தாந்தோன்றிமலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமராவதி ஆற்றிலிருந்து கரகம் மற்றும் கம்பம் போடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை கிராமத்துக்கு உட்பட்ட மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் 15 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொற்று காரணமாக ஆலய திறக்கப்படாமல் திருவிழா நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் விதிமுறைகள் படி திருவிழா நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஆலய மண்டபத்தில் கணபதி ஹோமத்துடன் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்று (28.03.2022) அதிகாலை கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அமராவதி ஆற்றங்கரையில் இருந்து கரகம் மற்றும் கம்பம் மற்றும் வேல் உள்ளிட்ட பொருட்களுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கரகம் மற்றும் கம்பத்திற்கு வண்ண மாலைகள் அணிவித்து மேளதாளங்கள் முழங்கு ஆட்டம் பாட்டம், வான வேடிக்கையுடன் அமராவதி ஆற்றிலிருந்து புறப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் கம்பம் மற்றும் கரகம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.
அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 01.30 மணி அளவில் அமராவதி ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக வந்த கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கும், கோவில் பூசாரி, கோவில் கொத்துக்காரர் உள்ளிட்ட நபர்களுக்குக் காப்புக் கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.