Skip to main content

தேர் என்று அழைக்கப்பட்ட வாகனம் !

Published on 22/02/2019 | Edited on 22/02/2019

மனித நாகரிகமும் பண்பாடும் ஆற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்தன என வரலாறுகள் கூறுகின்றன. ஆதிமனிதன் முதலிலில் உணவைத்தேடி ஓரிடம் விட்டு ஓரிடம் நகரத் தொடங்கினான். அச்செயல் தனக்கான உணவைத் தேடல், பிறகு தன் குழுவுக்கான உணவைத் தேடல் என விரிவடைந்தது. இவ்வுணவை நடந்தே சென்று தன் தலையிலும் இடுப்பிலும் சுமந்துவந்தான். பிறகு அருகில் தனது கட்டுப்பாட்டிலிருந்த விலங்குகளைப் போக்குவரத்திற்காகவும், வாணிபத்திற்காகவும் பயன்படுத்தினான்.நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் உணவுத்தேடலுடன் தன் அறிவால், புதிய தேடலால் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்தான். அதன்பின் அதன் பயன்பாட்டையும் கண்டெடுத்தான் பிறகு இடம் விட்டு இடம் நகர்ந்தும், அதன் தொடர்ச்சியாக கடலிலில் பயணித்தும் தன் தேவையை நிவர்த்தி செய்து கொண்டான். பிறகு ஒவ்வொரு துறையிலும் ஆளுமையை ஆழப்பதிக்கத் தொடங்கினான்.இடம்விட்டு இடம் நகரத் தொடங்கியவன் ஊரையும், உறவையும் கண்டான். அன்பினால் மனிதனை வென்றான். விலங்கினங்களை வென்றான். தனது உற்பத்தியை மற்றொரு இடத்திற்கு நகர்த்தினான்.
 

veichle

நகர்ந்துசென்ற இடத்திலிலிருந்து தனக்கான பொருள்களைத் தன் இருப்பிடத்திற்குக் கொண்டு வந்தான். ஓரிடம் விட்டு ஓரிடம் நகர்ந்து செல்வதற்கும், வாணிபத்திற்கும் ஆதியில் அவன் பயன்படுத்திய ஊர்திகள் சுற்றுச்சூழலோடு ஒத்திசைந்து இருந்தன. தனக்கும் தான் சார்ந்த இயற்கைச் சூழலுக்கும் எந்தவித இடையூறுமின்றி மிக நுட்பமான தன்மையுடையதாய் அது விளங்கியது.அந்த ஊர்திகளால் இரைச்சல் இல்லை, கரியமில வாய்வு இல்லை, மனிதன் சுவாசத்திற்கு எவ்வித சிக்கலுமில்லை. அவன் கட்டமைப்பு அவனுக்கு மட்டுமல்ல அவன் எதிரிக்கும் நன்மை பயத்தது. இன்று வளர்ச்சி என்று சொல்லிலி இயற்கையை சிதைத்து வருகின்றோம். இதனால் அண்டப்பெருவளி தூய்மையற்றதாய் மாறிவருகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே தோன்றிய தமிழ்க்குடி மக்கள் தரைவழிப் பயன்பாட்டிற்கு ஊர்தியையும், கடல் வழிப் பயன்பாட்டிற்கு கலனையும் பன்படுத்திய விதம் மிகச்சிறப்புடையது.போக்குவரத்துப் பயன்பாட்டில் குதிரைமிக விரைவான போக்குவரத்து ஊர்திகள் இன்று உள்ளது போல் அன்று இல்லை. குதிரை, அத்திரி, எருது, கழுதை, போன்றவை தரைவழி போக்குவரத்திற்கும் தரைவழி வாணிபத்திற்கும் பயன்பட்டன.பொதி சுமக்கவும் வண்டியிழுக்கவும் எருதுகள் பயன்பட்டன. குதிரைகள் சிந்து, பாரசீகம், அரபியா போன்ற நாடுகளிலிலிருந்து கலன்கள் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டன. குதிரை போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டதுடன், போக்குவரத்திற்கு குதிரைகளையும் குதிரைவண்டிகளையும் அரசர்களும், செல்வந்தர்களும் பயன்படுத்தினர்.குதிரை வண்டிகள் தேர் என்று அழைக்கப்பட்டன

அத்திரி
கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர். இவை வெளிநாடுகளிலிலிருந்து கொண்டுவரப்பட்டன. அன்று சமூகத்தில் செல்வ நம்பிகளாக இருந்தவர்கள் கோவேறு கழுதைகளை ஊர்தியாகப் பயன்படுத்தினர். அத்திரிக்கு இராச ஊர்தி என்று பெயர் வழங்கப்பட்டது.கடற்கழி வழியாக அத்திரி ஊர்ந்து வரும் வழக்கம் இருந்தது என்ற செய்தியை,

கழிச்சேறு ஆடிய கணைக் கால் அத்திரி
குளம்பிலும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண்மணலே
(நற்றிணை 278-7-9)

kuthirai vaganam

என்கிறது. இப்பாடல் உணர்த்தும் பொருள் என்னவெனில் தலைவன் கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரிலே ஏறி வந்தான். அத்தேரின் சக்கரங்களின் கடற்கரையில் உள்ள சேறுபட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதைகளின் குளம்புகளில் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன என்று பொருள் உணர்த்துகிறது. இப்பாடல் வழி கடற்கரைக்கு கோவேறு கழுதை பூட்டிய தேரில் பயணிக்கும் வழக்கம் இருந்ததை அறிந்துகொள்ள முடிகிறது.

அகவரும் பாண்டியும், அத்திரியும், ஆய்மாச்
சகடமும், தண்டு ஆர; சிவிகையும் பண்ணி
வகைவகை ஊழ் ஊழ் கதழ்வு மூழ்ந்து (பரி 10-16-17)

அத்திரி, காளைப்பூட்டி வண்டி, அழகிய பல்லக்கு என இவற்றையெல்லாம் அழகுபடுத்தி, கூடிநின்று அவரவருக்கு உரியவற்றின் மேல் ஏறினர் என்கிறது இவ்வடிகள். இதன்மூலம் போக்குவரத்திற்கு அத்திரியுடன் காளைபூட்டிய வண்டியும் அழகிய பல்லக்கும் பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது. சிலம்பில் கடலாடு காதையில் கோவலன் கடலாடுதற்கு கடற்கரைக்குச் சென்ற போது அவன் அத்திரி ஊர்ந்து சென்றான்  என்று கூறுகின்றது.அரும்பத உரையாசிரியர் அத்திரிக்கு இராசவாகனமாகிய அத்திரி என்று உரை வகுத்துள்ளார். அடியார்க்கு நல்லாரோ அத்திரி, கோவேறு கழுதை. அது குதிரையில் ஒரு சாதி என்று குறிப்பிடுகின்றார்.ஆதித்தமிழர்கள் போக்குவரத்திற்கு குதிரை யையும், காளை பூட்டிய வண்டியையும்,அத்திரிகளையும் பல்லக்கையும் பயன்படுத்தி உள்ளனர்.