திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா வருடந்தோறும் மாசி மாதம் நடப்பது வழக்கம். அது போல் இந்த வருடம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின்போது வருடந்தோறும் தரணி குழும நிறுவனத்தின் தலைவரான பிரபல தொழில் அதிபர் ரத்தனம் சார்பில் கோட்டை மாரியம்மன் வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்திலும் கலையரங்க வளாகத்திலும் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் வழங்கி இரவு கலைநிகழ்ச்சி நடத்துவதும் வழக்கம். அதுபோல் இந்த வருடம் வழக்கத்திற்கு அதிகமாக ஏழாயிரம் பேருக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த அன்னதானத்தை தொழில் அதிபர் ரத்தனம் துவக்கி வைத்தார். அதைத் தொடர்ந்து ரத்தனத்தின் மகன்களான ஜி.டி.என்.கலைக் கல்லூரியின் நிர்வாக இயக்குநர் துரை மற்றும் திண்டுக்கல் மாநகர 17ஆவது வார்டு கவுன்சிலரும், வக்கீலுமான வெங்கடேஷ் ஆகியோர் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு உணவு வழங்கினர். அதைத் தொடர்ந்து இரவு நடிகர் ரோபோ சங்கர், திரைப்பட இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, தேவகோட்டை அபிராமி, நடிகர் புகழ் ஆகியோரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.