Skip to main content

கபிலன் வைரமுத்துவின் புதிய நாவலை வெளியிட்ட இயக்குநர் பாரதிராஜா 

Published on 10/12/2022 | Edited on 10/12/2022

 

Director Bharathiraja who released Kapilanvairamuthu's new novel

 

கபிலன் வைரமுத்து எழுதிய ‘ஆகோள்’ நாவலை  இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டார்.

 

ஆங்கிலேயரின் குற்ற இனச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட புனைவு.  எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன் வைரமுத்துவின் புதிய நாவலை இயக்குநர் பாரதிராஜா சென்னையில் வெளியிட்டார்.  ஆகோள் என்று பெயரிடப்பட்ட நாவல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் குற்ற இனச் சட்டம் குறித்து ஒரு நவீன அணுகுமுறையை முன் வைக்கிறது. இந்த நாவல் நிகழ்கால தொழில்நுட்ப உலகின் பெருந்தரவு கொள்ளையை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. 1920 ஆம் ஆண்டு கை ரேகை சட்டத்திற்கு எதிராக பெருங்காமநல்லூரில் நிகழ்ந்த போராட்டம் நாவலின் ஒரு முக்கியப் பகுதியாக இடம் பெற்றிருக்கிறது. இயக்குநர் பாரதிராஜா நூலை அறிமுகம் செய்யும் சிறப்புக் காணொளி ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

 

ஆகோள் குறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில்: சங்க காலத்தில் சிற்றரசுகளுக்கு இடையே நிகழ்ந்த போர்களில் எதிராளிகளின் ஆடு மாடுகளைக் களவாடி வரும் செயலுக்கு ஆகோள் என்று பெயர். இது களவுச் செயலாகவும் வீரச் செயலாகவும் பார்க்கப்பட்டது. எதிராளியின் வளங்களில் ஒன்றைக் களவாடும் செயல் என்ற பொருளில் என் நாவலுக்கு ஆகோள் என்று தலைப்பிட்டிருக்கிறேன். இந்தக் கதையில் இடம்பெறும் தொழில்நுட்ப களம் குறித்தும், நூறு ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு போராட்டம் குறித்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கள ஆய்வு செய்து எழுதியிருக்கிறேன். வாசகர்களுக்கு இது பயனுள்ள பயணமாக இருக்கும் என நம்புகிறேன்.

 

நூலின் பதிப்பாளர் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் கூறுகையில்: கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், சிறுகதை, கவிதை, நாவல் என மொழியின் அனைத்துத் தளங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் கபிலன் வைரமுத்துவின் புதிய வரவு ஆகோள். இந்த நாவலின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அதுவே ஒரு தனிக்கதையாக விரியும். இதுவரை தமிழ் இலக்கிய உலகம் காணாத ஒரு முழுமுதற் தொழில்நுட்ப உலகை கபிலன் வைரமுத்து அறிமுகப்படுத்துகிறார். குற்ற இனச் சட்டம் குறித்த ஒரு புதிய பார்வையை இந்த நாவல் வழி விவாதித்திருக்கிறார். 

 

ஆகோள் கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவல். கபிலனின் முந்தைய நாவலான மெய்நிகரி ‘கவண்’ என்ற பெயரில் திரைப்படமானது குறிப்பிடத்தக்கது. குழந்தை பிறந்ததும் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்து கபிலன் வைரமுத்து எழுதிய நாவலை 2012-ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலசந்தர் வெளியிட்டார். மெய்நிகரி என்ற நாவலை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். கபிலன் வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதியான அம்பறாத்தூணி என்ற நூலை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். தற்போது இயக்குநர் பாரதிராஜா கபிலன் வைரமுத்துவின் நான்காவது நாவலை வெளியிட்டிருக்கிறார். தமிழ்த் திரையுலகின் ஆகச் சிறந்த இயக்குநர்களின் கரங்களால் தன் படைப்புகள் வெளி வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக கபிலன் வைரமுத்து நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.

 

 

Next Story

'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்'-பவதாரிணி மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'How can I console my friend' - Bharathiraja's condolence on Bhavatharini's passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் குறிப்பில், 'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
bharathiraja about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.