்தினச்சுருக்கமாக நெத்தி பொட்டில் அடித்தாற்போல சொல்லிவிட்டு போகிறார் கபிலன்வைரமுத்து. ஒரு சில கதைகளில் வழக்கமான சிறுகதைகளுக்குரிய ஓட்டம் இல்லை. காரணம் கதையை முன் நிறுத்தாமல் கதாபாத்திரங்களை முன் நிறுத்தவே கபிலன்வைரமுத்து முயற்சி செய்திருக்கிறார். இந்த பாணி ஒரு சிலருக்கு பிடிபடாமல் போகலாம். மூத்த எழுத்தாளர்கள் சிலர் இந்த சிறுகதைத் தொகுதியை ‘இவை கதைகளே அல்ல’ என்று விமர்சிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

 

kabilan vairamuthu's ambarathooni book review

 

அதையெல்லாம் மீறி நம் இளைய தலைமுறைக்கு இதை சொல்ல வேண்டும் என்ற கபிலன் வைரமுத்துவின் நோக்கமும், இந்த தொகுதி நெடுக இழைந்தோடும் மெல்லிய உணர்வுகளும் இந்த படைப்பை உயர்த்தி பிடிக்கும். அம்பறாத்தூணி என்றாலே அதை ராமனோடு இணைத்து பேசுவதையே சிலர் இலக்கிய வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால் கபிலன்வைரமுத்து எழுதியிருக்கும் இந்த கதைகள் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட நம் மண்ணின் சில பெருமைகளைக் கொண்டாடுவதாலும் சில கதைகள் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரலாக அமைந்திருப்பதாலும் இதை இராவணனின் அம்பறாத்தூணி என்றே சொல்ல வேண்டும்.

 

புத்தகத்தின் அட்டைப்படத்தில் இருக்கும் அம்பறாத்தூணி கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருப்பதும் அதற்கான ஒரு குறியீடோ என தோன்றுகிறது. கவிதைகள், நாவல்கள் என்ற வரிசையில் இந்த புத்தகம் கபிலன்வைரமுத்துவின் பதினோராவது படைப்பு. இதற்கு முன் தொலைக்காட்சி பற்றி கபிலன் எழுதிய மெய்நிகரி என்ற நாவல் கவண் என்ற திரைப்படமாக வெளிவந்ததுபோல் அம்பறாத்தூணியின் கதைகளும் திரைவடிவம் பெற்றால் அது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.

 

 

Next Story

‘எது சனநாயகம்?’ - எழுத்தாளர் நா. அருணின் முதல் படைப்பு

Published on 12/02/2024 | Edited on 13/02/2024
'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

‘பிரதமர் இளைய எழுத்தாளர்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளர் நா. அருண் எழுதிய எது சனநாயகம்? என்ற நாவல் நூலாக்கம் பெறத் தேர்வாகியுள்ளது. இந்தியக் கல்வி அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புத்தக அறக்கட்டளை ரூ. 3 லட்சம் உரிமைத் தொகை வழங்கி, நூலை ஓராண்டிற்குள் 23 மொழிகளில் மொழிபெயர்த்து, அதனை இந்திய அரசின் மிக முக்கிய ஒருவரைக் கொண்டு வெளியிடவிருக்கிறது. 

இது தொடர்பாக எழுத்தாளர் நா. அருண், “என் நூலின் தலைப்பு ‘எது சனநாயகம்?’ இது தொடர்பாக இந்தியக் குடியரசுத் தலைவருடன் ஓர் உரையாடலுக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டேன். எழுத்தாளராகத் தமிழ் இலக்கிய உலகினில் என் முதல் படைப்பான ‘எது சனநாயகம்?’ என்ற நூலுடன் வெகு விரைவில் காலடி எடுத்து வைக்கவிருக்கிறேன்.

'Etu Sananayakam?' is the first book of writer Na.Arun

இத்தனை ஆண்டுகாலமாக என் பேச்சிலும் எழுத்திலும் எப்போதும் இருக்கும் சுயமரியாதையும் பேசாப் பொருளும் குரலற்றவர்களின் குரலும் இனிவரும் என் நூல்களிலும் இருக்குமென்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கிய உலகில் யாருக்கும் அடிவருடிக் கொடுக்காமல், யார் காலிலும் விழாமல், யாரையும் ஆசானாக ஏற்காமல், சொந்தச் சரக்கை மட்டும் நம்பி சுய அறிவை மட்டும் துணையாக்கி எழுத வந்திருக்கிறேன். வரலாறு என்னை நினைவில் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் உங்களுடன் இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

டி.ஆர். பாலுவிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி; கைதட்டி ரசித்த டி.ஆர்.பி.ராஜா

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
DR. Minister Udayanidhi made a request to Balu; D. R. P. Raja enjoyed the hand clapping

சென்னை, அண்ணா அறிவாலயத்தின், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர்  டி.ஆர். பாலு அவர்கள் எழுதிய உரிமைக்குரல், தி மேன் அண்ட் மேசேஜ் (The Man and Message), மை வாய்ஸ் பார் தி வாய்ஸ்லெஸ் (My voice for the voiceless), பாதை மாறாப் பயணம் (பாகம்-3) ஆகிய நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.1.2024)வெளியிட்டார். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதனைகளைப் பட்டியலிட்டு வாழ்த்திய, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட கலைஞர் பேசியது, அரங்கத்தில் இருந்தவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி, முன்னாள்  மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், தி இந்து நாளிதழ் குழுமத் தலைவர் என். ராம், கவிஞர் வைரமுத்து, அமைச்சர்கள் கே.என். நேரு, உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மேலாண்மை இயக்குநர் க. சந்தானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டிற்கு அனைத்து மாவட்ட கழக செயலாளர்கள் மூலம்  59 கோடி ரூபாய் மாநாட்டிற்கு நிதி கொடுத்தார்கள். அந்த வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளரும், அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக ரூ. 25 லட்சம் கொடுத்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பரவாயில்லை, இளைஞர் அணி மாநாட்டுக்குத்தான் நிதி கொடுக்கவில்லை. பொருளாளர் என்ற முறையில் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். இதே வேண்டுகோளை திமுக தலைவரிடம் இளைஞர் அணி மாநாட்டில் வைத்தேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். அனுபவம் முக்கியம் தான். இருந்தாலும் தகுதியான இளைஞர்களுக்காவது வாய்ப்பு கொடுங்கள்” என டி.ஆர்.பாலுவிடம் கோரிக்கை வைத்தார். அமைச்சர் உதயநிதியின் இந்த பேச்சை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கைதட்டி புன்னகையுடன் ரசித்தது குறிப்பிடத்தக்கது.